பிரிட்டன் – ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகியதற்கு (பிரெக்ஸிட்) பிந்தைய இருதரப்பு உறவு குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்துக்கு, ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரெக்ஸிட்டுக்குப் பிறகு பிரிட்டனுடன் மேற்கொள்ளப்படவிருக்கும் வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவு குறித்து அந்த நாட்டுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸிலுள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

அந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 660 எம்.பி.க்கள் வாக்களித்தனர். ஒப்பந்தத்தை எதிர்த்து 5 பேர் வாக்களித்திருந்தனர். 32 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் மிகப் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரெக்ஸிட் தொடர்பாக பிரிட்டனில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனிலிருந்து அந்த நாடு விலகுவதற்கு பெரும்பான்மையானவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய இருதரப்பு உறவு குறித்து பிரிட்டனுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே பல முறை திருத்தி மேற்கொள்ளப்பட்ட வரைவு ஒப்பந்தங்களை பிரிட்டன் நாடாளுமன்றம் பல முறை நிராகரித்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார். அவரின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் 2020 ஜனவரி மாதம் 31-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக விலகியது.

எனினும், அந்த அமைப்பிலிருந்து முழுமையாக விலக பிரிட்டனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்குள் பிரிட்டனுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான சிறப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்ற அனுமதி கிடைக்க வேண்டியிருந்த சூழலில், டிசம்பர் 30-ஆம் தேதி கூடிய அந்த நாடாளுமன்றம் 521:73 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கியது.
தற்போது ஐரோப்பிய நாடாளுமன்ற ஒப்புதலையும் பெற்றதைத் தொடர்ந்து, பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஐரோப்பிய யூனியன் – பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது.