ஐ.நா.சமூக-பொருளாதார கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு

ஐ.நா. சமூக-பொருளாதார கவுன்சிலின் உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் 6 முக்கிய அமைப்புகளில் சமூக-பொருளாதார கவுன்சிலும் ஒன்றாக உள்ளது. சமூக-பொருளாதாரம், சுற்றுச் சூழல் ஆகிய விவகாரங்களில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.
சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளையும் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. ஐ.நா. சார்பில் நடைபெறும் மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதையும் கவுன்சில் கண்காணிக்கும்.

ஐ.நா. சமூக-பொருளாதார கவுன்சிலில் 54 நாடுகள் உறுப்பினர்களாக இடம்பெற முடியும். பிராந்திய ரீதியாக நாடுகள் 3 ஆண்டு காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும்.

ஆசிய கண்டத்தில் இருந்து 11 நாடுகளும், ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து 14 நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் இருந்து 6 நாடுகளும், தென் அமெரிக்க கண்டத்திலிருந்து 10 நாடுகளும், மற்ற பகுதிகளில் இருந்து 13 நாடுகளும் கவுன்சிலின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும்.

ஐ.நா. சமூக-பொருளாதார கவுன்சிலுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில், ஆசிய கண்டத்தில் இருந்து இந்தியா, ஆப்கானிஸ்தான், ஓமன், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்நாடுகள் 2022-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை கவுன்சிலின் உறுப்பினர்களாகச் செயல்படவுள்ளன.

ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து துனிசியா, மோரீஷஸ், எஸ்வதினி, தான்சானியா உள்ளிட்ட நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய பகுதியில் இருந்து குரோஷியா, செக் குடியரசு ஆகிய நாடுகளும், தென் அமெரிக்க கண்டத்தில் இருந்து சிலி, பெரு உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா. சமூக-பொருளாதார கவுன்சில் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. அதன் தலைமைப் பொறுப்பை வரும் ஆகஸ்ட் மாதம் 2021-இல் இந்தியா ஏற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.