உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமானது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியை ஆர்வலர்கள் தொடர்புகொள்ளலாம்.

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2019-ம் ஆண்டு முதல் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பும் பணி நடைபெறவில்லை. அதன் பிறகு பல்வேறு முயற்சிகளின் காரணமாக அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்துதான் தமிழகத்தில் உள்ள அரசு கலை – அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும், ஆகஸ்ட் 4-ஆம் நாள் போட்டித் தேர்வுகள் நடைபெறும் என்றும் டிஆர்பி அறிவித்திருந்தது.

இந்நிலையில் விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதாவது கால அவகாசம் வரும் மே 15 -ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

டிஆர்பியின் அறிவிப்பால் இந்தத் தேர்வுக்காகக் காத்திருந்த ஆர்வலர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிவதற்கு முதுநிலை பட்டப் படிப்புடன் நெட் / செட் அல்லது பிஎச்டி முடித்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில்தான் தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது செட் தேர்வு வரும் ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத இருப்பவர்களையும் உதவி பேராசிரியர் பணித் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று டிஆர்பி-க்கு பட்டதாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதையேற்று செட் தேர்வுக்கு எழுத உள்ளவர்களும் உதவி பேராசிரியர் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் ஜூன் மாதம் நடைபெறவுள்ள செட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உதவி பேராசிரியர் பணித் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்பது முக்கியம். இதற்காக டிஆர்பி இணையதளத்தில் ( www.trb.tn.gov.in) பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசமும் வரும் மே 15-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் இப்போதிருந்தே விண்ணப்பம் செய்வதற்கான பணியில் இறங்கியுள்ளனர்.

இதனிடையே கால அவகாச வாய்ப்பை பட்டதாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆர்வலகளுக்கு டிஆர்பி கோரிக்கை விடுத்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு https://www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியை ஆர்வலர்கள் தொடர்புகொள்ளலாம்.