2023ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்ட அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
2023 பிப்ரவரி மாதம் குரூப்-2 முதன்மைத் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் குரூப் 4 தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
தற்போது நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு உள்ள நிலையில் அதுசார்ந்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றத் தேவைப்படும் ஊழியர்கள் முதல் உயர் அலுவலர்கள் வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ப, போட்டித் தேர்வுகள், நேர்காணல் ஆகியவற்றை நடத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அரசுப் பணிகளுக்கு ஆட்சேர்ப்பை நடத்துகிறது.
ஒவ்வோர் ஆண்டும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு வைத்து பணியாளர்களை நியமித்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் எழுதி வருகிறார்கள். சில நூறு காலியான இடங்களுக்கு லட்சக்கணக்கில் தேர்வர்கள் தேர்வு எழுதி, அதில் சிறந்த மதிப்பெண்கள் பெறுபவர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தின் புதிய பணி நியமனங்கள் பற்றிய விவரம் முன்கூட்டியே திட்ட அறிக்கையாக வெளியிடப்படும். அதன்படி 2023ஆம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள், போட்டித் தேர்வுகளின் உத்தேச தேதி குறித்த திட்ட அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின்படி எந்த தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதை விண்ணப்பதாரர்கள் தெரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ளலாம்.
குரூப் 4 தேர்வு எப்போது?
2023ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தொடர்பான அறிவிப்பாணை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு காலிப் பணியிடங்கள் உள்ளது என்பதற்கான விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் எப்போதும் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு உள்ள நிலையில் அது சார்ந்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கன தேர்வுஅறிவிப்பு வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காலிபணியிடங்கள் 828 ஆக இருக்கும். அதற்கான தேர்வு மே மாதம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சாலை ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பும் ஜனவரி மாதம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.