கோவையில் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர் அறிவிப்பு

கோவையில் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர் அறிவிப்பு

பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்தோருக்கு 2023ம் ஆண்டு மகளிர் தின விழா அன்று அவ்வையார் விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், விண்ணப்பதாரர், தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து இருத்தல் அவசியம்.

அரசு அலுவலர்கள் இந்த விருதுக்கு தகுதியானவர் இல்லை. விண்ணப்பிக்கும்போது, பொருளடக்கம் மற்றும் பக்க எண், தேசிய மற்றும் உலகளாவிய விருதுகள் பெற்றிருப்பின் அதன் விவரம், சேவை பற்றிய செயல்முறை விளக்கம், சேவையைப் பாராட்டி பத்திரிகை செய்திகள் தொகுப்பு, தொண்டு நிறுவனத்தின் பதிவு, உரிமம், ஆண்டறிக்கை, அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதுமில்லை என்பதற்கு சான்று வேண்டும்.

மேலும், இவற்றுடன் தகுதி வாய்ந்த பெண்கள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கோவை என்ற முகவரிக்கு, அனைத்து சான்று விவரங்களுடன் டிசம்பர் 9ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

விருதுக்கான விண்ணப்ப விவரங்கள், தமிழக அரசின் விருதுகள் இணையமான https://awards.tn.gov.in இல் பதிவு செய்யப்பட்டுள்ளது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.