சீனத்தில் உய்கூர் (Uighur) முஸ்லீம்கள்

சீனத்தில் உய்கூர் (Uighur) முஸ்லீம்கள்

– வீ.வீ.கே. சுப்புராஜ்

சீனாவில் ஜின்ஜியாங் (Xinjiang) பகுதியில் வாழும் உய்கூர் முஸ்லீம்கள் சுமார் 10 லட்சம் பேர் போலீஸ் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சி தரும் விஷயம். உய்கூர் முஸ்லீம்களின் நாகரிகம் துருக்கி மற்றும் மத்திய ஆசிய நாகரீகத்தை ஒத்தது. சீன நாகரிகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த இஸ்லாமியர்கள் வாழும் பகுதி தன்னாட்சி பெற்ற சீனாவின் பெரிய பகுதி. இந்தப்பகுதி எட்டு நாடுகளுடன் எல்லைகளைத் தொடுகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யாவும் அடக்கம். உய்கூர் ஒரு செழிப்பான, வளமான பிரதேசமாக மாறியுள்ளனர். மத்தியநிலப்பகுதி சீனாவிலிருந்து அநேகம் பேர் இங்கே குடியேறியுள்ளனர். இன்றும் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் உய்கூர் முஸ்லீம்கள் தங்களுடைய தனித்துவமும், மதமும் சிறிது சிறிதாக அழிந்துவிடுமோ என அச்சம் கொள்கின்றனர். இதனால் அங்கே கலவரங்கள் அவ்வப்போது ஏற்படுகின்றன. அவை கடுமையாக அடக்கப்படுகின்றன.

அடிக்கடி அங்கே நிகழ்ந்தேறும் குண்டு வெடிப்புகளையும், தற்கொலைப்படைத் தாக்குதல்களாலும் அதிக அளவில் உயிர்சேதம் ஏற்படுகிறது. பழக்க வழக்கங்களாலும், நடைமுறை பாவனைகளாலும், இஸ்லாமியர்கள் என அவர்கள் இனம் காணப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இந்த மாதிரியான முகாம்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்பதை செயற்கை கோள்கள் மூலம் அறியப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு 180 முகாம்களாக இருந்த எண்ணிக்கை 1200 ஆக 2018-இல் உயர்ந்துள்ளது. சீன நாட்டின் மொத்த தொகையில் 7 சதவீத மக்கள், இன்னும் சொல்லப்போனால் 11 சதவீத இளைய சமுதாயத்தினர் இங்கே அடைபட்டுக்கிடக்கின்றனர். இந்த முகாம்களில் உள்ள மக்கள் கடுமையான மனிதத்தன்மையற்ற, இரக்கமற்ற தண்டனைக்குள்ளாக்கப்படுகின்றனர். ஆனால் சீனா இதை எல்லாம் மறுத்துள்ளது. எனினும் மனித உரிமை மீறல்கள் இங்கே கடுமையாக நடைபெறுகிறது என்பது உண்மை.