பருவநிலை மாற்ற மாநாடு – Climate Change Conference

பருவநிலை மாற்ற மாநாடு –  Climate Change Conference

– வீ.வீ.கே. சுப்புராஜ்

COP25 என்று அறியப்படுகிற சர்வதேச காலநிலை மாற்ற மாநாடு ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் (Madrid)டில் டிசம்பர் 2, 2019 அன்று தொடங்கியது. முந்தைய மாநாடுகளில் தீர்மாணிக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையானால், உலகம் தொழில் மயமாவதற்கு முன்பிருந்த வெப்ப நிலையிலிருந்து 2°C  க்கு மேற்படாமல் புவி வெப்பநிலையைக் காப்பாற்றுவது இயலாத காரியம்.

மேட்ரிட் மாநாட்டின் நோக்கம் இது இல்லையென்றாலும், 2015-இல் பாரிஸ் ஒப்பந்தத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான சட்ட திட்டங்களை வகுப்பதும் அவைகளை 2020 முதல் நடைமுறைப்படுத்துவதுமே முக்கிய நோக்கமாகும்.

பாரிஸ் உடன்படிக்கையின்படி, புவி வெப்பமயமாதலை 1.5ஸ் ஊ க்குள் வைக்க வேண்டுமென்பதே ஒரு கனவாகி வருகிறது என ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு தன்னுடைய சமீபத்திய ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது. இதை அடையவேண்டுமானால், 2030-இல் தொழிற்சாலைகள் வெளியேற்றும் பசுமை வாயுக்களின் அளவு 25 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் இந்த அளவு 56 மில்லியன் டன்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு மடங்கை விட அதிகமாகும்.

பாரிஸ் உடன்படிக்கையின்படி, நிர்ணயித்த இலக்கை அடைய வேண்டுமானால் பசுமைவாயுக்கள் வெளியேற்றத்தை ஒவ்வொரு ஆண்டும் 7.5 சதவீதம் குறைக்க வேண்டும். அப்பொழுதுதான் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 2030-இல் அடைய முடியும். சில நாடுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டாலொழிய, இந்த இலக்கை அடைய முடியாது.

சர்வதேச வானிலை ஆய்வு மையம் (WMO–World Meteorological Organisation) அளித்த அறிக்கையின்படி, 2018-இல், பசுமை வாயுக்களின் அளவும், கரியமில வாயுவின் அளவும்  மிகவும் அதிகரித்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது 407.8 PPM என்ற அளவை எட்டியுள்ளது. இது 405.5 PPM என்ற அளிவில்தான் 2017-இல் இருந்தது. இது 1750-ஆம் ஆண்டின் நிலைமையை ஒப்பிடும் போது 147 சதவீதம் அதிகமாகும். மீத்தேனின் அடர்த்தி 259 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல் நைட்ரஸ் ஆக்சைடின் அளவும் 123 சதவீதம் அதிகரித்துள்ளது. மே 18, 2019 அன்று கரியமில வாயுவின் அடர்த்தி 415 PPM அளவை எட்டி சாதனை படைத்துள்ளது. பசுமை வாயுக்களை குறைவாக வெளியேற்றும் நாடுகளுக்கு கார்பன் வரவு (Carbon Credit) அலகுகள் கொடுக்கப்படும். அவைகளை பசுமை வாயுக்கள் அதிகம் வெளியேற்றும் நாடுகள் அதிகப் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டும். அதிக விலைக்கு ஏலம் எடுப்போருக்கு இவைகள் வழங்கப்படும். இவைகள் ஓரளவு கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும்.

இதேபோல ஒரு சந்தை 1997 கியாட்டோ நெறிமுறை (Kyoto Protocol) களில் இடம் பெற்றிருந்தது. இந்த நெறிமுறைகள் அடுத்த ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் போது முடிவடையும். அநேக நாடுகள் கியாட்டோ நெறிமுறைகளிலிருந்து வெளியேறிவிட்டதால் இந்த கார்பன் கிரெடிட் முறையை சரிவர நடைமுறைப்படுத்தப்பட முடியவில்லை. எனவே இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் வைத்திருந்த கார்பன் கிரெடிட்கள் வீணாகிப் போய்விட்டன.

சேர்த்து வைக்கப்பட்டுள்ள இந்த கார்பன் கிரெடிட்களுக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டுமென்ற பிரேசிலின் வற்புறுத்தலை இந்தியாவும் ஆதரிக்கிறது. ஆனால் வளர்ந்த நாடுகள் இதை உதாசீனம் செய்கின்றன. இதற்கு ஒரு தீர்வு காண்பதில் மேட்ரிட் மாநாடு வெற்றி பெறுமா? என்பது கேள்விக்குறியே. வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகளை விட அதிக அளவில் பசுமை வாயுக்களை வெளியேற்றுகின்றன என்பது உண்மை. வளர்ந்துவரும் நாடுகள் இந்த விஷயத்தில் எப்படி நஷ்ட பிரகாரம் பெறப்போகின்றன என்பதும் பெரிய விவாதத்திற்குறியதே. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் என்ன செய்யப் போகின்றன என்பதும் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் இவைகளை நோக்கி எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள் நல்ல மாற்றங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை 71 சிறிய நாடுகள் பெரும்பாலும், 2050-க்குள் பசுமை வாயுக்கள் வெளியிடுவதில் தங்கள் நாட்டில் பூஜ்ஜியம் அளவை எட்டிவிடுவோம் என்று சூளுரைத்துள்ளன. மேலும் பல நாடுகள் இந்தப்பட்டியலில் சேரலாம். ஆனால் சீனாவும் இந்தியாவும் என்ன செய்யப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதிகமாக கேடுவிளைவிக்கும் வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் சிறிய நாடுகளுக்கு அதிக அளவில் பொருளுதவியையும், புதுப்புது தொழில்நுட்பங்களையும் அளித்து அவைகளைக் கை தூக்கிவிட்டால்தான், புவியில் மனிதன் உயிர்வாழமுடியும்.