15-ஆவது நிதிக் குழு அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு

என்.கே.சிங் தலைமையிலான பதினைந்தாவது நிதிக் குழு, 2021-22 முதல் 2025-26 வரையிலான தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நவம்பர் 9, 2020 அன்று சமர்ப்பித்தது.

உறுப்பினர்கள் : அஜய் நாராயண் ஜா, பேராசிரியர் அனூப் சிங், டாக்டர் அசோக் லாஹிரி, டாக்டர் ரமேஷ் சந்த், ஆணையத்தின் செயலாளர் அர்விந்த் மேத்தா.

நிதி சார்ந்த பரிந்துரைகள் அடங்கிய இந்த அறிக்கையை நிதிக் குழு கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி இறுதி செய்து குடியரசுத்தலைவரிடம் வழங்குவதற்கு ஆணையம் அனுமதி கோரியது. இதன்படி நவம்பர் 9-ஆம் தேதி அறிக்கையை சமர்ப்பிக்க குடியரசுத்தலைவர் மாளிகை அனுமதி அளித்திருந்தது. இதன்படி இந்த அறிக்கையை என்.கே.சிங் தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரிடம் நவம்பர் 9, 2020 தேதி சமர்ப்பித்தனர்.

2020-21-ஆம் ஆண்டுக்கான நிதி சார்ந்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஆணையம் கடந்தாண்டு தனியாக சமர்ப்பித்தது. இது மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடந்த ஜனவரி 30-இல் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஓர் ஆண்டுக்கு தமிழகத்தின் பங்காக ரூ. 35,823 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. மத்திய, மாநில அரசுகள், மாநகராட்சி முதல் ஊராட்சி வரையிலான உள்ளாட்சி அமைப்புகள், நிதிக் குழுவின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய – மாநில அரசுகள் இடையிலான நிதிப் பகிர்வை வரையறை செய்வதே நிதிக் குழுவின் முக்கியப் பணியாகும்.

இந்த அறிக்கை மொத்தம் நான்கு பாகங்களைப் கொண்டது. முதல் இரண்டு பாகங்களில் முக்கியப் பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. மூன்றாவது, நான்காவது பாகங்களில் முறையே மத்திய, மாநில அரசுகளின் முக்கியத் துறைகள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் வீழ்ச்சிகள், சவால்கள் போன்றவை தொகுப்பாய்வு செய்து வழங்கப்பட்டுள்ளதாக நிதிக் குழு தெரிவித்துள்ளது. நிதிக் குழு அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அறிவிப்பார்.