புதிய வளர்ச்சி வங்கி உறுப்பினர்கள் விரிவாக்கம்

பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் புதிய வளர்ச்சி வங்கியின் (என்டிபி) உறுப்பினர்கள் விரிவாக்கத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: பிரிக்ஸ் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் பங்கேற்ற கூட்டம் காணொலி வழியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் நிகழாண்டு சவூதி அரேபியா தலைமையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் பலன்கள், உள்கட்டமைப்புக்கான முதலீடுகளை ஊக்குவிக்க டிஜிட்டல் தளத்தை உருவாக்குதல், பிரிக்ஸ் கூட்டமைப்பு அமைத்துள்ள என்டிபியில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்டிபியில் வேறு பிராந்தியங்களை சேர்ந்த நாடுகளையும் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு ஆதரவு தெரிவித்தார். பிராந்திய சமநிலை கருதி அதற்கு அவர் விருப்பம் தெரிவித்தார். கரோனா தொற்றை எதிர்கொள்ள ‘ஜி20 திட்ட நடவடிக்கை உள்பட குறிப்பிடத்தக்க திட்டங்களை ஜி20 மாநாடு அறிவித்ததை சுட்டிக்காட்டிய அவர், வளர்ந்து வரும் நாடுகளின் நலன் சார்ந்த விஷயங்கள் அந்த திட்டங்களில் இடம்பெற்றதை உறுதி செய்வதில் பிரிக்ஸ் கூட்டமைப்பு முக்கிய பங்கு வகித்ததாக குறிப்பிட்டார்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வரிவிதிப்பது தொடர்பான விவகாரத்தில் தீர்வு காண சர்வதேச அளவில் ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், வரி விதிப்பு முறை நியாயமாக இருப்பதில் ஒருமித்த தீர்வு முக்கிய பங்கு வகிக்கும் எனவும் அவர் தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.