கொடுமணல் அகழாய்வில் முதல் முறையாக தமிழ் நெடில் எழுத்துக்கள்

தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் முதல்முறையாக கொடுமணலில் ஆ, ஈ போன்ற நெடில் எழுத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய தொல்லியல் துறை நவம்பர் 4, 2020 அன்று தெரிவித்தது.
மத்திய தொல்லியல் துறை தரப்பு சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டப் பொருள்களை கார்பன் டேட்டிங்’ சோதனைக்கு உள்படுத்தியபோது, அந்தப் பொருள்கள் கி.மு. 696 முதல் கி.மு. 540 வரை மற்றும் கி.மு. 806 முதல் கி.மு. 906 வரையிலான ஆண்டுகளுக்கு உள்பட்டது எனத் தெரிகிறது. ஆதிச்சநல்லூர், புலிகட்டு, மலையடிப்பட்டி மற்றும் கீழடியில் நடைபெற்ற அகழாய்வுகளுக்கான அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்த அறிக்கைகள் வெளியிடப்படும். ஈரோடு மாவட்டம் கொடுமணல் பகுதியில் நடந்த அகழாய்வில் எடுக்கப்பட்ட 10 பொருள்கள்கார்பன் டேட்டிங்’ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.


கொடுமணல் அகழாய்வில் 96 பொருள்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 356 தமிழ் பிராமி எழுத்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளில் தமிழ் நெடில் எழுத்துகள் கிடைக்கப்பெற்றது இல்லை. ஆனால் கொடுமணல் அகழாய்வில் முதல்முறையாக ஆ, ஈ போன்ற நெடில் எழுத்துகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இதுவரை 11 ஆயிரம் கல்வெட்டு படிமங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதில் பல கல்வெட்டுகள் 15 அடி உயரத்துக்கும் மேல் இருப்பதால் அவற்றை படிமம் செய்வதில் சிரமம் உள்ளது. அதற்கான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட புராதானப் பகுதிகளாக 92 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது புதிதாக 54 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று கூறினார்.