அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் மார்ச் 25 முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
2023 – 2024ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வரும் 25ம் தேதி முதல் தொடங்கும். அந்தந்த பள்ளி ஆசிரியர்களை கொண்டு முதன்மைக் கல்வி அலுவலர் மேற்பார்வையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தவுடன் தொடங்கும் பயிற்சி மே 2ம் தேதி வரையில் தொடரும். வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மணிக்கு தொடங்கி மாலை 4.30 வரை நீட் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும்.
ஒரு கல்வி மாவட்டத்திற்கு அதிகபட்சம் இரண்டு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்சம் 40 மாணவர்கள் ஒரு பயிற்சி மையத்தில் இடம் பெற வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் பயிற்சியும் தேர்வுகளும் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யப்பட வேண்டும். நவம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வரும் பயிற்சியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நீட் பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, தேநீர் உள்ளிட்டவை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.