விண்வெளி சவால்களை எதிர்கொள்ள தேவை – மிஷன் சக்தி

விண்வெளி சவால்களை எதிர்கொள்ள தேவை – மிஷன் சக்தி

விண்வெளி சவால்களை எதிர்கொள்ள தேவை – மிஷன் சக்தி

இந்தியா உலகின் 7-ஆவது மிகப்பெரிய நாடாகும். மக்கள்தொகையில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக விண்வெளி தொழில்நுட்பத்தை இந்தியா மேம்படுத்தி வருகிறது. அறிவியல் ஆராய்ச்சி, கண்காணிப்பு எனப் பல்வேறு பயன்பாடுகளுக்காக விண்வெளி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவை நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றிற்கு முதுகெலும்பாக உள்ளன. இந்தியா ஒட்டுமொத்த பாதுகாப்பையும் உறுதிசெய்து கொள்ளவும், எதிரி நாடுகளின் தாக்குதலை சமாளிக்கவும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பெருகி வரும் தொழில்நுட்பங்களால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு இந்தியாவிற்கு ஏவுகனைகளின் அவசியம் கட்டாயம் தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை ஏற்கனவே கண்டுபிடித்து சோதனை நடத்தி வெற்றிபெற்றுள்ளது. அதன்மூலம் ஏவுகணைத் தயாரிப்பில் வல்லமை கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியாவும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்திருந்தது. அக்னி, அஸ்திரா, ஆகாஷ், தனுஷ், நிர்பை, பிரமோஸ், பிரித்வி எனப் பல்வேறு ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வெற்றிபெற்றதின்மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தது மட்டுமல்லாமல் உலக நாடுகளின் வரிசையில் அமெரிக்கா ரஷியா, சீனாவிற்கு அடுத்தப்படியாக உள்ளது. அந்த வரிசையில் இந்தியா விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் எ-சாட் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக 2019 மார்ச் 27 அன்று நடத்தியது.

மிஷன் சக்தி

’மிஷன் சக்தி திட்டமானது ஒடிசா மாநிலம், அப்துல் கலாம் தீவிலிருந்து 2019 மார்ச் 27 அன்று மேற்கொள்ளப்பட்ட செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை (எ-சாட்) சோதனையாகும். சோதனையின்போது புவியிலிருந்து 300 கி.மீ தொலைவிலுள்ள செயற்கைக்கோள் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டது. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பது போற்றுதற்குரிய சிறப்பாகும்.

செயற்கைக் கோளைத் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பம்

விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை, கடந்த 1959-ஆம் ஆண்டில் முதன்முறையாக பரிசோதித்தது அமெரிக்கா. இதே போன்ற சோதனையை, கடந்த 1964-ஆம் ஆண்டில் அப்போதைய சோவியத் யூனியன் மேற்கொண்டது. 1985-ஆம் ஆண்டில் பனிப்போர் காலக்கட்டத்தில், தனது விண்வெளி தொழில்நுட்பங்களை அமெரிக்கா தீவிரமாக மேம்படுத்தியது. அப்போது மீண்டும் செயற்கைக்கோள் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பரிசோதித்த அமெரிக்கா, தன்னுடைய பி-781 செயற்கைக்கோளை அழித்தது. அண்டை நாடான சீனா, கடந்த

2007-ஆம் ஆண்டில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை பரிசோதித்தது. அதன்படி, பூமியிலிருந்து 865 கி.மீ தொலைவிலிருந்த தனது செயற்கைக்கோள் ஒன்றைத் தாக்கி அழித்தது. கடைசியாக, கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய வகையிலான ஏவுகணையின் மூலம் செயற்கைக் கோள் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை ரஷியா பரிசோதித்தது. மிக்-31 ரக போர் விமானத்திலிருந்து இச்சோதனை நடத்தப்பட்டது. மேற்கண்ட மூன்று நாடுகளையும் பொருத்தவரை, தரையிலிருந்து மட்டுமின்றி போர்க்கப்பல், போர் விமானங்களில் இருந்தும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை செலுத்தும் வல்லமையை கொண்டுள்ளன. தற்போதைய நிலையில், தரையிலிருந்து செலுத்தக் கூடிய திறன் இந்தியாவிடம் உள்ளது.

பயன்பாடுகள்

போர்க்காலங்களில் எதிரி நாட்டின் தொலைத்தொடர்பு அல்லது ராணுவ செயற்கைக்கோள்களை வீழ்த்துவதற்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும். இதன் மூலம் எதிரி நாட்டின் ராணுவ வீரர்களுக்கு இடையேயான தொடர்பு துண்டிக்கப்படுவதால், அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்த முடியும். மேலும் எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களிலிருந்து முக்கியமான தகவல்களையும் சேகரிக்க முடியும். அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள், தங்களுடைய செயலிழந்த செயற்கைக்கோள்களை மட்டுமே இதுவரை சுட்டு வீழ்த்தியுள்ளன. தங்களது ராணுவ வல்லமையை காட்டுவதற்காக இத்தகைய சோதனைகளை நடத்தியுள்ளன. வேறு நாட்டுடனான போரின்போது, இந்த தொழில்நுட்பத்தை அவை பயன்படுத்தியதில்லை.

விண்வெளி பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம்

விண்வெளி பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. விண்வெளியில் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதத்தை பயன்படுத்தக்கூடாது என்ற கடந்த 1967-ஆம் ஆண்டில் சர்வதேச உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதே சமயம், தற்போது மேற்கொள்ளப்பட்ட சோதனை, எந்த சர்வதேச சட்டங்களையும் மீறவில்லை என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இது எந்த நாட்டுக்கும் எதிரான சோதனை அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடத்தப்பட்டுள்ள சோதனை, விண்வெளியில் ஆயுதப்போட்டியில் ஈடுபடுவதற்கான முன்னோட்டமில்லை என்று இந்தியா உறுதிபட தெரிவித்துள்ளது.

’எசாட் ஏவுகணை முயற்சி தேவைதானா என்று கேள்வி எழுப்புவது சரியல்ல. சர்வதேச அளவில் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் 1967 ஜனவரி 1-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அதிகாரப்பூர்வ அணு ஆயுத நாடுகளாக அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட வல்லரசுகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டன. 1974-இல் இந்தியா தனது முதல் பொக்ரான் அணு ஆயுத சோதனையை நடத்திய போது, அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத காரணத்தால் நாம் சர்வதேச கண்டனத்துக்கு ஆளானோம். இப்போது ’எசாட் ஏவுகணை சோதனையை நடத்தி வெற்றியடைந்திருப்பதன் மூலம் இனிவரும் காலங்களில் வல்லரசு நாடுகள் நமது விண்வெளி ஆராய்ச்சிக்கும் முயற்சிகளுக்கும் தடையே ஏற்படுத்திவிட முடியாது.

இந்தியாவின் செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை சோதனை முயற்சிக்கு சர்வதேச அளவில் பெரும் கண்டனமோ, எதிர்ப்போ, ஏற்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். 1998-இல் இரண்டாவது பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தியபோது, சர்வதேச அளவில் இந்தியாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது, கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்தியாவின் ’எசாட் சோதனை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

இந்தியாமீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படாமல் இருக்க காரணம்

சர்வதேச அளவில் இந்தியாவின் ’எசாட் சோதனை குறித்து பெரிய விமர்சனங்கள் எழாமல் இருப்பதற்கு நமது சோதனை முயற்சியின் உயரம் முக்கிய காரணமாகும். 300 கி.மீ உயரத்திலுள்ள செயற்கைக்கோள் மீதான தாக்குதலில் ஏற்பட்டிருக்கும் உதிரிபாகச் சிதறல்கள் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே விண்வெளியில் நிலை பெறும். சொல்லப்போனால் சில வாரங்களிலேயே கூட மக்கி சிறு சிறு துகள்களாக விண்வெளியில் கலந்துவிடலாம். 2007-இல் 865 கி.மீ உயரத்தில் சீனா மேற்கொண்ட ’எசாட் சோதனையால் தகர்க்கப்பட்ட செயற்கைக்கோளின் உதிரிபாகங்கள் 10 ஆண்டுகளாகியும் இன்னும் முழுமையாக மக்கிவிடவில்லை என்று தெரிகிறது. இருந்தும் கூட இந்தியா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படாமல் இருப்பதற்கு, சர்வதேச சட்டங்களையும் அமைப்புகளையும் மதிக்கும் பொறுப்புள்ள தேசமாக இந்தியா கருதப்படுவது மிக முக்கிய காரணம்.

அண்டை நாடுகளின் கருத்து

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ள நிலையில், விண்வெளியில் ஒவ்வொரு நாடும் அமைதியையும், சமாதானத்தையும் கடைபிடிக்கும் என்று நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது. இந்தியாவின் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை குறித்து பிடிஐ நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு, சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், ’’இந்த செய்திகள் எங்களுக்கு தெரியவந்தன. விண்வெளியில் ஒவ்வொரு நாடும் அமைதியையும், சமாதானத்தையும் கடைபிடிக்கும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

அண்டை நாடான சீனாவிடம் செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உள்ளன. கடந்த 2007-ஆம் ஆண்டில் புவி தாழ்வட்ட பாதையில் 865 கி.மீ தொலைவில் செயற்கைக்கோள்களை சுட்டு வீழ்த்தி, அந்த நாடு வெற்றிகரமாக சோதனை நடத்தியது. செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை மேற்கொள்வது விண்வெளிப் பகுதியை ராணுவ மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவின் பெயரை அவர்கள் நேரடியாகக் குறிப்பிடவில்லை. ’’விண்வெளி என்பது மனித குலத்துக்கான பொதுவான தளம் ஆகும். அதை ராணுவ மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கான பொறுப்பு இருக்கிறது. விண்வெளியில் ஆயுதப் போட்டியை தடை செய்வதற்கான ஐ.நா.வின் தீர்மானத்துக்கு பலமான ஆதரவாளராக பாகிஸ்தான் இருக்கிறது என்று பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை, இதற்கு முன் சோதனை செய்யப்பட்ட தருணங்களில் அதை வன்மையாகக் கண்டித்த நாடுகள், தற்போது விண்வெளி தளத்திற்கு ஏற்படக் கூடிய ராணுவ அச்சுறுத்தலை தடுத்து நிறுத்துவதற்கான சர்வதேச நெறிமுறைகளை முன்னெடுக்கும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றும் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர்.

விண்வெளிக் குப்பைகள் அல்லது கழிவுகள்

இந்தியாவில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணைப் பரிசோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தாக்கி அழிக்கப்பட்ட செயற்கைக்கோளிலிருந்து மிக அதிக அளவிலான கழிவுகள் உருவாகியுள்ளதாக உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. விண்வெளிக் கழிவுகள் என்பது பூமியைச் சுற்றிக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் 7500 டன்கள் அளவு கொண்ட தேவையற்ற வன்பொருட்கள் ஆகும். இது வளர்ந்து வரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. விண்வெளிக் கழிவுகள் தொடர்ந்து அதிக அளவில் அதிகரித்து வருவதால், குறிப்பாக சர்வதேச விண்வெளி நிலையம் உள்பட அனைத்து விண்வெளி வாகனங்களுக்கும் பாதிப்பாக அமையும். 1978-ஆம் ஆண்டில் நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியாளரான டொனால்டு து. கெஸ்லர் என்பவரால் முன்மொழியப்பட்ட கருத்துப்படி விண்வெளிக் கழிவுகள் காரணமாக பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் அறிக்கைப்படி, 1 செ.மீ அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளில் ஏறத்தாழ 7,50,000 பொருட்கள் விண்வெளியில் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏவுகணையால் அழிக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோளானது சிறுசிறு துண்டுகளாக சிதறி விண்வெளிக் கழிவுகளுடன் இணைகின்றன. இந்த விண்வெளிக் கழிவுகளானது செயல்பாட்டில் உள்ள செயற்கைக் கோள்களுடன் மோதி அவற்றின் செயல்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கலாம். 2007-ஆம் ஆண்டில் சீனா தனது பெங்குயின் ஐஊ வானிலை ஆய்வு செயற்கைக்கோளை அழித்து தனது முதல் செயற்கைக் கோள் எதிர்ப்பு சோதனையை நடத்தியதன் மூலம் 2300-க்கும் மேற்பட்ட பெரிய சிதைவுகளையும் 1 செ.மீ க்கும் அதிகமான அளவில் சுமார் 1.5 லட்சம் துண்டுகளை உருவாக்கியுள்ளது என மதிப்பிடப்பட்டது. அவை ஒவ்வொன்றும் ஒரு செயற்கைக் கோள் மீது மோதுவதன் மூலம் அந்த செயற்கைக் கோள்கள் செயலிழந்து போகலாம்.

பலமும், பாதுகாப்பும்

இந்த சோதனை வெற்றியின்மூலம் விண்வெளி பாதுகாப்பில் தனது பெயரை பொறித்திருப்பது  குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் விண்வெளியில் புதிய சக்தியாக இந்தியா உயர்ந்து நிற்கிறது. இந்தியாவை இது பலப்படுத்துவதுடன் இன்னும் கூடுதலான பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும். இந்த எ-சாட் ஏவுகணை செலுத்தப்பட்ட மூன்றே நிமிடங்களில் இலக்கை துல்லியமாகவும், வெற்றிகரமாகவும் தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது புதிய பலத்தை அளிப்பதாக உள்ளது. மேலும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை (எ-சாட்) வெற்றிகரமாக சோதனை செய்திருப்பது இந்தியாவுக்கான மாபெரும் சாதனையாகும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (னுசுனுடீ ஶி னுநகநேஉந சுநளநயசஉா யனே னுநஎநடடியீஅநவே டீசபயேளையவடைிே) தலைவர் ஜி சதிஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த சோதனை வெற்றியானது எதிர் நாட்டினருக்கு ஒரு சவாலாகவே அமையும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

தாழ்வான புவி வட்டப் பாதையில் சுற்றிவரும் உளவு செயற்கைக்கோள்

தொலைத்தொடர்பு வசதிகளுக்காகவும் எதிரி நாடுகளை உளவு பார்ப்பதற்கும் தாழ்வான புவி வட்டப் பாதை (டுடிற நுயசவா டீசெவை ஶி லியோ) செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பூமியின் தரை மட்டத்திலிருந்து 200 முதல் 2,000 கி.மீ. வரையிலான உயரத்தில் சுற்றி வரக்கூடியவையாகும். மின்னஞ்சல், காணொலி காட்சி உள்ளிட்ட தகவல் தொடர்புக்காகவும் இந்த வகை செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை. மாறாக புவி வட்டப் பாதையில் அதி வேகத்தில் சுற்றி வருபவை ஆகும். தொலைதூர பகுதிகள் மற்றும் இணைய கட்டமைப்பு வசதிகளை நிறுவ வாய்ப்பு இல்லாத பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கவும் இவற்றைப் பயன்படுத்தலாம். பூமிக்கு அருகில் இருப்பதால் குறிப்பிட்ட பகுதியை கண்காணிக்கவோ அல்லது உளவு பார்க்கவோ இவ்வகை செயற்கைக்கோள்களைப் பயன்படுத்த முடியும்.

அதேநேரம், இந்த லியோ செயற்கைக்கோள்களில் இருந்து ஜியோ செயற்கைக்கோள்கள் முற்றிலும் மாறுபட்டவை ஆகும். தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளுக்காக ஜியோ செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை சுமார் 22,000 கி.மீ. உயரத்தில் நிலையாக இருக்கும். புவி வட்டப் பாதையில் சுற்றி வராது. லியோவைவிட ஜியோ அளவில் பெரியது.