ஐ.நா.வின் பாதுகாப்பு குழுவில் இந்தியா

ஐ.நா.வின் பாதுகாப்பு குழுவில் இந்தியா

ஐ.நா.வின் பாதுகாப்பு குழுவில் இந்தியா

ஐக்கிய நாடுகள் சபை (UNO) என்ற பன்னாட்டு நிறுவனம் 1945-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது (1941) அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த எப்.டி. ரூஸ்வெல்ட்டும், இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு போர்க்கப்பலில் சந்தித்து அட்லாண்டிக் சாசனத்தை முடிவு செய்தனர். அதன் சரத்துகள் பல்வேறு மாநாடுகளில் விவாதிக்கப்பட்டன. இறுதியில் 1945-ஆம் ஆண்டு சான்பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டிலும் விவாதிக்கப்பட்டு, 1945 ஜூன் 26-இல் கையெழுத்திடப்பட்டது. இதன்படி ஐ.நா. சபை, அக்டோபர் 24, 1945-இல் நிறுவப்பட்டது. ஐ.நா சபையில் தற்போது வரை 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைமையகம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. உலக அரங்கில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுதல், அனைத்து நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல், நாடுகளுக்கிடையேயான சிக்கலை அமைதியான முறையில் தீர்த்தல் போன்றவை இதன் முக்கிய நோக்கங்களாகும். மேற்கூறிய நோக்கங்கள் அனைத்தையும் எல்லா நாடுகளிலும் செயல்படுத்துவதற்கான ஒரு மையமாகத் திகழ்கிறது.

பாதுகாப்பு மன்றம் :

இது ஐ.நா. வின் முக்கிய உறுப்பு ஆகும். இந்த அவை உலகில் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டுகிறது. பாதுகாப்பு மன்றத்தில் ஐந்து நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவை தவிர பத்து தற்காலிக உறுப்பினர்களும் உள்ளனர். இவர்கள் பொதுச்சபையால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நிலையான உறுப்பினர்களுக்கு அவையின் முடிவுகளை ரத்து செய்யும் எதிர் வாக்கு உரிமை (VETO) உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள ஆசிய பசிபிக் பகுதியைச் சேர்ந்த 55 நாடுகள் 2021-22 -க்கான நிரந்தரமில்லாத உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்படுவதை ஒருமனதாக அங்கீகரித்திருக்கின்றன. இந்தக் குழுவில் நிரந்தரமில்லாத பதவிக்கு விழைந்த ஒரே நாடு இந்தியாதான் என்பதும், அனைத்து நாடுகளும் இந்தியாவின் தேர்வை அங்கீகரித்திருக்கின்றன என்பதும் நமக்குக் கிடைத்திருக்கும் முதல்கட்ட வெற்றி. அடுத்தகட்டமாக, ஐ.நா.வின் பொதுச்சபை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிரந்தரமில்லாத ஐந்து உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இருக்கிறது. ஐ.நா. பொதுச்சபையின் 193 உறுப்பு நாடுகள் அந்தத் தேர்தலில் வாக்களிக்கும். 129 நாடுகளின் ஆதரவு இருந்தால்தான் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உறுப்பினராக முடியும். 1950-51 முதல் ஏழு முறை இதற்கு முன்னால் இந்தியா ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் நிரந்தரமில்லாத உறுப்பினர் குழுவில் பதவி வகித்திருக்கிறது.

பாதுகாப்புக் குழுவில் உறுப்பினராக முயற்சி :

கடந்த 2011-12-இல் ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் உறுப்பினராக இருந்த இந்தியாவின் பதவிக்காலம் முடிவடைந்தது. சுழற்சி முறையில் 2030-இல்தான் இந்தியாவுக்கு மீண்டும் பாதுகாப்புக் குழு உறுப்பினராகும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாகவே 2021-22-இல் மீண்டும் பாதுகாப்புக் குழு உறுப்பினராகும் வாய்ப்புக்கு இந்தியா முயற்சி செய்து வருகிறது. சர்வதேச அளவில் தீர்மானங்களை எடுக்கும் முதன்மையான குழுவாக ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு இருப்பதால் அதில் இந்தியா இடம்பெறுவது அவசியம் என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை.

ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் இந்தியாவால் சில சிறப்பான பணிகளில் ஈடுபட முடியும். நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை ஓரணியாகவும், ரஷ்யா மற்றும் சீனா இன்னொரு அணியாகவும் இருக்கும் நிலையில், அந்த இரண்டு அணிகளுடனும் இணைந்து செயல்படும் தகுதியும் உறவும் உள்ள ஒரே நாடாக இந்தியா திகழ்கிறது. நிரந்தரமில்லாத உறுப்பினர் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதை ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவின் ஐந்து நிரந்தர உறுப்பினர் நாடுகள் விரும்புவதற்கு அது ஒரு முக்கியமான காரணம்.

சீனா மற்றும் பாகிஸ்தான் – ஆதரவு :

2021-22-ஆம் ஆண்டுகளில் பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமில்லாத உறுப்பினராக இருக்க வேண்டிய நாடு ஆப்கானிஸ்தான். அதற்கான முயற்சியில் ஆப்கானிஸ்தான் ஈடுபட்டு வந்தது. இந்தியாவுடனான நெருக்கமான உறவின் அடிப்படையில், நமது கோரிக்கையை ஏற்று இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க ஆப்கானிஸ்தான் முன்வந்திருக்கிறது. நம்முடனான இருநாட்டு உறவில் பல பிரச்சனைகள் இருந்தாலும்கூட, இந்தியாவுக்கு ஆதரவு தர பாகிஸ்தான் முற்பட்டிருக்கிறது என்பது எதிர்பாரா திருப்பம். பாகிஸ்தான் மட்டுமல்ல, சீனாவும் கூட ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவிற்கான இந்தியாவின் வேட்பு மனுவை ஆதரிக்க முன்வந்திருக்கிறது. பாகிஸ்தான், சீனா ஆகிய இரு நாடுகளின் முடிவை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ராஜாங்க ரீதியிலான நட்புறவை இந்தியா மேம்படுத்திக்கொள்ள மிக முக்கியமான வாய்ப்பாக ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவுக்கான தேர்தல் அமையக்கூடும்.

ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் கடந்த ஏழு முறை உறுப்பினராக இந்தியா வகித்தபோது, பல்வேறு பிரச்சனைகளில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமலும், முடிவெடுக்காமலும் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்திருக்கிறது. அதனால், துணிந்து எந்த முடிவையும் எடுக்காத உறுப்பினர் என்கிற அவப்பெயர் இந்தியாவுக்கு உண்டு. பெரும் வல்லரசாகத் தன்னை உருவாக்கிக்கொள்ள முனையும் சீனா ஒருபுறமும், ஐ.நா. சபையின் மீதான தனது பொறுப்புகளையும், கடமைகளையும் குறைத்துக் கொள்ளும் மனநிலையில் அமெரிக்கா இன்னொருபுறமும் இருக்கும் காலகட்டத்தில் ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் நிரந்தரமில்லாத உறுப்பினராகும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைக்க இருக்கிறது. இரண்டு அணிகளுடனும் நட்புறவை வைத்திருக்கும் இந்தியா, இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு உலக வல்லரசுகளை இணைந்து செயல்பட வைக்கும் உறவுப் பாலமாக மாற வேண்டும்.

2022-இல் ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராகும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்தால் அதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. இந்தியா விடுதலை பெற்ற 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் நிலையில், நமக்குக் கிடைக்கும் சர்வதேச அங்கீகாரம் என்பதுதான் அந்தச் சிறப்பு. இந்தியாவைப் பொருத்தவரை, மக்கள்தொகை அடிப்படையிலும் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் என்கிற அடிப்படையிலும், ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினராகும் எல்லாத் தகுதியும் இருக்கிறது. எனவே இந்தியாவின் அடுத்தகட்ட முயற்சி அதுவாகத்தான் இருக்க வேண்டும்.