ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தும் அதன் முக்கியத்துவமும்

கொரோனா வைரஸ் தொற்றானது தற்போது உலகமெங்கும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பொருட்டு பல்வேறு நாடுகள் அதற்கான தடுப்பு மருந்தினை தயாரிக்கும் முயற்சியில் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் பல்வேறு நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன. கொரேனா தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் கொரோனா சிகிச்சைக்கு ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ’ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் ICMR-Indian Council of Medical Research) சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தது. இதனால் உள்நாட்டுச் சந்தையில் அதற்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. உலக அளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை 70 சதவீதம் உற்பத்தி செய்வது இந்தியா தான். கொரோனா தாக்கத்திற்குப் பின் தமிழ்நாட்டில் 40 நிறுவனங்களும் தேசிய அளவில் 300 நிறுவனங்களும் இந்த மருந்தைத் தயாரிப்பதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளன. மேலும் பல்வேறு உலக நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்தே இம்மருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் இம்மருந்து கவனத்தை ஈர்த்துள்ளது.

இம்மருந்தின் பின்னணி :

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து ’சின்கோனா (விஷ ஜீர மரம்) என்ற மரத்தின் பட்டையில் இருந்து முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. 1934-இல் ’ஹேன்ஸ் ஆண்டர்சாக் என்ற ஆஸ்திரிய-ஜெர்மனிய விஞ்ஞானி இம்மருந்தைக் கொண்டு மலேரியாவைக் குணப்படுத்த முடியும் என்பதை கண்டறிந்தார். இதனையடுத்து இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அந்த மரப் பட்டைகளை பயன்படுத்தாமல், செயற்கை வேதிப் பொருள்கள் மூலமாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அறிமுகமானது. இந்தியாவில் கடந்த 1950-களில் இருந்தே இந்த மருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. மலேரியாவை குணப்படுத்துவதற்காகவும், முடக்குவாத பாதிப்புக்குள்ளான (ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்) நோயாளிகளில் சிலருக்கும் இம்மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.