பிம்ஸ்டெக் கூட்டமைப்பு

பிம்ஸ்டெக் கூட்டமைப்பு

பிம்ஸ்டெக் கூட்டமைப்பு என்பது வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு பிராந்திய அமைப்பாகும்.
பிம்ஸ்டெக் (BIMSTEC) என்பது, Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation என்பதன் சுருக்கமாகும். இவ்வமைப்பின் துவக்க கால உறுப்பினர்களான Bangladesh, India, Myanmar, Sri Langa, Thailand Economic, Cooperation என்பதிலிருந்தும் இப்பெயர் வைக்கப்பட்டதாகக் கருதலாம்.

தோன்றிய வரலாறு :
வங்கக் கடலைச் சுற்றி அமைந்துள்ள நாடுகள் பொருளாதார ரீதியில் தங்களுக்குள் ஒத்துழைப்பு அவசியம் என்பதை உணர்ந்தன. வங்கதேசம், இந்தியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் 1997-ஆம் ஆண்டில் ஒன்றிணைந்து வெளியிட்ட பாங்காங் பிரகடனத்தினையடுத்து BIST-EC எனும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து இவ்வமைப்பில் மியான்மரும் சேர்ந்து கொண்ட போது BIMST-EC என்றானது. 2004 பிப்ரவரியில் நேபாளமும் பூடானும் இவ்வமைப்பில் இணைந்தன. இதனைத் தொடர்ந்து 2004 ஜூலை மாதம் பாங்காங் நகரில் நடைபெற்ற BIMST-EC முதலாவது மாநாட்டில் இவ்வமைப்பின் பெயர் Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation என அதிகாரப்பூர்வமாக மாற்றம் செய்யப்பட்டது.

நோக்கங்கள் :
 வணிகம், முதலீடு, தொழிற்சாலை, தொழில்நுட்பம், மனிதவள மேம்பாடு, சுற்றுலா, வேளாண்மை, ஆற்றல், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் பொருளாதார மேம்பாட்டிற்கான சூழலை ஏற்படுத்துதல்.
 சமத்துவம் மற்றும் கூட்டுறவின் மூலம் இப்பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தினை ஊக்குவித்தல்.
 பொருளாதாரம், சமூகம், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறைகளில் கூட்டுறவையும் பரஸ்பர உதவியையும் மேம்படுத்துதல்.
 கல்வி, தொழில் மற்றும் தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்படும் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகளில் உறுப்பு நாடுகள் பரஸ்பரம் உதவி செய்தல்.
 வாழ்க்கைத்தரம், வேலைவாய்ப்பு, போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு போன்றவற்றை மேம்படுத்தும் வண்ணம் உறுப்பு நாடுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இதர அனைத்து உறுப்பு நாடுகளும் ஒத்துழைப்பு அளிப்பது.
 நோக்கங்கள் மற்றும் கொள்கைகளில் தம்மை ஒத்துள்ள பிற சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் நெருங்கிய மற்றும் பயனுள்ள வகையிலான உறவினை ஏற்படுத்திக் கொள்ளல்.

விதிகள் :
 பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பானது சமத்துவ இறையாண்மை, எல்லைப்புற ஒருமைப்பாடு, அரசியல் ரீதியிலான சுதந்திரம், உள்விவகாரங்களில் தலையிடாமை, இருதரப்பு நன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.
 பிம்ஸ்டெக் அமைப்பிற்குள்ளான ஒத்துழைப்பானது உறுப்பு நாடுகளுக்கிடையிலான பிரத்யேக உறவுடன் கூடுதலான ஒரு உறவு மட்டுமே.


முக்கியத்துவம் :
பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகள் உலகின் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் தொகையையும் ஏறத்தாழ `3 டிரில்லியன் உள்நாட்டு உற்பத்தியையும் கொண்டுள்ளதுடன் சுமார் $100 பில்லியன் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் அமைப்பாகவும் உள்ளது. மேலும் தெற்காசிய பிராந்தியக் கூட்டமைப்பிற்கு (சார்க்) (SAARC)மாற்றாக செயல்படுகிறது. இவ்வமைப்பில் பாகிஸ்தான் உறுப்பினராக இல்லாததால், சார்க் அமைப்பில் ஏற்படுவதுபோன்று தேவையற்ற சஞ்சலங்களும் குழப்பங்களும் ஏற்படுவதில்லை. எனவே முதன்மை நோக்கமான பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வமைப்பு இந்தியாவின் கிழக்கே பார் (Look East) கொள்கையையும், தாய்லாந்தின் மேற்கே பார் (Look West) கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. மேலும் உறுப்பு நாடுகளுக்கிடையிலான உறவானது வர்த்தகம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மேம்பட்டுள்ளது.
சவால்கள் :
பிம்ஸ்டெக் அமைப்பு ஒரு நிதியுதவி வழங்கும் அமைப்பாகவோ அல்லது இதர உதவிகளை வழங்காமல் ஒரு சாதாரண நெறிப்படுத்தும் குழுவாக மட்டுமே செயல்படுகிறது. இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் பொருளாதார ரீதியில் மிகுந்த ஏற்றத்தாழ்வுடையதாகத் திகழ்கின்றது. ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதார சக்தியான சீனா இவ்வமைப்பில் இடம் பெறாததும், இவ்வமைப்பு பெரிய அளவில் வளர்ச்சியடையாமலிருப்பதற்கு ஒரு காரணமாகும். இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் தாங்கள் உறுப்பினர்களாக உள்ள பிற பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தினை பிம்ஸ்டெக்கிற்கு அளிப்பதில்லை. ஆனாலும் இந்தியாவின் முயற்சியால் சமீபகாலமாக இவ்வமைப்பு முக்கியத்துவம் பெற்று வருகிறது.
இந்தியாவும் பிம்ஸ்டெக்கும் :
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருப்பினும், வடகிழக்கு இந்தியப் பகுதிகள் போதிய வளர்ச்சியினை எட்டவில்லை. புவியியல் ரீதியில் மிகவும் கடினமான இப்பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கு பிம்ஸ்டெக் அமைப்பு மிகவும் உதவிகரமாகத் திகழும். பிம்ஸ்டெக் அமைப்பானது இந்தியாவிற்கும் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளைக் கொண்ட ஆசியான் அமைப்பிற்குமிடையே ஒரு பாலமாகத் திகழும். மேலும் பிம்ஸ்டெக் அமைப்பின் நோக்கங்கள் சரியாக நிறைவேற்றப்படும் பொழுது தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் சாலைப்போக்குவரத்து மேம்படுவதுடன் வடகிழக்கு இந்திய மாநிலங்களிலிருந்து தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்து அப்பிராந்தியத்தில் வளர்ச்சி பெருகும். இதற்கென இந்தியா மூன்று சாலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. இதில் முதலாவதாக காலாதான் பல்பயன் சாலைத் திட்டம். இது இந்தியாவை மியான்மருடன் இணைக்கும். மற்றொன்று ஆசிய முத்தரப்பு நெடுஞ்சாலைத் திட்டம், இந்தியாவை மியான்மர் வழியாக தாய்லாந்துடன் இணைப்பது. மூன்றாவது வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகியவற்றை இணைக்கும் சாலைத் திட்டம்.
பிம்ஸ்டெக் அமைப்பு முக்கியத்துவமளிக்கும் துறைகள்
பிம்ஸ்டெக் அமைப்பு 14 துறைகளுக்கு முன்னுரிமையளித்து அவற்றில் உறுப்புநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதில் ஒவ்வொரு துறையும் ஒரு நாட்டின் பொறுப்பில் விடப்பட்டு அத்துறையில் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

துறை பொறுப்பு நாடு
வர்த்தகம் மற்றும் முதலீடு வங்கதேசம்
போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு இந்தியா
ஆற்றல் மியான்மர்
தொழில்நுட்பம் இலங்கை
மீன்வளம் தாய்லாந்து
வேளாண்மை மியான்மர்
பொது சுகாதாரம் தாய்லாந்து
வறுமை ஒழிப்பு நேபாளம்
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நாடு கடந்த பயங்கரவாதம் இந்தியா
இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் இந்தியா
பேரிடர் மேலாண்மை இந்தியா
கலாச்சாரம் பூடான்
பொதுமக்கள் தொடர்பு தாய்லாந்து
பருவநிலை மாற்றம் வங்கதேசம்

பிரிக்ஸ் – பிம்ஸ்டெக் மாநாடு-2016
எட்டாவது பிரிக்ஸ் மாநாடு இந்தியாவினால் 2016 அக்டோபர் மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் கோவாவில் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்டெக் அமைப்புகளின் கூட்டு மாநாடு (BRICS – BIMSTEC outreach summit) 2016 அக்டோபர் 15 அன்று நடைபெற்றது.

இதில் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினா, நேபாள பிரதமர் புஷ்பக் கமல் தஹல் பிரசன்டா, பூடான் பிரதமர் ஷெரிங் போப்கே, இலங்கை அதிபர் மைத்ரி பால சிறீசேனா, தாய்லாந்தின் துணைப் பிரதமர், மியான்மரின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆங்சான் சூச்சி ஆகியோருடன் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சமீபத்தில் தெற்காசிய பிராந்தியத்தில் நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்ததுடன், தீவிரவாதத்தினை ஆதரிக்கும் எந்தவொரு நாட்டையும் தனிமைப்படுத்தி தண்டிக்க வேண்டும் எனவும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பிம்ஸ்டெக் அமைப்பு ஒருங்கிணைந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிம்ஸ்டெக் அமைப்பு உறுப்பு நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பினை மேம்படுத்துதல், குற்றவாளிகள் பற்றிய தகவல் தரவுகளை உறுப்பு நாடுகளுக்குள் பகிர்ந்துகொள்ளல், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x