எட்டாவது பிரிக்ஸ் மாநாடு

எட்டாவது பிரிக்ஸ் மாநாடு

உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஐந்து மிகப்பெரிய பொருளாதார நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றினை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் எட்டாவது வருடாந்திர மாநாடு, 2016 அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்தியாவின் சார்பில் கோவாவில் நடத்தப்பட்டது. பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள் உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 43 சதவிகிதத்தினையும் ஒட்டுமொத்த உலக உற்பத்தியில் 30 சதவிகிதத்தினையும் உலக வர்த்தகத்தில் 17 சதவிகிதத்தினையும் கொண்டுள்ளன. அடுத்த 50 ஆண்டுகளில் இந்நாடுகள் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தத்தமது பிராந்தியங்களிலும் உலக அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இவ்வமைப்பின் மாநாடு உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

பொறுப்புடைய அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தீர்வுகளை உருவாக்குதல் எனப் பொருள்படும் Building Responsive, Inclusive and Collective Solutions எனும் கருப்பொருளில் (Theme) நடத்தப்பட்ட இம்மாநாட்டில் பிரேசில் அதிபர் மைக்கேல் தெமர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பொருளாதார வளர்ச்சியின்  அடிப்படையில் ஒத்திருந்தாலும் புவியியல் அமைவிடம், அரசியல் கொள்கை, எதிர்கொள்ளும் பல்வகை சவால்கள் என ஒவ்வொன்றிலும் வேறுபட்டிருக்கும் பிரிக்ஸ் நாடுகளின் தற்போதைய பிரச்சனைகளும் வெவ்வேறானவை. ஒவ்வொரு உறுப்பு நாடும் வருடாந்திர மாநாடுகளில்  தனது பிரச்சனைகளை முன்னிறுத்தி இதர உறுப்பு நாடுகளின் துணையுடன் தீர்த்துக்கொள்ள முனைவது வழக்கம். அதன்படி, தற்போதைய சூழலில் உக்ரைன் விவகாரத்தால் மேற்கு நாடுகளின் பொருளாதார தடை விதிப்பிற்குள்ளாகியுள்ள இரஷ்யா, தென் சீனக்கடல் பிரச்சனையில் சிக்கியுள்ள சீனா, பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவுக் கொள்கைகளால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் இந்தியா, பொருளாதார மற்றும் உள்நாட்டு அரசியல் சிக்கல்களில் சிக்கியுள்ள பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா என ஒவ்வொரு உறுப்பு நாடும் தனது பிரச்சனைகளுக்கு இதர உறுப்பு நாடுகளின் துணையுடன் தீர்வு காண முனைந்தன.

எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் :

இம்மாநாட்டில் பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு ஏராளமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் சில முக்கியமானவை.

s   உலக அளவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள பயங்கரவாதத்தினை முடிவிற்குக் கொண்டுவர பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். மேலும் பிரிக்ஸ் நாடுகளிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.

s   பிரிக்ஸ் அமைப்பின் சார்பில் தனியாக ஒரு கடன் தரநிர்ணய அமைப்பு (BRICS credit rating agency) ஏற்படுத்தப்படும். இது வளர்ந்துவரும் நாடுகளின் நியாயமான நோக்கங்களையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக விளங்கும்.

s   வேளாண்மை, சுங்க நடைமுறைகள், இரயில்வே சார்ந்த ஆராய்ச்சி போன்றவற்றில் இணைந்து செயல்படுவதுடன் பிரிக்ஸ் நாடுகளின் இளைஞர்களுக்கிடையே சிறப்பான தொடர்புகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஏதுவாக விளையாட்டுக்குழு ஒன்று ஏற்படுத்துதல்.

s   பிரிக்ஸ் அமைப்பின் வங்கியான, புதிய வளர்ச்சி வங்கியின் (NDB) சார்பில் முதன்முதலாக வழங்கப்படும் `900 மில்லியன் மதிப்பிலான கடன்களை வளர்ந்து வரும் நாடுகளில் தூய்மையான எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்வது.

s  பயங்கரவாதம் உலக அளவில் மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதால் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளை உலகளாவிய வர்த்தகத்தில் விலக்கி வைப்பதுடன் சர்வதேச அரங்கில் அந்நாட்டினைத் தனிமைப்படுத்துவது.

s   ஐ.நா. சபையில் வளர்ந்துவரும் நாடுகளின் பங்களிப்பினை அதிகரிக்க வழிவகை செய்யும் சீர்திருத்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள ஒருமித்த ஆதரவு அளிப்பது.

பாகிஸ்தானின் தூண்டுதலால் காஷ்மீரில் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்த அமைதியின்மை, உரி (Uri) தாக்குதல், எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளின் ஊடுறுவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டில், மேற்கண்ட பிரச்சனைகளுக்கு காரணமான பாகிஸ்தானையும் அதன் பயங்கரவாத ஆதரவு கொள்கையையும் எதிர்த்து பேச முடிந்ததே தவிர, அந்நாட்டினை பயங்கரவாத நாடாக அறிவிக்கவோ தனிமைப்படுத்தவோ இயலவில்லை. மேலும் இம்மாநாட்டில் ஐ.எஸ். உள்ளிட்ட சில பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதேயன்றி, பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி வந்து இந்தியாவில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாத அமைப்புகளைக் குறித்து எவ்விதக் கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை. இது இந்தியாவிற்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அதேபோல் அணுக்கரு வழங்கும் நாடுகள் குழுவில் (NSG) இந்தியா இணைவதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டதை திரும்பப் பெற வைக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. மேலும் பாகிஸ்தானிலிருந்து கொண்டு இந்தியாவில் பல்வேறு தாக்குதல் திட்டங்களை செயல்படுத்திவரும் ஜெய்ஷ்-இ-முகமது (Jem) அமைப்பின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி ஐ.நா. சபையில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சீனா முட்டுக்கட்டை போட்டிருந்த நிலையில், அத்தகைய நிலைப்பாட்டிலிருந்து சீனாவைப் பின்வாங்கச் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

உலகில் மிகவேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியா, பொருளாதாரத்தில் தன்னை ஒத்துள்ள நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டில், தனது பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானவற்றைப் பற்றி விவாதிப்பதில் கவனம் செலுத்தி  தனக்கு சாதகமான முடிவுகளை எடுக்க முயற்சித்திருக்கலாம். ஆனால் முழுக்க முழுக்க பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு கொள்கையை எதிர்ப்பதுடன் அந்நாட்டை உலக அரங்கில் தனிமைப்படுத்துவதற்கான முயற்சிக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டது. இதனால் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட இதர விவகாரங்களில் தனக்கு சாதகமான பலவற்றை உறுப்பு நாடுகளின் துணையுடன் இந்தியாவால் சாதித்துக்கொள்ள இயலவில்லை.

எட்டாவது பிரிக்ஸ் தலைவர்கள் மாநாட்டையொட்டி பல்வேறு மாநாடுகள் இந்தியாவில் நடைபெற்றன. அவற்றில் முக்கியமான சில

பிரிக்ஸ் மாநாடு நடைபெற்ற இடம்
இளைஞர் மாநாடு கௌஹாத்தி, அஸ்ஸாம்
ஆற்றல் பயன்பாட்டு மாநாடு (Energy Efficiency) விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம்
நகர்ப்புற மேம்பாட்டு மாநாடு விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம்
சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாடு கோவா
போதைப்பொருள் தடுப்பு மாநாடு புதுடெல்லி
வணிகக் கண்காட்சி புதுடெல்லி
ஊடகங்கள் மாநாடு புதுடெல்லி
வேளாண்மை மாநாடு புதுடெல்லி
இளம் விஞ்ஞானிகள் புதுடெல்லி
நட்பு நகரங்கள் கூட்டம் மும்பை
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு  அமைச்சர்கள் மாநாடு புதுடெல்லி
பெண் பாராளுமன்ற வாதிகள் மாநாடு ஜெய்ப்பூர்
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய  கண்டுபிடிப்புகளுக்கான அமைச்சர்கள் மாநாடு ஜெய்ப்பூர்
திரைப்பட விழா புதுடெல்லி
பேரிடர் மேலாண்மைக்கான பிரிக்ஸ் மாநாடு உதய்ப்பூர்
சுற்றுலாவிற்கான மாநாடு கஜீராஹோ, மத்தியப்பிரதேசம்
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x