நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையிடையே ஏற்பட்டுள்ள மோதல்

நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையிடையே ஏற்பட்டுள்ள மோதல்

ஜனநாயக அரசின் மூன்று முக்கியத்தூண்களான நீதித்துறை, நிர்வாகத்துறை  (மத்திய அரசு) மற்றும் பாராளுமன்றம் ஆகிய மூன்றும் தத்தமது எல்லைக்குள் நின்று ஒன்றின் பணியில் மற்றொன்று குறுக்கிடாமல் அதேசமயம் ஒன்றையொன்று கண்காணித்துக் கொண்டு தமக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே இந்திய ஜனநாயகம் சிறந்த முறையில் செயலாற்றும். இதனையே நமது அரசியலமைப்பும் அதிகாரப் பங்கீடு (Separation of Powers) என்ற பெயரில் வரையறுத்துள்ளது. இதில் ஏதும் சிக்கல்கள் எழும் பட்சத்தில் அது ஜனநாயத்தின் ஆணிவேரையே அசைத்துவிடும். ஆனால் தற்பொழுது இந்தியாவில் நீதித்துறைக்கும் நிர்வாகத்துறைக்குமிடையேயான சிறுசிறு உரசல்கள் பெரும் மோதலாக உருவெடுத்து நிற்கின்றன. நீதிபதிகளை நியமிக்கும் நடைமுறையில் இவ்விரு அமைப்புகளுக்குமிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடே இம்மோதலுக்கு காரணமாகிவிட்டது. இந்தியாவில் மொத்தமுள்ள 24 உயர்நீதிமன்றங்களில் 1091 நீதிபதி பணியிடங்கள் உள்ளன.  இவற்றில் 470 பணியிடங்கள் தற்பொழுது காலியாக உள்ளன. இந்த  காலிப்பணியிடங்களுக்கான நீதிபதிகளை நியமிப்பதில்தான் நீதித்துறைக்கும்   நிர்வாகத்துறைக்கும் முரண்பாடுகள் எழுந்து பலமாதங்களாக நியமனம்  மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இந்திய நீதித்துறையின் மேல்மட்டத்திலுள்ள உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்கள் மட்டுமின்றி கீழமை நீதிமன்றங்களிலும்  ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதுடன் நீதிபதிகள்  பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய கீழமை நீதிமன்றங்களின் பணியிட நியமனத்திற்கு மாநில அரசுகளே பொறுப்பு எனினும் இவற்றிற்கு  மேற்படிநிலையிலுள்ள உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமலிருப்பது ஒட்டுமொத்த நீதித்துறையையும்  பாதிக்கிறது.

அரசியலமைப்பு அமலுக்கு வந்த புதிதில் ஜனநாயகத்தின் மூன்று அங்கங்களும்  ஒன்றிற்கொன்று இயைந்து ஒத்துழைப்புடன் செயல்பட்டன. 1970களில் இந்திராகாந்தி பதவியேற்ற பிறகுதான் பிரச்சனைகள் முளைக்கத் துவங்கின. இந்திராகாந்தி நீதித்துறை, பத்திரிகைத்துறை, நிர்வாகத்துறை ஆகிய மூன்றையும் தனது விருப்பத்திற்கேற்ப வளைந்து கொடுக்கும்வகையில் மாற்ற முனைந்தார். இப்போக்கு அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்களிடமும் தொடர்ந்தது. இதனைத்தடுத்து நிறுத்தி அரசியலமைப்பின்படி நீதித்துறையின் சுதந்திரத்தை நிலைநாட்டி நீதிபதிகளை நியமிப்பதற்கென ‘கொலீஜியம்’ முறை கொண்டுவரப்பட்டது. இதன்படி உச்ச மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள்குழு நீதிபதியாக நியமிக்கத் தகுதிபடைத்தவர்கள் அடங்கிய பரிந்துரைப் பட்டியலை மத்திய அரசிடம் அளிக்கும். அதற்கு கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்தபிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு அவரின் ஒப்புதலுடன்  புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவர். ஆரம்பகாலத்தில் நீதித்துறையின்  சுதந்திரத்தை நிலைநாட்டுவதாக பாராட்டப்பட்ட இந்த நீதிபதிகள் நியமன முறை, காலப்போக்கில் கொலீஜியம் தேர்வுக்குழுவின் விருப்புவெறுப்பிற்கேற்ப நீதிபதிகளைத் தேர்வு செய்யும் வகையில் மாற்றம் கண்டு வெளிப்படைத் தன்மையற்றதாகிவிட்டதுடன் முறைகேடுகளுக்கும் வழிவகுத்துவிட்டது. எனவே இத்தகைய நீதிபதிகளை நீதிபதிகளே தேர்ந்தெடுக்கும் நடைமுறையை மாற்றும் நோக்கில் நாடாளுமன்றம் 2014-ஆம் ஆண்டில் நீதிபதிகள் நியமன ஆணையச்சட்டம் எனும் சட்டத்தினை 99-ஆவது அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் கொண்டுவந்தது. ஆனால் இச்சட்டம் நீதித்துறையின் சுதந்திரத்தினை நிர்வாகத்துறை பறிப்பது போலுள்ளது எனக் கருதிய உச்சநீதிமன்றம் 2015 அக்டோபரில் இச்சட்டத்தினை செல்லாததாக்கிவிட்டது. அதுமுதல் நீதித்துறைக்கும் நிர்வாகத்துறைக்குமான மோதல் முற்றிவிட்டது.  நாடுமுழுவதும் காலியாக உள்ள 470 உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு நியமனம் செய்ய ஒரு பரிந்துரைப் பட்டியலை கொலீஜியம் குழு மத்திய  அரசிடம் கொடுப்பதும் மத்திய அரசு ஏதாவதொரு காரணம் கூறி அதனை நிராகரிப்பது அல்லது அப்பட்டியலின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாடிநத்துவதும் தொடர்ந்து வருகிறது.

கொலீஜியம் முறையில் சில பாதகங்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம் அவற்றினை சரி செய்ய மத்திய அரசிடமே ஆலோசனை கோரியது. ஆனால் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் ஒன்றே இப்பிரச்சனைக்குத் தீர்வாகும் என மத்திய அரசு தீர்க்கமாக உள்ளது. இதனால் சுமார் 15 மாதங்களாக இருதரப்பிற்குமிடையே இழுபறிநிலை ஏற்பட்டுள்ளது. இதனை ஜனநாயகத்தின் இருதூண்களுக்கிடையிலான பிணக்கு என்பதைக் காட்டிலும் அதிகாரத்திற்கான போட்டி என்பதே சரியாக இருக்கும். இவ்வதிகாரப்போட்டியில் நீதிபதிகளை யார் நியமிப்பது என்பதல்ல, நியமனத்தை கொலீஜியம் முறைப்படியா அல்லது நீதிபதிகள் நியமன ஆணையம் மூலமாகவா எந்த நடைமுறையைப் பின்பற்றி நியமிப்பது என்பதே மையப்பிரச்சனையாக உள்ளது. நீதித்துறை கொலீஜியம் முறைக்கு ஆதரவளிப்பதன்மூலம் தனது சுதந்திரத்தினை நிலைநாட்டுவதாகக் கருதினாலும் நிர்வாகத்துறை அதனை அதிகார வரம்புமீறலாகவே நோக்குகிறது. அதேபோல் மத்திய அரசு நீதிபதிகள் நியமன ஆணையத்தின் மூலம் நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதாகக் கருதினாலும் தனது சுதந்திரத்தில் தலையிட முயல்வதாகவே நீதித்துறை கருதுகிறது. இந்த இருவேறுபட்ட பார்வைகளே புதிதாக நீதிபதிகளை நியமிப்பதில் மாபெரும் முட்டுக்கட்டையாக நிற்கின்றன.

மக்கள் தொகையின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடான இந்தியாவில் 2017 ஜனவரி நிலவரப்படி, தோராயமாக 130 கோடி மக்கள் இருப்பர் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 1987-இல் சட்டஆணையம் அளித்த பரிந்துரையின்படி, 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் இருத்தல் வேண்டும். ஆனால் இந்தியாவில் இருப்பதோ 10 நீதிபதிகள் மட்டுமே. காலியாக உள்ள பணியிடங்களைக் கணக்கிலெடுத்தால் இவ்வெண்ணிக்கை மேலும் குறையும். 2016 ஜூலை நிலவரப்படி இந்தியாவில் சுமார் 4 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.   அதேசமயம் மத்தியஅரசின் அறிக்கைப்படி, நாடுமுழுவதுமுள்ள கீழமைநீதிமன்றங்களில் 16,438 நீதிபதிகளும் உயர்நீதிமன்றங்களில் 621 நீதிபதிகளும் உச்சநீதிமன்றத்தில் 29 நீதிபதிகளும் என சுமார் 17 ஆயிரம் நீதிபதிகளே பதவியில் உள்ளனர். ஆனால் முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூரின் கருத்துப்படி நிலுவையில் உள்ள வழக்குகளை சுமார் 70 ஆயிரம் நீதிபதிகள் இருந்தால் மட்டுமே விசாரித்து தீர்ப்பளிக்க இயலும். அதாவது ஏற்கனவே உள்ள 30 ஆயிரம் நீதிபதி பணியிடங்களுடன் கூடுதலாக சுமார் 40 ஆயிரம் நீதிபதி பணியிடங்களை உருவாக்க வேண்டும். அவ்வாறு புதிதாக  நீதிபதிகளை நியமித்தால்கூட நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளுக்கும் தீர்வுகாண குறைந்தபட்சம் 5 வருடங்கள் ஆகும். இந்தியாவில் சராசரியாக ஒரு சிவில் வழக்கில் தீர்ப்பு வெளிவர 15 வருடங்களாகின்றன. குற்றவியல் வழக்குகளுக்கு 7 வருடங்கள் தேவைப்படுகின்றன. இலட்சக்கணக்கானோர் விசாரணைக் கைதிகளாகவே சிறையில் அடைக்கப்பட்டள்ளனர். புதிதாக 40 ஆயிரம் நீதிபதி பணியிடங்களை ஏற்படுத்த வேண்டிய இச்சூழலில் ஏற்கனவே உள்ள நீதிபதிகளின் பணியிடங்களில்கூட சுமார் 30 சதவிகித்தினை காலியாக வைத்திருப்பது நீதித்துறையின் செயல்திறனை மழுங்கச் செய்துள்ளது.

பொதுமக்களின் கடைசி நம்பிக்கையாகத் திகழும் நீதிமன்றங்கள் போதிய நீதிபதிகளின்மையால் காலதாமதத்துடன் வழங்கும் நீதி, வாதி மற்றும் பிரதிவாதி என இருதரப்பினருக்குமே அநீதியாகிவிடுகிறது. ஜனநாயகமுறையில் நாட்டை சிறப்பாக நிர்வகிக்கவும், பொதுமக்களின் நலன்களைப் பாதுகாத்து அவர்களுக்கு சிறப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவும் பொறுப்புடைய நீதித்துறையும் நிர்வாகத்துறையும் மோதலில் ஈடுபட்டு தமது கடமைகளைப் புரிய தாங்களே முட்டுக்கட்டை போட்டுக் கொண்டுள்ளது குடிமக்களுக்கு மிகுந்த சிரமத்தினை ஏற்படுத்தியுள்ளது. இருதுறையினரும் தங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைந்து நீதித்துறையின் செயல்பாட்டை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இல்லையெனில் ஜனநாயக  அமைப்பில் சாமானியனின் கடைசி நம்பிக்கையும் பொய்த்துவிடும்.

View More Details Click Here

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of