சட்டப்பேரவைக் குழுக்கள்

சட்டப்பேரவைக் குழுக்கள்

சட்டப்பேரவை நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொள்ள நாடாளுமன்றத்தினைப் போன்று சட்டசபையிலும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது அரசியல் சாசனத்தின் வழிகாட்டலாகும். இக்குழுக்கள் ஒவ்வொன்றும் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளைத் திறம்பட மேற்கொள்ளும். சட்டப்பேரவைக் கூட்டமானது குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை மட்டுமே கூட்டப்படும் என்பதால் சட்டப்பேரவையின் பெரும்பாலான பணிகளை சட்டப்பேரவைக் குழுக்களே மேற்கொள்கின்றன. மாநிலத்தின் சட்டமியற்றும் அமைப்பான மாநில சட்டமன்றம் சட்டப் பேரவைக் குழுக்களை உருவாக்கவும் அவற்றின் பணிகளை மேற்பார்வையிடவும் அதிகாரம் கொண்டிருக்கும். தமிழக சட்டசபையைப் பொறுத்தவரை 12 குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றின் பதவிக்காலம் ஒரு வருடமாகும். இவற்றின் உறுப்பினர்கள் சட்டசபை உறுப்பினர்களிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மதிப்பீட்டுக் குழு (Committee on Estimation) :

பதினாறு உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு மாநிலத்தின் பொருளாதார நிலை, அரசு நிறுவன அமைப்புகளில் மாற்றம், நிர்வாகச் சீர்திருத்தங்கள், கொள்கை முடிவுகள் உள்ளிட்டவற்றை மதிப்பிட்டு சட்டசபையில் அறிக்கைகளாகத் தாக்கல் செய்யும். மேலும் பொருளாதார நிலைக்குகந்த மாற்றுக் கொள்கைகளையும் திட்டங்களையும் முன்மொழிதல், திட்டங்களுக்காக மதிப்பிடப்பட்ட வரம்பிற்குள்தான் நிதி செலவிடப்படுகிறதா என்பதை கண்காணித்தல், சட்டசபையின் முன் வைக்கப்பட வேண்டிய மதிப்பீட்டு அறிக்கையை வடிவமைத்தல் போன்றவை இதன் பணிகளாகும்.

பொது கணக்குக் குழு (Committee on Public Accounts) :

பதினாறு உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு சட்டசபையினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட நிதிச் செலவுகளையும் அரசின் வருடாந்திர நிதிக் கணக்குகளையும் ஆய்வு செய்வது இக்குழுவின் பணியாகும். இது தவிர மாநில சட்டமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்படத் தகுதி வாய்ந்தது எனக் கருதப்படும் எந்தவொரு கணக்கு வழக்குகளும் பொதுக்கணக்குக் குழுவின் ஆய்விற்கு உட்படுத்தப்படும். இத்தகைய கணக்கு வழக்குகளில் உள்ள ஒவ்வொரு வரவு-செலவு அம்சங்களும் கவர்னர் அல்லது நிதித் துறையினால் வரையறுக்கப்பட்ட விதிகளின்படிதான் உள்ளதா என்பதை உறுதி செய்யும்.

பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு (Committee on Public Undertakings) :

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களைக் கண்காணிப்பது அவற்றை மேம்பார்வையிடுவது, அவற்றின் வரவு-செலவு அறிக்கைகளை ஆய்வு செய்வது, அந்நிறுவனங்களுக்கென வரையறுக்கப்பட்ட விதிகளின்படி செயல்படுவதை உறுதி செய்வது, அன்றாட நிர்வாக நடைமுறைகளை ஆய்வு செய்வது, தேவைப்படின் பொதுத்துறை நிறுவனங்களின் மேம்பாட்டிற்கான வழிகளைப் பரிந்துரைப்பது போன்றவை இதன் பணிகளாகும். இது பதினாறு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.

பேரவை உரிமைகள் குழு (Committee on Privileges) :

பதினான்கு உறுப்பினர்களைக் கொண்ட பேரவை உரிமைகள் குழு , பேரவை உறுப்பினர் ஒருவரால் பேரவைத் தலைவரின் அனுமதியோடு, ஒரு உறுப்பினர் அல்லது ஒரு பேரவைக்குழு அல்லது பேரவை மீதான உரிமை மீறல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அறிக்கையாகப் பெற்று அது குறித்த முழுமையான விசாரணையை மேற்கொள்ளும்.

அலுவல் ஆய்வுக்குழு (Business Advisory Committee) :

பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு, சட்டப் பேரவையின் அலுவல்கள் குறித்த முடிவுகளை எடுக்கின்றது. விவாதிக்கப்பட வேண்டியவை, நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள், சட்டப்பேரவையின் அலுவல் அட்டவணை தயாரிப்பு மற்றும் இது தவிர சபாநாயகரால் அவ்வப்போது, அளிக்கப்படும் சட்டப்பேரவை அலுவல் சார்ந்த பணிகள் போன்றவற்றை இக்கமிட்டி மேற்கொள்ளும்.

சட்டவிதிகள் ஆய்வுக்குழு (Committee on Delegated Legislation) :

பன்னிரெண்டு உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு, அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளவற்றுடன் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றத்தினால் இயற்றப்பட்ட விதிகள் அனைத்தும் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆராய்ந்து பேரவைக்கு அறிக்கையாகச் சமர்பிப்பது இக்குழுவின் பணியாகும்.

அரசு உறுதிமொழிக்குழு (Committee on Government Assurance) :

அதிகபட்சம் 12 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு, சட்டப்பேரவையில் அமைச்சர்களால் அவ்வப்போது அளிக்கப்படும் உறுதி மொழிகள், வாக்குறுதிகள் மற்றும் செயலேற்புகள் சரியாக நிறைவேற்றப்பட்டுள்ளனவா? குறித்த காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா? எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பனவற்றை ஆராய்ந்து சட்டப்பேரவையில் அறிக்கையை சமர்ப்பிக்கும்.

அவைக்குழு (House Committee) :

பதினெட்டு உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு, பேரவை உறுப்பினர்களுக்கான சலுகைகள், வசதிகள் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் ஆராய்ந்து ஆலோசனை கூற ஏற்படுத்தப்படுவதாகும்.

பேரவை விதிகள் குழு (Rules Committee) :

பதினேழு உறுப்பினர்களைக் கொண்டுள்ள இக்குழு, பேரவையின் நடைமுறைகள், அலுவல்கள் குறித்த பொருள்களை ஆய்வதற்கென ஏற்படுத்தப்பட்டதாகும். இக்குழு பேரவை விதிகளில் தேவையான திருத்தங்கள் அல்லது சேர்க்கைகள் குறித்து பரிந்துரைக்கும்.

மனுக்கள் குழு (Committee on Petitions) :

அதிகபட்சம் பதினோரு உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு, தமக்கு வரும் அனைத்துவிதமான மனுக்களையும் ஆராய்ந்து அத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்புகள்/நபர்களின் கருத்துக்களைக் கேட்டு பேரவைக்குத் தக்க பரிந்துரைகளை அளிக்கும்.

பேரவை நூலகக் குழு (Library Committee) :

அதிகபட்சம் பத்து உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு, பேரவையின் நூலகம், நூலக உறுப்பினர்களுக்கான உதவிப் பணிகளைப் பொறுத்த கொள்கை முடிவுகள் மற்றும் அவற்றின் வளர்ச்சி விரிவாக்க ஆலோசனைகள் ஆகியவற்றை ஆராய்ந்து முடிவு செய்யும்.

பேரவையின் முன்வைக்கப்படும் ஏடுகள் குழு (Committee on Paper Laid on the table) :

அதிகபட்சம் பதினோரு உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு, வரையறுக்கப்பட்டுள்ளபடி பரிந்துரை அறிக்கைகள் வைக்கப்பட்டுள்ளனவா, குறிப்பிட்ட காலத்திற்குள் வைக்கப்பட்டுள்ளதா, காலதாமதத்திற்கான விளக்கமளிக்கப்பட்டுள்ளதா உள்ளிட்டவற்றை ஆராய்வதுடன், அவையில் வைக்கப்பட்ட ஏடுகள் குறித்த பேரவைத் தலைவரால் அவ்வப்போது ஒதுக்கப்படும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஆண்டுதோறும் சட்டப் பேரவைத் தலைவரால் அமைக்கப்படும் இக்குழுக்கள், தமிழகத்தில் 15-ஆவது சட்டசபை அமைந்து 5 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் ஏற்படுத்தப்படவில்லை. இது குறித்து சபாநாயகரிடம் எதிர்கட்சிகள் முறையிட்ட போது, கூடிய விரைவில் ஏற்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் பல நாட்கள் கடந்துவிட்ட நிலையில் எதிர்கட்சிகள் சபாநாயகரிடம் மீண்டும் முறையிட்டன. விரைவில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில் சபாநாயகரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x