முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் : 6 – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் : 6 – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

படை பலத்தைப் பெருக்கு

போர் தந்திரம் 5

ஒரு தளபதியின் படைபலத்தைப் (resources) பொறுத்தே அவனுக்கு வெற்றி, தோல்வி அமையும். அனைத்து படைகளும் முழு பலத்துடனும், தயார் நிலையிலும், உத்வேகத்துடனும் (Motivation) இருப்பது அவனுக்கு வெற்றியைத் தேடித்தரும். படைகளை முழுமையாக திரட்டத் தவறியவர்கள் போரில் எக்காலமும் வெல்ல இயலாது.

படைத் தளபதியிடம் தரைப்படை, கப்பற்படை, குதிரைப்படை என்ற பல படைகள் இருக்கும். அத்துடன் அவனது பொருளாதாரம் ஒரு வலிமையைச் சேர்க்க வேண்டும். மன்னனின் ஆசி, மக்கள் ஆதரவு, படைவீரர்களின் அர்ப்பணிப்பு ஆகியவை ஒரு தளபதிக்குப் படை பலத்தைப் பன்மடங்கு பெருக்கும். இவை அனைத்தையும் அவன் கவனத்துடன் வளர்க்க வேண்டும். இத்தனை பலன்களும் பொருந்திய தளபதி ஒரு மாபெரும் தோற்றத்துடன் காட்சியளிப்பான். எதிரியை வெல்வது அவனுக்கு எளிதாகிவிடும்.

1976 ஜூன் 27 ஆம் தேதி AF–139 விமானம் இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) விமான நிலையத்தை விட்டு 254 பயணிகளுடன் புறப்பட்டது. பிற்பகல் 12.10 மணிக்குப் பாலஸ்தீனிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு உகாண்டாவின் ‘என்டபீ (Entebbe) விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இஸ்ரேல் நாட்டை உலுக்கிய இந்த விமானக் கடத்தலை எதிர்கொள்ள Lt.Gen.Mordechai Gur என்ற ராணுவத் தலைவரின் (Chief of Israel Defence Forces) தலைமையில் அதிரடித் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது. அதுவும் இஸ்ரேல் பயணிகள் கடத்தப்பட்ட விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்டபீ விமான நிலையத்தில் புகுந்து, பயணிகளை மீட்பது என்று முடிவானது. இதற்காக 55 நிமிடங்கள் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. விமான நிலையத்தில் இறங்கி துப்பாக்கி ஏந்திய உகாண்டா வீரர்கள் மற்றும் பாலஸ்தீன தீவிரவாதிகளிடமிருந்து பிணையக் கைதிகளை மீட்கும் பணி லெப்டினன்ட் கர்னல் யோனடன் நெடன்யாகு (Lt.Col. Yonatan Netanyahu) விடம் ஒப்படைக்கப்பட்டது. இவரைச் செல்லமாக இஸ்ரேல் ராணுவத்தினர் ‘Yoni’ என்று அழைத்தனர். இவர் படை பலத்தைப் பெருக்கிய ஒரு உன்னத தளபதி.

ஜூலை 3 ஆம் தேதி 16.00 மணிக்கு நான்கு இஸ்ரேல் C–130 Hercules விமானங்கள் டெல் அவிவ்-ஐ விட்டுப் புறப்பட்டு 00.10 மணிக்கு என்டபீ விமான நிலையத்தில் இறங்கின. Yoni தலைமையிலான கமாண்டோ படை அங்கிருந்த உகாண்டா ராணுவத்தினரையும் சமாளித்து, பயணிகளைப் பிணையக் கைதிகளாக அடைத்து வைத்திருந்த கட்டிடத்திற்குள் புகுந்து ‘Wilfried Bose என்ற தீவிரவாதி உட்பட நான்கு தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்று, 105 பிணையக் கைதிகளை மீட்டது. பயணிகளில் இஸ்ரேலியர்கள் அல்லாத (non-Israeli) 148 பேரைக் கடத்தல்காரர்கள் ஏற்கனவே விடுவித்திருந்தனர். அங்கு நடைபெற்ற தாக்குதலில் Yoni சுடப்பட்டு இறந்தார். மேலும் மூன்று பிணையக்கைதிகள் கொல்லப்பட்டு இறந்தனர். ஒரு பிணையக்கைதி அங்கு இல்லை! டோரா ப்ளாக் (Dora Bloch) என்ற 75 வயது பெண் பயணியான அவர், உடல்நலம் சரியில்லை என்று உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலா (Kampala)வில் Mulago என்ற ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மீட்பு நடவடிக்கையினால் கோபமடைந்த உகாண்டா இராணுவத்தினரால் திருமதி டோரா பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.

அப்போது உகாண்டாவின் அதிபராக இருந்த இடிஅமீன், விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகளுக்கு ஆதரவையும், தனது ராணுவத்தினர் மூலம் அவர்களுக்குப் பாதுகாப்பையும் அளித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் சிறப்பாகத் திட்டமிடப்பட்ட இந்த ‘ஆப்ரேஷன் என்டபீ 53 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. 4 தீவிரவாதிகளை மட்டுமின்றி 33 உகாண்டா ராணுவ வீரர்களையும் இஸ்ரேலின் மீட்புப்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற இந்த பிணையக்கைதிகள் மீட்புப் போரை நிகழ்த்தியது இஸ்ரேல் அதிரடிப்படை. இந்தப் படையின் தளபதி, யோனி என்ற யோனடன் நெடன்யாகு, தனது படையைப் பலப்படுத்தினார். விமானப்படை, துப்பாக்கிச் சுடும் வீரர் அணி, மருத்துவப் பிரிவு, தொலை தொடர்புப் பிரிவு என அனைத்தையும் அவர் ஒருங்கிணைத்து, பயிற்சி அளித்தார், அவர்களுடன் சேர்ந்து ஒத்திகையும் பார்த்தார். டெல் அவிவ்-இலிருந்து 2,214 மைல் (3,562 கி.மீ) தூரத்திலுள்ள இன்னொரு நாட்டின் (உகாண்டா) விமான நிலையத்தில் (என்டபீ-இல்) நள்ளிரவில் இறங்கி, அந்நாட்டு ராணுவ வீரர்களின் கோரமான பிடியில் சிக்கித் தவித்த தன் நாட்டு மக்களை பத்திரமாக மீட்டு வீட்டிற்கு கொண்டு சேர்த்தது பாதுகாப்பு வீரனின் ஒரு மகத்தான வெற்றி. அந்த மகத்தான பணியில், மற்றவர்களை உயிரோடு மீட்டாலும் தனது உடல் உயிரின்றி வந்து சேர்ந்தது என்பதில் பெருமைதான் அல்லாமல் இழுக்கு இல்லை. வீரன் மரிப்பது இல்லை.

அத்தகைய வெற்றி வீரன் யோனியின் இளைய சகோதரர் தான் இப்போது இஸ்ரேலின் பிரதம மந்திரியாக இருக்கின்ற பெஞ்சமின் நெடன்யாகு என்பதில் வியப்பு ஏதும் இல்லை அல்லவா. அதுவும் மூன்றாவது முறையாக பிரதமர்!

நவீன உலகின் போர் வீரனான உனக்கு துப்பாக்கி ஏந்திய படைகள் அவசியமில்லை. உனது அறிவு, மனப்பான்மை, உனது சிந்தனை, சமயோசித புத்தி, செயல் திறன், அடைய நினைக்கும் இலக்கு, இலட்சியம் ஆகியவையே உனது படைகளாகும். இப்படைகளை நீ திரட்ட வேண்டும். உனது கோடரியைக் கூர்மைப்படுத்த வேண்டும்.

ஒரு கல்லூரியில் படிக்கும் போது, உனது ஆசிரியர் உனது போர் ஆலோசகர். ஒரு நூலகம், உனது படைகலன். விளையாட்டு மைதானம் ஒரு படை களம். நான்கு ஆண்டுகள் உனது படைக்குப் பயிற்சிக்காலம். இவற்றைப் பயன்படுத்தி மகத்தான வெற்றி பெற உனக்கு அவகாசம் உண்டு.

தந்தையின் தொழிற்சாலை உனக்கு தேவையில்லை. தாயாரின் தோட்டம் உனக்கு வேண்டாம். பெரிய பங்களா அவசியமில்லை. நல்ல நண்பர்கள், நல்ல உறவுகள் மட்டும் போதும்.

தாய், தந்தை, சகோதர சகோதரிகள், நண்பர்கள், நம் மேலதிகாரிகள், சக பணியாளர்கள், நாம் சந்திக்கும் நபர்கள், என அனைவரையுமே நமது படைகளாக மாற்றும் வல்லமை உள்ளவனாக நீ வளர வேண்டும். இவர்கள் உன் தீவிர ரசிகர்களாக வேண்டும். இவர்கள் அனைவரும் உனக்காகப் போரிட முன் வர வேண்டும். அப்போது நீ வெற்றித் திருமகனாவாய். உண்மைத் தளபதியாக மக்கள் முன் உயர்ந்து நிற்பாய்.
இந்திய நாட்டின் ஒரு உண்மைப் போராளி மகாத்மா காந்தி. இவரிடம் ஆயுதமேந்திய படைகள் இருந்ததா? இல்லை! ஆனால் சத்தியம், அகிம்சை என்ற ஆயுதங்கள் இருந்தன. ஆயுதமில்லாத கோடிக்கணக்கான பாமரர்கள் அவருடன் இருந்தனர். அவருக்காக போரிட்டனர். ஏன் பல்லாயிரக்கணக்கானோர் அவருக்காக தம் உயிரையும் கொடுத்தனர். இது அவரது படை பலம் அல்லவா?.

ஒரு நல்ல போர்வீரன் தனது படைகளை ஒரு இலக்கை நோக்கி திரட்டி அதனை ஒரு வெற்றிப்படையாக மாற்றும் போது அவன் நினைவில் வைத்துக் கொள்ள 18 அம்சங்கள் உண்டு.

வாழ்க்கையில் நாம் எதுவரைச் சென்றோம் என்பது முக்கியமில்லை, எதை நோக்கிச் சென்றோம் என்பதே முக்கியம். உங்கள் வாழ்க்கைப் பயணத்தை நீங்களே தேர்ந்தெடுங்கள். ஏனென்றால் வேறு எவராலும் உங்கள் கால்களைக் கொண்டு நடக்க முடியாது! உங்களது பயணத்தை வெற்றிகரமாக முடிக்க உங்கள் கால்கள்தான் உதவும். உங்களிடம் படைபலம் உள்ளது.

நீயே ஒரு படைதான். நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனையும் உனது படைவீரனாக மாற்றும் மந்திர சக்தியைக் கற்றுக் கொள். மனிதர்களை ஆளக்கூடிய பழக்கத்திலும், யுக்தியிலும் வல்லுநராக நீ மாறு. ஒரு மந்திரவாதியைப் போல நீ செய்யும் செயல்கள் வெற்றிகளாக மாறுவதை நீயே காண்பாய்.
வலிமையான படையை நடத்துபவன் போரைக் கண்டு அஞ்சுவதில்லை. அவனது தனிப்பட்ட வீரம் படைக்கு அசாதாரண தைரியத்தைச் சேர்க்கும்.

படைபலத்தைப் பெருக்கு, தினமும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x