முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் : 5 – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் : 5 – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

அவசரத்தை உருவாக்கு

போர் தந்திரம் 4

நிகழ்காலத்தைக் கடத்தி எதிர்காலத்தில் போரிடலாம் என்று இருந்தவர்களை எதிரிப் படைகள் வீழ்த்திய வரலாறுதான் உலக வரலாறு. எதிர்காலத்தில் சாதிக்கலாம் என்றும் அதற்கு பின்னர் முயற்சிக்கலாம் என்றும் இருந்துவிட்டு இன்றைய நேரத்தை வீணடித்தவர்கள் வீழ்ந்ததுதான் வரலாறு.

ஆற அமர்ந்து மெத்தனமாக இருந்தவர்கள் எவரும் சாதித்தது இல்லை. அவசரம் காட்டி தன்னைப் போருக்குத் தயார் செய்து கொண்டு கால நேரத்தில் படைக்கலன்களைத் திரட்டி, படைத்தளபதிகளை நியமித்து படையெடுத்தவர்கள்தான் வெற்றி பெற்றுள்ளனர், அலெக்ஸாண்டர், அசோகர், பிருத்விராஜ் சவுகன், பாபர், நெப்போலியன், காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோர் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

இந்தப் பட்டியலில் நீயும் இடம் பிடிக்க வேண்டுமல்லவா? இவர்களைப் போல் உலகம் உன்னை அறிய அவசரமாக பெரிய உலக சாதனைகள் செய்ய வேண்டியதில்லை. அந்தச் சாதனை Group IV தேர்வாகக் கூட இருக்கலாம். போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வாகவும் இருக்கலாம்.

பொருளாதாரத்தில், தொழிலில், தனி வாழ்க்கையில், சமுக வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதற்கு முதலில் விளையாட்டுத்தனத்தை விட்டுவிடு. Get serious. உலகம் ஒரு கடினமான போர்க்களம் என்பதை உணர்ந்து விடு. காமெடி பண்ணும் இடம் இல்லை இது. அதற்கான நேரமும் இல்லை உனக்கு. உண்மையிலே நீ ஒரு கதாநாயகன் என்பதை ஏற்றுக் கொள்.

ஆற்றலை வளர்ப்பதில், உடல் நலம் பேணுவதில், புத்தகங்களைப் படிப்பதில், மனித உறவுகளை (relationship) வளர்ப்பதில் அவசரம் காட்டுதல் வேண்டும். அவசரமில்லாதவர்கள் தங்களது நிகழ்காலத்தை வீணடித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

வெற்றிகள் ஒரு முறை மட்டுமே என்பதல்ல; அது தொடர்கதையாக வேண்டும். ஒரு போர் வீரனுக்குக் கடைசி மூச்சு வரை வெற்றிகள் குவிய வேண்டும். எனவே அவன் ஒரு போர்க்களத்தில் வெற்றியைக் கண்டவுடன் அடுத்தப் போர்க்களத்திற்குத் தயாராக வேண்டும், அதற்கு அவன் அவசரம் காட்ட வேண்டும்.

Carl Lewis என்பவர் ஓட்டப்பந்தய வீரர். அவர் 1984 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சலெஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 4 தங்கப்பதக்கங்களைப் பெற்றார், அவர் 100 மீட்டர் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற உடன் அவரிடம், ஒலிம்பிக் போட்டிகள் முடிந்துள்ளது, உங்களின் உடனடி ஓய்வுத் திட்டம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர் நாளை முதல் அடுத்த ஒலிம்பிக் (1988) போட்டிக்குப் பயிற்சியை ஆரம்பிக்கிறேன் என்றாராம். ஒரு ஒலிம்பிக் போர்வீரனின் அவசரத்தைப் பாருங்கள். அப்படி அவசரப்பட்டதால்தான், 1988 ஆம் ஆண்டு சியோலில் நடந்த ஒலிம்பிக்கிலும் அவர் இரண்டு தங்கப்பதக்கங்களைப் பெற்றார். மேலும், அதற்கடுத்த 1992 -இல் பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக்கிலும் இரண்டு தங்கப்பதக்கங்களைப் பெற்றார்!

பந்தயக் குதிரைகளைப் பார்த்திருப்பீர்கள், அவை வெற்றி பெறும் போது பரிசுகள் குவியும். அவற்றின் மதிப்பும் அதிகரிக்கும். அதற்குப் பிறகு அவை ஓய்வு எடுக்கப்போவது இல்லை. அடுத்த போட்டியில் வெற்றி பெற அவை இன்னும் வேகமாக ஓட வேண்டும். அதைதான் உனக்கும் நான் சொல்கிறேன். முதல் வெற்றி பெற குதிரையைப் போல் ஓடு. இரண்டாவது வெற்றிக்கு குதிரையை விட வேகமாக ஓடு. தற்போது ஓடாத மனிதனுக்கு வெற்றி இல்லை.

ஓய்வு எடுக்கச் சென்றவன் ஓடமுடியாது. வீரனுக்கு ஓய்வு இல்லை, ஓயாத பயிற்சிதான் உண்டு. ஓய்வில் சுகம் கண்டவன் அதிலிருந்து எழ முடியாது. அவனுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள அவசரம் இல்லை. எதிரிகளையும் ஆபத்துகளையும், சிரமங்களையும், துரோகங்களையும், எதிர்கொள்ள படை பலம் இல்லை. எடுத்த எடுப்பிலேயே தோற்கடிக்கப்படுவான் அவன்.

ஒரு மூலையில் தள்ளப்படும்போது; உயிருக்கே ஆபத்து என்றால் சிறுத்தைப்புலி தாக்க முற்படும். அப்போது அது வெறியுடன் போரிடும். அப்படி ஒரு மூலைக்குத் தள்ளப்பட்ட சிறுத்தைப்புலியை விட தைரியம் மிக்க மிருகம் நமது காடுகளில் இல்லை!

பெரிய படையினால் சூழப்பட்ட சிறிய படை ஆக்ரோஷமாக மோதும், அப்போது தான் அவர்கள் உயிர் பிழைக்க முடியும், முடிந்தால் வெற்றிபெறவும் முடியும். கிளைவ் தலைமையிலான படைகள் வேலூரில் ஆக்ரோஷமாக மோதியதால் பல மடங்கு பெரிய படையை எளிதில் தோற்கடித்தன. இது நடந்தது 1751 ஆம் ஆண்டு. 320 சிப்பாய்களுடன், 10,000 பேர் கொண்ட எதிரிப்படைகளை வேலூர் கோட்டைக்குள் நுழைய விடாமல் 50 நாட்கள் தாக்குப்பிடித்தார் கிளைவ்.

நாம் சிறியவராக இருக்கலாம், எளியவராக இருக்கலாம், உடல் வலிமை இல்லாமல் இருக்கலாம். அறிவு ஆற்றல் குறைந்தவராக இருக்கலாம், தோல்வி அடைந்து விடலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் விழும் போது எழுந்திருந்து தீவிரமாக போர் புரிந்தால், நமக்கு வெற்றி கிடைக்கும். வீழ்ந்தபின் அவசரம் வேண்டும். அதை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிலவேளை முதல் முயற்சியில் வெற்றி கிடைக்காது. ஆனால் ஆக்ரோஷத்தைக் குறைக்கக்கூடாது. தொடர்முயற்சி செய்ய வேண்டும். உனது முயற்சி உன்னைப் பலமுறை கைவிடலாம். ஆனால் நீ ஒரு முறை கூட அதைக் கைவிடக் கூடாது. உழைப்பும் நம்பிக்கையும் இருக்கும் இடத்தில் ஏழ்மை இருக்காது. பலவீனமும் இருக்காது. அரிய சாதனைகள் எல்லாம் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல. அவை விடாமுயற்சியால் விளைந்தவை.

ஏழையாக இருக்கும் நீ எடுத்த காரியத்தில் தீவிரம் காட்டுதல் வேண்டும். இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதுதான் உன் நிலைமை. ஒரு மூலைக்குத் தள்ளப்பட்ட சிறுத்தைப்புலியைப் போல படுஆக்ரோஷத்துடன் தாக்குதல் நடத்த வேண்டும். இந்த செயலில் வெற்றி இல்லை என்றால் மரணம் தான் என்ற உணர்வு வேண்டும். எதிரிகள் நம்மைத் தாக்கும்போது, உயிரைக் காப்பற்றிக் கொள்ளப் போராடுபவன், ஒரு போர் வீரனைப் போல போரிட்டாக வேண்டும். அப்படி போரிட்டால் எந்த எதிரியையும் வென்றுவிடலாம். எந்தப் பிரச்னையையும் சமாளிக்கலாம்.

அவசரமும் காட்டி, தீவிர முயற்சியிலும் ஈடுபடுபவன் நிகழ்காலத்தை நன்கு பயன்படுத்திக் கொள்கிறான். அவனது அறிவும், செயல் திறனும், தலைமைப் பண்புகளும், துணிச்சலும், தன்னம்பிக்கையும் வளரும். விழுந்தாலும் அவன் எழுவான்.

நூறாவது முறையாகக் கீழே விழுந்தவனைப் பார்த்து பூமி கட்டியணைத்துச் சொன்னது- நீ 99 முறை எழுந்தவன் தானே என்று…

காலம் உங்களுக்காக காத்துக் கிடப்பது இல்லை. செய்து முடித்தால் வாழ்வு… வென்றால் வாழ்வு, வெல்லத் தவறினால் சாவுதான் என்று அறிந்து உடனே செயலைத் துவங்குங்கள். நீங்கள் IAS அதிகாரியாக ஆவீர்கள்.
17 வயதில் ஏமன் நாட்டிற்குச் சென்று ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்த திருபாய் அம்பானி, தனது 70 வயதில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரானார். பணி செய்ய ஆரம்பித்தது 17 வயதில்!

19 வயதில் சேவையின் தாகத்தால் இந்தியாவிற்கு வந்து கடும் எதிர்ப்புக்களைச் சமாளித்து ஏழைகளுக்குத் தொண்டு செய்த அன்னை தெரசாவுக்கு 69 ஆவது வயதில் நோபல் பரிசு கிடைத்தது. 123 நாடுகளில் அவரது தொண்டு நிறுவனங்கள் உள்ளன. பணியில் தன்னை அர்ப்பணித்தது 19 வயதில்.

மென்பொருள் உற்பத்தி (Software Development) ஆரம்பித்த காலகட்டம் : 1981 ஆம் ஆண்டு `10,000 முதலீடு செய்து Infosys என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார் நாராயண மூர்த்தி. இன்று அது ` 10,000 கோடி வர்த்தக நிறுவனம். இங்கு 1.58 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் பிறகு பார்க்கலாம் என்று காரியத்தை ஒத்திப்போடவில்லை. சிறுவயது என்றும் பொறுமை காக்கவில்லை! அவசரப்பட்டு செயல்பட்டார்கள். பொறுத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் கிடைக்கும். விரைந்து செயல்படுபவர்களுக்கு வெற்றி கிட்டும்.

’எனக்கு சின்ன வயதுதானே என்று நினைத்து பின்வாங்கி விடாதீர்கள். வளர்ந்தபின் பார்க்கலாம் என்று ஒத்திப் போடாதீர்கள். பிறகு சின்னவர்களே உங்களை வென்றுவிடுவார்கள். செய்ய வேண்டிய காலம் இன்றுதான் என்பதை உணருங்கள்.

நினைத்த காரியத்தை உடனே செய்யுங்கள். 16 வயது மலாலா என்ற பெண், தான் நினைத்ததைப், பெண்கல்வியின் தேவையைத் தைரியமாக எடுத்துச் சொன்னாள். அதற்காக தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டாள். குண்டடிபட்டும் அவள் சாகவில்லை, இன்று பெண்கல்வியின் போராளியாக, பெண் போர்த் தளபதியாகத் திகழ்கிறாள். போராளிகள் மரிப்பது இல்லை, அவர்கள் புகழ்பெற்று வாழ்வர்.

சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞரின் அரிய போர் தந்திரம் – சாதித்தவர்கள் கையாண்ட போர் தந்திரம் – என்பது, நாமாகவே ஒரு அவசரத்தை உருவாக்குவதுதான். போரின் தத்துவமே, போராடினால்தான் வெற்றி, இல்லையேல் மரணம் என்ற மனநிலையுடன் போராடுபவன், களத்தில் இறுதி இரத்தம் இருக்கும் வரை இலக்கை நோக்கி பயணிப்பான் என்பதாகும்.

தப்பித்து ஓட வழிஇல்லை என்றால் ராணுவம் இருமடங்கு ஆக்ரோஷத்துடன் மோதும் என்றார் சீன போர் அறிஞர் சண்-சூ.

மலை, ஆறு அல்லது காடு போன்ற மரண மைதானம் பின்னால் இருந்தால் சண்டையிட்டு வென்றாக வேண்டும். இல்லையேல் போர் வீரர்களுக்கு எதிரியால் மரணம் ஏற்படும்.

மரண பயம் ஏற்பட்டால் ஒருவன் இன்றே போரிடுவான், அவனது நெஞ்சில் சாதனைவெறி தோன்றும். இன்று செயலாற்றவில்லை என்றால் இந்த B.E. படிப்பை மீண்டும் ஒரு ஆண்டு படிக்க வேண்டும் என்ற மரண பயம் ஏற்பட்டால், மாணவன் இன்றே படித்து விடுவான். போதிய மதிப்பெண் இல்லை என்றால், கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி பின்னர் வேலையில்லாத பட்டதாரியாக தெருவில் நிற்க நேரிடும் என்ற மரண பயம் ஏற்படும்போது ஒரு மாணவன் விரும்பிப் படிப்பான்.

‘Crime and Punishment’, ‘The Possessed’, ‘The Brothers Karamazov’ உள்ளிட்ட உலகத் தரமிக்க நாவல்களை எழுதியவர் தோஷ்தோஈவ்ஸ்கி (Dostoevsky). சார் நிக்கோலஸ்-I (Tsar Nicolas-I)என்ற மன்னனுக்கு எதிராக புரட்சி செய்ததற்காக 23 ஏப்ரல் 1849 அன்று சிறைபிடிக்கப்பட்டார். பின்னர் அவருடன் சேர்ந்த 23 பேருக்கும் மரண தண்டனை அளிப்பதாக அறிவித்தனர். அதிர்ச்சியில் உறைந்த தோஷ்தோஈவ்ஸ்கி, ஒருவேளை தனது தண்டனை குறைக்கப்பட்டால் ’ஒவ்வொரு நிமிடத்தையும் நூற்றாண்டாய் கருதி வாழ்வேன், ஒரு நிமிடம் கூட வீணடிக்க மாட்டேன் என்று சபதம் எடுத்தார். சார் (Tsar) மன்னனின் முன்னதாக ஏற்பாடான திட்டத்தின் படி, தோஷ்தோஈவ்ஸ்கி உள்ளிட்ட அனைவருக்கும் மரணதண்டனையானது 4 ஆண்டுகள் சைபிரியா சிறையில் கடுங்காவல் தண்டனையாக குறைக்கப்பட்டது. அந்த நேரத்திலிருந்து அவர் ஒவ்வொரு நிமிடமும் கதைகள், கட்டுரைகள் என்று மனதில் எழுதலானார். காரணம் அவரது கைகளிலும் கால்களிலும் விலங்கிட்டிருந்தனர் சிறை அதிகாரிகள். இந்நிலையிலும் ஒரு நிமிடத்தைக் கூட அவர் வீணடிக்கவில்லை. சோம்பேறித்தனம் வரும்போது அவர் கிடைக்க இருந்த மரணத்தை நினைத்து, மீண்டும் புத்துயிர் பெற்று எழுத ஆரம்பித்தார். சிறையில் இருந்து விடுதலை ஆனதும் பல நூல்களை எழுதி உலக நூலாசிரியரானார்.

இந்த நிமிடம்தான் செயல்பட வேண்டிய நல்ல நேரம்… துணிந்து புத்தகத்தைக் கையில் எடு… நீண்டநேரம் தகவல்களைக் கற்று தெளிவு கொள்… இன்றே உன் வாழ்க்கையில் வெற்றி ஆரம்பமாகும்.

-அடுத்த இதழில் சந்திப்போம்…

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x