முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் : 7 – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் : 7 – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

சச்சரவில் தோல்வியடைந்து போரில் வெற்றிபெறு

போர் தந்திரம் 6

வாழ்க்கையின் நோக்கமே அமைதி என்றாலும் பல போர்களைக் சந்திக்க வேண்டியுள்ளது. கல்வி, தொழில், உடல் நலம், குடும்பவாழ்க்கை, மனித உறவுகள், பொருளாதாரம், மனநலம், ஆன்மிகம் என்று பற்பல போர்கள். ஒவ்வொரு போரிலும் பல போர்க்களங்கள். பின்னர் இறுதிப் போர். இவ்வாறாகத் தொடர்ந்து வருகின்றன போர்கள். ஒவ்வொரு போர்க்களத்திலும் வெற்றி என்பது நல்லது என்றாலும் அப்படி உலகில் எவருக்கும் வெற்றி மேல் வெற்றி அமைந்து விடுவது இல்லை. பல போர்க்களங்களில் தோல்வி கண்டவனுக்குத்தான் இறுதிப் போரில் வெற்றி கிடைக்கிறது.

சண்டை சச்சரவுகள் பலவற்றில் எதிரிகளுக்கு வெற்றியை விட்டுக் கொடுத்து, போரின் தன்மையைப் புரிந்து கொண்டு இறுதிப் போரில் வெற்றி அடைபவன்தான் சிறந்த போர்த்தளபதி. அவனுக்குத்தான் நாட்டை விஸ்தீரணம் செய்ய முடிந்திருக்கிறது. அபகரித்த நாட்டின் மக்கள் அவனை வெறுத்தபோதும், அவன் அவர்களுக்காக தனது அன்பையும் ஆதரவையும் தெரிவித்து, தனது தரப்பை நியாயப்படுத்திக்கொண்ட பின்னரே, அவனால் வீழ்த்தப்பட்ட அன்னிய நாட்டு மக்கள் அவனை நேசிக்க ஆரம்பித்தனர் என்பது கடந்த கால வரலாறு. பாபர், பின்னர் ஹூமாயூன், இவர்களுக்குப் பின் வந்த அக்பர், ஆகியோர் தாங்கள் அரசாட்சியில் ஆண்ட மக்களை மிகவும் நேசித்தனர். அக்பர் ஒரு ஆட்சியாளராக இருந்தும் தனது பிரஜைகளின் மதமான இந்து மதத்தை அவர் மதித்தார். இந்து பெண் ஹீரா கன்வர் என்ற ஜோதா பாய்-ஐ திருமணம் செய்து கொண்டார். ‘தின் இலாஹி (Din-e Ilahi) என்ற ஒரு தெய்வீக மதத்தை நிறுவி தான் ஒரு நடுநிலையானவன் (neutral) என்பதை எடுத்துக் கூறி தலை வணங்கினார். ’கடவுளின் மதம் (religion of God) என்ற அர்த்தத்தைக் கொண்ட தின்-இலாஹி, இந்து மதம், கிறிஸ்தவ மதம், ஜைன மதம், பார்சி மதம் ஆகியவற்றிலிருந்த கருத்துக்களை உள்ளடக்கி, உருவாக்கப்பட்டிருந்தது. அக்பர் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும், பிற மத கோட்பாடுகளையும் ஏற்று நடந்ததால், அது அவரை இறுதிப்போருக்கு அழைத்துச் சென்றது. இந்தியத் துணைக் கண்டத்தையே ஆள முடிந்தது. தன்னை வெறுத்த பிரஜைகளுடன் சச்சரவுகளில் தோல்வியைத் தழுவி பின்னர் அம்மக்களை வென்றார் இவர்.

ஒரு சிலருக்கு ஆரம்பக்கல்வியில் தோல்வி ஏற்படலாம். ஆனால் அவர்கள் சுதாரித்துக் கொண்டு அத்தேர்வினை மீண்டும் எழுதி வெற்றி பெற்று, உயர்கல்வியில் கவனம் செலுத்தி பட்டம் பெற்று பின்னர் பொறுப்பான வேலையில் அமர்ந்துவிடுவர். அப்படி ஒரு சிறுவன் 10-ஆம் வகுப்பில் தோல்வியுற்றான். அது ஒரு போர்களத் தோல்வித்தான். அதை ஓர் அவமானமாகக் கருதி வெட்கப்பட்டான். வருந்தினான். இன்னும் சொல்லப்போனால் கண்ணீர் விட்டு அழுதான். சரியாகப் படிக்காததன் தவறை உணர்ந்தான். எதிரிகள் என்னை வீழ்த்தவில்லை, என்னை நானே வீழ்த்திக்கொண்டேன் என்று புரிந்து கொண்டான். பின்னர் அடுத்தப்போர்க்களத்தில் இறங்கினான். கடின உழைப்புடன் திட்டமிட்டு, செயல்பட்டு, களத்தில் இறங்கிப் போராடினான். தோல்வியடைந்த பாடத்தை மீண்டும் படித்து தேர்வில் வெற்றி கண்டான். இழந்த மரியாதையை மீட்டான். பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியானான் அச்சிறுவன். அதற்குப் பிறகு அவர் பல போர்க்களங்களைச் சந்தித்திருக்கக் கூடும். பல வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கலாம். சில வழக்குகளில் தோல்வி இருந்திருக்கலாம். ஆனால் அந்தப் போர்வீரர் தமது இறுதிப் போரில் வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டார். அவரை வாழ்த்துவோம். சாதித்தார் என்பதற்காக மட்டுமல்ல, பல சாதனையாளர்களுக்குத் தூண்டுகோலாகவும் இருந்தார் என்பதற்காக.

பல போர்க்களங்களில் எதிரிகள் சூழ்ச்சியால் நம்மை வீழ்த்துவர். அவர்கள் நமது உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ, எதிரிகளாகவோ இருக்கக்கூடும். சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் இயற்கையாகவே நமக்கு பாதகமாக அமைந்துவிடலாம். இந்த எதிரிகளிடம் எரிச்சலடைவதும், அவர்களை வெறுப்பதும் மற்றும் அவர்களைப் பழி வாங்கத் துடிப்பதும், போர் வீரனுக்கு அழகல்ல! இவர்களிடம் நாம் தோற்றுப் போகவில்லை என்று போலியாக எண்ணிக் கொள்வதும் (false rationalisation) நல்லதல்ல. எதிரிகள் நம்மை ஏமாற்றி விட்டனர், சதி செய்து தாக்குதல் நடத்தி நம்மை அழித்துவிட முற்பட்டனர் என்பதில் உண்மை இருப்பின் நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஒப்புக்கொள்ளவேண்டும். இனி என்ன செய்வது? அவர்களைப் பழி வாங்குவதா? திருப்பி அவர்களைத் தாக்கலாமா? பெரியப்பெரிய போர்களில், இறுதியாக வெற்றி பெற விரும்புபவன், பழிக்குப்பழி என்ற நடவடிக்கைகளில் இறங்க மாட்டான்! அதனால் பொருள் சேதம், சில சமயங்களில் உயிர்ச்சேதம், நேர விரயம், மனஉலைச்சல் போன்றவை எல்லாம் ஏற்படும். ஒரு வெற்றிப்போர் வீரன் களத்தில் எதிரியை மண்ணை கவ்வச் செய்து அவனை மன்னித்தும் விடுவான். எதிரிகளுக்கு உதவுவதற்காக அல்ல, அவனுக்கே அவன் உதவுவதற்காக. மறக்க வேண்டியது இல்லை, ஆனால் தீங்கு செய்தவனை அறவே மன்னிக்க வேண்டும். அப்போதுதான் நாம் நிம்மதியாக வாழ முடியும்.

மனித உறவுகள் என்ற போர்க் களத்தில்கூட தோல்விகள் சகஜம். நமது தந்தையிடம் தோற்க வேண்டியது இருக்கும். ஒரு கணினி வாங்கித்தர கேட்பீர்கள், அவர் மறுப்பார். தந்தை தவறு செய்து விட்டார் எனத்தோன்றலாம். ஆனால் அவருடன் மல்லுக்கட்டி நிற்க வேண்டியது இல்லை. கணினி கிடைக்கவில்லை என்ற தோல்வியைத் தாங்கிக்கொள். அடுத்து வரும் செமஸ்டரில் (semester) பல்கலைக் கழகத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்துவிடு. உனது தந்தையே உயர் தர கணினி வாங்கி வந்து உன்னை வியப்பில் ஆழ்த்திவிடுவார்.
களத்தில் ஆரம்பத்தில் உனக்குத் தோல்வி, ஆனால் போரின் இறுதியில் வெற்றிதானே. அதேபோல ஒரு தந்தை தனது மகன் தன்னைப்போல் ஒரு டாக்டர் ஆக வேண்டுமென விரும்பினார். மகனுக்கோ மருத்துவப் படிப்பில் நாட்டமில்லை. ஆக, தந்தை களத்தில் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் அந்த மகனோ கணினி பாடத்தில் ஆர்வம் காட்டி, உயர் படிப்பு படித்து அமெரிக்க நாட்டில் ஒரு பெரிய கணினி கம்பெனியின் உயர் பதவியில் அமர்ந்ததைப் பார்த்தபோது போரில் வெற்றி அடைந்ததை அவர் அனுபவிக்கிறார்.

எனவே நமது நண்பர்கள், உறவினர்களிடம் எப்படிப் பழக வேண்டும், அவர்களது சிறு சிறு தவறுகளை எல்லாம் பெரிதுபடுத்தாமல் எப்படி இருக்க வேண்டும், சச்சரவில் மற்றவர்கள் நம்மைத் தோற்கடித்தாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் எப்படி அந்த உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்பதெல்லாம் நல்ல போர் வீரனுக்குத் தெரிந்திருக்கும். நமக்குத் தெரிந்த போதனையை இப்படிச் சொல்கிறோம்! ஒருவர் சொல்லி நான் செவிவழியாக தெரிந்து கொண்ட பேச்சுத் தத்துவம் இதோ…

இப்படி, பேசுவதில் மட்டுமே பல உணர்வுகளை வெளிப்படுத்தி பேசுவதுதான் போர் கலை! The art of war. இப்படி செயலிலும், சிந்தனையிலும் உறவுகளிலும் போர் கலையைக் கடைபிடி. உனக்கு இறுதிப் போரில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நீ ஒளிர்வாய், இறுதியில் இந்தியா ஒளிரும். இறுதி கட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் வெற்றி என்கிறபோது, நாம் ஒளிர்வதுடன் நாம் வாழும் நம் இந்திய நாடே ஒளிரும்.
வயது நிறைந்த நிலையிலும் ஒரு பணியினைச் செய்து நன்மை ஏற்படுத்த வேண்டும். அப்போது நாட்டிற்குச் செல்வம் இன்னும் பெருகும். இறுதி காலத்தில் பணி செய்யாமல் மந்தமாக இருந்தால் யாருக்கும் நன்மை ஏற்படாது. இறுதி நாட்களில் நமது அறிவினை, நாம் பயின்ற கலையை – தொழிற்கலை அல்லது வாழ்க்கைக் கலையை – இளையவருக்குச் சொல்லித் தரவில்லை என்றால் அந்த நபரால் நாட்டிற்குப் பயனில்லை. அதனால் நாட்டிற்கு நட்டம் ஏற்படுகின்றது. அவருக்கும் நட்டம் ஏற்படுகிறது.

மொகாடிஷு பயணிகள் மீட்பு 1977 (Mogadishu Rescue 1977) மிகவும் பிரசித்தி பெற்றது. ஜெர்மனியின் அதிரடிப்படையான GSG9 வீரர்களின் துணிச்சலான மீட்புத் தாக்குதலை இது பிரதிபலித்தது.

அக்டோபர் 13, 1977 அன்று லூப்தான்சா ப்ளைட் 181 போயிங் 737 விமானம் பால்மா டி மோலோர்கா (ஸ்பெயின்) நகரிலிருந்து ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் நோக்கிப் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் இரு பெண்கள் உட்பட நான்கு தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தினர். ‘கேப்டன் முகமது என்று சொல்லிக் கொண்ட ஜோஹைர் யூஸிப் அகேசி (Zohair Youssif Akache) என்ற பாலஸ்தீன தீவிரவாதிதான் கடத்தலின் தலைவன். விமானத்தை சைப்ரஸ் நாட்டுக்குக் கொண்டு செல்ல கட்டளையிட்டான். ஆனால் விமான பைலட் ஸ்கூமன் விமானத்தில் அதிக எரிபொருள் இல்லை என்றதால், ரோம் நகரில் தரையிறக்கப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டது. பின்னர் பெய்ரூட், டமாஸ்கஸ், பாக்தாத், குவைத், பஹ்ரைன் ஆகிய இடங்களுக்குப் பறந்தது. இறுதியில் துபாயில் இறக்கப்பட்டு மீண்டும் எரிபொருள் நிரப்பப்பட்டது.

இதற்கிடையில் ஜெர்மனியின் அமைச்சர் விஸ்னியூஸ்கி (Wischnewski) துபாய்க்கு அதிரடிப்படையை அனுப்பினார். ஆனால் துபாயின் பாதுகாப்பு அமைச்சர் ஷேக் முகம்மது (Sheijk Mohammed) இதற்கு அனுமதி தரவில்லை. பிறகு, விமானம் ஓமன் நாட்டுக்குச் சென்றது. அங்கு மண்வெளியில் கட்டாய தரையிறக்கம் செய்யப்பட்டதால், விமானத்தின் பாகங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிய விமானி ஸ்கூமனை வெளியே அனுப்பினான் கடத்தல்காரன்.

வெளியே சென்ற ஸ்கூமன் வெகுநேரம் திரும்ப வரவில்லை, அதன்பிறகு விமானி ஸ்கூமன் திரும்பி வந்தபோது, அவரை முட்டியிட வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான் அவன். தாமதமாக வந்ததன் காரணத்தைச் சொல்லக்கூட விமானிக்கு நேரம் தரப்படவில்லை.

அக்டோபர் 17, பின்னிரவு 2 மணிக்கு எரிபொருள் நிரப்பிய விமானம், துணை பைலட் இயக்க, சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாடிஷு நோக்கிக் கிளம்பி, காலை 6.22 க்கு அங்கு தரையிறங்கியது. மாலை 4 மணிக்குள் கடத்தல்காரன், தாங்கள் கோரிய 12 தீவிரவாதிகளுக்கு விடுதலை தரப்படவில்லையெனில், பயணிகளுடன் விமானம் தகர்க்கப்படும் என்று எச்சரித்தான்.

அப்போது அந்த கோரிக்கைக்கு ஒப்புக்கொண்ட ஜெர்மன் அமைச்சர் விஸ்னியூஸ்கி, குறிப்பிடப்பட்ட குற்றவாளிகளை மொகாடிஷுவுக்கு அழைத்து வருவதில் பல மணிநேரம் ஆகும் என்றதால், காலக்கெடு அக்டோபர் 18 பின்னிரவு 2.30 வரை நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையில், சோமாலிய பிரசிடெண்ட் சயத் பர்ரே (Siad Barre)-யுடன் ஜெர்மனி கான்ஸலர் (Chamcellor) ஹெல்முட் ஷிமிட் (Helmut Schmidt) பேச்சுவார்த்தை நடத்தினார். இரவு 8 மணிக்கு முப்பது GSG 9 கமாண்டோக்கள் மொகாடிஷுவுக்கு வந்திறங்கினர்.

பின்னிரவு 02.07 மணி. கமாண்டர் K.வெஜினர் (K.Wegener) திட்டத்தின்படி, முப்பது GSG 9 வீரர்கள் விமானத்தில் இறங்கும் வழியாக ஏறி கதவை வெடிபொருள் வைத்து உடைத்து உள்ளே சென்று, மூன்று தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்று 86 பயணிகளை உயிருடன் மீட்டனர். ஒரு தீவிரவாதி (பெண்) படுகாயத்துடன் பிடிபட்டார். பல பல கட்டங்களில் தோல்வி, ஆனால் இறுதிப்போரில் வெற்றி கிடைத்தது.
சண்டை சச்சரவுகளில் தோல்வி என்றாலும் இறுதிப்போரில் வெற்றிக்காக தொடர்ந்து போராடும் ஓர் இந்தியனாகத்தான் சுவாமி விவேகானந்தர் தன்னை நம்பினார். அப்படிப்பட்ட வீரர்களைக் கொண்ட இந்தியா உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதோ அவரது நம்பிக்கை வரிகள் :

அதி ஆச்சரியமான,
மகிமை வாய்ந்த இந்தியா
தோன்றப் போகிறது.
இதற்கு முன்
எப்போதும் இருந்ததை விட
அது பெருமை பொருந்தி
விளங்கும்.
பண்டைக்கால
ரிஷிகளையும் விட
பெரிய மகான்கள்
தோன்றுவார்கள்.
நம்புங்கள்
உறுதியாக நம்புங்கள்.
இந்தியா கண் விழித்து
எழுந்திருக்க வேண்டும் என்று
ஆண்டவன் கட்டளை
பிறந்து விட்டது.

-அடுத்த இதழில் சந்திப்போம்…

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x