ஆட்சி மாற்றமும் அலைக்கழிக்கப்படும் திட்டங்களும்

ஆட்சி மாற்றமும் அலைக்கழிக்கப்படும் திட்டங்களும்

– வீ.வீ.கே. சுப்புராசு

ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்னும் மாநிலங்களில் அரசியல் கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வரும்போதெல்லாம், முந்தைய அரசியல் கட்சிகள் கொண்டுவந்த திட்டங்களை மாற்றி அமைப்பதோ, அல்லது முற்றிலும் நிறுத்திவிடுவதோ வழக்கமாகிவிட்ட நிலையில் மாநிலங்களின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. தொழில் முன்னேற்றத்தின் வேகம் குறைகிறது. தொழில் முனைவோர் முதலீடுகள் செய்வதற்கு அஞ்சுகிறார்கள். மக்களின் எதிர்ப்புகளை அரசாங்கங்கள் சந்திக்கின்றன. ஆட்சி மாற்றங்கள் என்பது சிறந்த ஜனநாயகத்தை வேரூன்றச் செய்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மைதான். ஆனால் தொழில்கள் வெகுவாகப் பாதிக்கப்படும்போது, மக்கள் தாங்கள் தவறிழைத்துவிட்டோமோ என எண்ணுகின்றனர்.

மக்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கோ நபருக்கோ வாக்களிக்கின்றனர். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கட்சித்தாவல் சட்டத்திற்குட்பட்டு கட்சி மாறிவிடுகிறார்கள். அவர்கள் ஆதாயமும் அடைகின்றனர். ஆனால் ஒருமுறை ஓட்டுப்போட்டு விட்டால் மக்கள் தங்கள் ஓட்டுகளை மாற்ற முடியாது. ஐந்தாண்டுகளுக்கு அவர்கள் வாக்குகள் செல்லாதவை ஆகிவிடுகின்றன. இதில் நமது அரசியல் சாசனத்தில் மக்களுக்கு எந்தவித நிவாரணமும் காணப்படவில்லை. முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் முழுமையாகக் கைவிடப்படல் என்பது, இன்றைய பொருளாதார சூழ்நிலையில் ஏற்கமுடியாததாக உள்ளது. மத்தியில் 2014-இல் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின், பொருளாதார அணுகுமுறையில் ஒருவகையான முதலாளித்துவ பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொண்டதின் விளைவுதான் இந்தப் பொருளாதார தேக்க நிலைக்குக் காரணம். பொருளாதாரத்தில் வெளிப்படைத்தன்மை தேவை. கருப்புப் பணம் ஒழிக்கப்பட வேண்டும். பணப்பரிமாற்றங்களில் டிஜிட்டல் முறை வேண்டும். ஆனால் அவைகள் படிப்படியாகக் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். திடீர் மாற்றம் பொருளாதார வளர்ச்சியை பாதித்துவிட்டது என்றே கூறலாம்.

மாநிலங்களில், உதாரணமாக ஆந்திரப்பிரதேசத்தில் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் ஆட்சிக்கு வந்தபின்பு, சந்திரபாபு நாயுடு கொண்டு வந்த அமராவதி தலைநகரத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இந்தப்புதிய தலைநகர நிர்மானத்திற்காக கிட்டத்தட்ட 50,000 ஏக்கர் நிலங்களை மக்கள் அரசோடு பகிர்ந்து கொண்டார்களே தவிர, விற்கவில்லை. அவர்களுக்கு எந்தப்பணமும் தரப்படவில்லை. இப்போது நிலம் கொடுத்தவர்கள் நிராயுதபாணியாக நின்று கொண்டு கூச்சல் போடுகிறார்கள். தொடர் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

5200 மெகாவாட், காற்றாலை மின்சாரம், சூரிய ஆற்றல் மின்சார திட்டங்கள் முற்றிலும் அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அதற்காக பெறப்பட்ட 21,000 கோடி ரூபாய் கடனின் நிலை என்ன? தனிநபர் முதலீடும் நஷ்டம், வங்கிகளுக்கும் பேரிழப்பு. 3217 கோடி ரூபாய் நீர்மின் திட்டமும் நிறுத்தப்பட்டுவிட்டது. அடிப்படைக் கட்டமைப்புகள் பாதியில் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டன. இதற்காக சிங்கப்பூர் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், இந்தத் திட்டம் நிறைவடைந்தபின் அரசாங்கத்திற்கு வரவேண்டிய 8000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்காது. இன்னும் 5 ஆண்டிற்குள் அமராவதி தலைநகரத்திட்டம் முடிவடைந்தால், ஒரு அழகான சிங்கப்பூர் அங்கே உருவாகியிருக்கும்.

அதேபோல், 1.08 லட்சம் கோடி புல்லட் ரயில் திட்டத்தின் நிலையும் அந்தரத்தில் தொங்குகிறது. 2020 ஜனவரி நிலவரப்படி இத்திட்டத்திற்குத் தேவையான 47 சதவீத நிலம் இரயில்வேயால் கையகப்படுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில், புதிதாகப் பதவியேற்றுள்ள ’தாக்கரே அரசு இந்தத் திட்டத்தில் முட்டுக்கட்டை போட்டால், மக்கள் வரிப்பணம் வீணாகிப் போய்விடும். தாக்கரே அரசு பதவிக்கு வந்தபின், ’ஆரே காலனியில் கட்டப்பட்டு வந்த மெட்ரோ ரயில் பணிமனை வேலைகள் நிறுத்தப்பட்டன. இந்தத் திட்டத்தின் மதிப்பு 32,000 கோடி ரூபாய். சந்திரபாபு நாயுடுவின் 1.1 லட்சம் கோடி அமராவதித் திட்டத்திற்கு ஏற்பட்ட நிலைதான், இந்த புல்லட் ரயில் விஷயத்திலும் ஏற்படும். இதைப்போல் 70,000 கோடி “Hyperloop” திட்டம் என்று சொல்லக்கூடிய மும்பை-பூனே குழாய் வழி பயணத்திட்டம் தாக்கரே ஆட்சிக்கு வந்தபின்பு, கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக நீதிமன்றங்கள் சில ஆணைகளைப் பிறப்பித்த போதிலும், அதை செயல்படுத்த அரசாங்கங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே திட்டங்களை முன்னெடுக்கும் முன்பு, மத்திய அரசால் அகில இந்திய அளவில் ஒரு சட்ட அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதன் முன் அனுமதி பெற்றே பணிகளைத் தொடங்க வேண்டும். அவைகள் முடிவு பெறும்வரை, அந்த அமைப்பு உறுதி தரவேண்டும். இதனால் மாநில அரசுகளின் உரிமைகளும் பறிபோகக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளில், அடிப்படைக் கட்டமைப்புகளில் மாநிலங்கள் 41 சதவீதம் அளவிற்கு முதலீடு செய்துள்ளன. மத்திய அரசு 31 சதவீதமும் 28 சதவீதம் தனியார் முதலீடுகள் இந்தத் துறையில் செய்யப்பட்டுள்ளன. 300 கி.மீ. டெல்லி-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலை 700 கி.மீ மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலை ஆகியவை முக்கிய உதாரணங்கள். எனவே, வருங்காலங்களில், இது போன்று நடைபெறாமல் இருக்க, கடுமையான சட்டத்திட்டங்கள் தேவை. அவைகளை மேற்பார்வையிட, வலுவான அதிகாரங்கள் படைத்த அமைப்புகள் தேவை. கைவிடப்பட்ட திட்டங்களை நாம் நேரில் பார்க்கும் போது மிகுந்த வேதனைகளே மிஞ்சுகின்றன.