இந்தியத் தொழில்துறையில், “கரோனாவின் தாக்கம்”

இந்தியத் தொழில்துறையில், “கரோனாவின் தாக்கம்”

– வீ.வீ.கே. சுப்புராஜ்

சீனாவின் “கரோனா” நோய்க்கிருமி 40 சதவீத உலக மக்களை பாதிக்கும் என்று மார்க் லிட்சிட்ச் என்ற ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை 1 அல்லது 2 சதவீதமாக இருந்தாலும், கிட்டத்தட்ட உலகத்தின் மக்கள்தொகையில் 7 கோடிப் பேர் காணாமல் போய்விடுவார்கள். இது ஒரு பேரிழப்பாக அமைந்துவிடும். இதனால் உலகளாவிய தொழில்துறை மிக மோசமாகப் பாதிக்கப்படும்.

டன் & பிராட்ஸ்ரீட் (Don & Bradstreet) என்ற பகுப்பாய்வு நிறுவனம் கூறுவது என்னவென்றால், 51,000 பெரிய நிறுவனங்கள், தங்களுடைய ஏதாவது ஒரு கிளையையோ, கிளை நிறுவனத்தையோ, சீனாவில் அமைத்துள்ளன. பார்ச்சூன் 1000 நிறுவனங்களில் அடங்கும் 163 நிறுவனங்கள், சீனாவின் வூகான் மாநிலத்தின் தொழிற்துறையில் நேரடிப்பங்கில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. 50 லட்சம் நிறுவனங்கள் சீனாவின் மொத்த தொழிற்துறையில் ஏதாவது ஒரு விதத்தில் நேரடிப் பங்கில் உள்ளன.

இந்தியா-சீனா வர்த்தகம் ஆண்டிற்கு 87 பில்லியன் டாலர்களாகும். 70 பில்லியன் டாலர் அளவிற்கு சீனா, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் ஏற்றுமதியில் ரசாயனப் பொருட்கள், பருத்தி, தாதுக்கள், நெகிழிப் பொருட்கள், அணு உபகரணங்கள், மின்சாரக் கருவிகள், இரும்பு மற்றும் எஃகு முதலியன. சீனாதான் இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு வர்த்தகப் பங்குதாரர். சீனாவின் மொத்த ஏற்றுமதியில் 13.7 சதவீதம் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியா 5.1 சதவீதம் ஏற்றுமதி செய்கிறது. (2018-19) இந்தியாவில் மிக முக்கியமாகப் பாதிக்கப்படும் துறை செல்லிடப் பேசி உபகரணங்கள் துறை. இன்று அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது செல்லிடப்பேசி சந்தை இந்தியாதான். இந்தியாவில் ஆண்டிற்கு 30 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தத் துறையில் வியாபாரம் நடக்கிறது.

சூரிய மின் உற்பத்தியில், இந்தியா தன் முழுக்கவனத்தையும் செலுத்திவரும் இந்த சமயத்தில், இந்தத் துறைக்குத் தேவையான 80 சதவீத உபகரணங்களை சீனாதான் ஏற்றுமதி செய்கிறது. இந்தத்துறை மிகவும் பாதிப்பிற்குள்ளாகும்.

கடந்த பத்து ஆண்டுகளில், சீனாவிலிருந்து மிகக்குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட சூரிய சக்தி உற்பத்திக்குத் தேவையான சாதனங்களால், மின்சார விநியோகத்தை குறைந்த விலையில் மக்களுக்கு அளிக்க முடிந்தது. இதனால், இந்திய உபகரண உற்பத்தியாளர்கள் பலர் தங்கள் நிறுவனங்களை மூடிவிட்டனர்.

இந்திய வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் வீட்டு உபயோகப் பொருட்களில் 40 சதவீதம் ஏதோ ஒரு விதத்தில் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. 31 பில்லியன் டாலர் மின் வணிகத்தில், பாதிக்கு மேல் வாங்கப்படும் பொருட்கள் சீனாவில் தயாராபவை. உலக அளவில் விற்கப்படும் 160 மில்லியன் கைபேசிகளில் 40 சதவீதத்தை இந்தியர்கள் மின் வர்த்தகம் மூலம் வாங்குகிறார்கள். “கரோனா” நோய்க் கிருமியால் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது இந்திய உள்நாட்டு உற்பத்தியை எந்த அளவில் பாதிக்கும் என்று தெரியவில்லை. இந்தியத் தொழில்துறையில் தேவையான இடுபொருட்கள் சீனாவிலிருந்து கிடைக்கவில்லை எனில், இந்திய உள்நாட்டு உற்பத்தி மேலும் மோசமாக பாதிக்கப்படும். ஏற்கனவே இரண்டு மூன்று மாதங்களுக்கு இருப்பு உள்ளதால், இதன் முழுத்தாக்கம் வருங்காலங்களில்தான் உணரப்படும்.

சீனா, உலகிற்குத் தேவையான 30 கோடி கணினிகளில் 90 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. 200 கோடி கைபேசிகளில் 70 சதவீதம் சீனாவில்தான் தயாராகின்றன. 11 கோடி குளிர்சாதனக் கருவிகளில் 80 சதவீதம் சீனாவில்தான் உற்பத்தியாகின்றன. சாம்சங்க், ஆப்பிள், நோக்கியா, எரிக்சன், சிஸ்கோ, இந்திய செயனே கூநதயள, தவிர மற்ற அனைத்தும் சீன உற்பத்தியே.

அடுத்த நிதிஆண்டில், முதல் காலாண்டில் பெரிய பிரச்சினைகள் இல்லாமல் போகலாம். அதற்கடுத்த காலாண்டில் பாதிப்பு கடுமையாக இருக்கும். கார் தயாரிப்பாளர்கள், பல உபகரணங்களுக்காக சீனாவையே நம்பி இருக்கின்றனர். காலணிகள், விளையாட்டு சாதனங்கள் கூட பெருமளவு சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில், சீனாவின் தாக்கம் ஏதாவதொரு விதத்தில் இருக்கிறது.

2003-இல் “சார்ஸ்” கிருமி பரவியபோது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உலக உற்பத்தியில் 4 சதவீதம். இது இப்போது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே, மோசமான பாதிப்புகள் ஏற்படலாம். “கரோனா” வைரஸ் கட்டுப்படுமா? நம்மை ஒருகை பார்த்துவிட்டுத்தான் போகுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.