இனி குரூப் 4, 2 தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்: TNPSC அதிரடி

இனி குரூப் 4, 2 தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்: TNPSC அதிரடி

TNPSC Exam Pattern: இனி வரும் காலங்களில் குரூப் 4, குரூப் 2 தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும் என்று பல அதிரடி முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

Tamil Nadu Public Service Commission (TNPSC) எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (பிப்.15) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ‘டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் அவ்வபோது தனது தேர்வு முறைகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு ஆதார் கட்டாயம் உள்ளிட்ட முக்கிய மாற்றங்களை அறிவித்தது.

இதன் அடுத்தக்கட்டமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்த்திருத்தங்கள் பற்றி பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்வாணையக் குழுமம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன் முக்கிய அம்சங்களை இங்கு காணலாம்.

1. இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறும்

தொகுதி 4, தொகுதி 2 ஏ போன்ற தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும். இதுவரையில் பொது அறிவுத்தாள் மட்டுமே கொண்ட ஒரு தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இனி அது முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். தேர்வர்கள் அதற்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்