Rs.500, Rs.1,000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறும் அரசின் நடவடிக்கை – ஒரு முழு அலசல்

Rs.500, Rs.1,000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறும் அரசின் நடவடிக்கை – ஒரு முழு அலசல்

சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாதவாறு எவரும் எதிர்பாராத வகையில், எதிர்பாராத சமயத்தில் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. பொருளாதார துல்லியத் தாக்குதலாக கருதப்படும் இந்நடவடிக்கை ஒட்டுமொத்த இந்திய தேசத்தினையும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது. 2016 நவம்பர் 8, அன்று இரவு 8.15 மணிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தொலைக்காட்சி நேரலையில் தோன்றி, நள்ளிரவு 12 மணி முதல் (2016 நவம்பர் 9) புழக்கத்திலுள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது எனவும் அத்தகைய பழைய நோட்டுக்களை தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் அளித்து புதிதாக அச்சிடப்பட்டுள்ள `500 மற்றும் `2000 நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்தார். பொருளாதாரத்தினை மேம்படுத்துவதுடன் நாட்டில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்களின் புழக்கத்தினை ஒழிக்கவும், அவற்றின் மூலம் போதைப் பொருள் கடத்தல், பயங்கரவாதம் உள்ளிட்டவற்றிற்கு தாராளமாகப் பணம் கிடைப்பதை முற்றிலும் தடுக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அறிவித்த பிரதமர், வங்கிகளில் பணம் போடவும் எடுக்கவும் சில கட்டுப்பாடுகளை விதித்ததுடன் 2016 டிசம்பர் 31-ஆம் தேதி புழக்கத்திலிருந்த பழைய `500, `1000 ரூபாய் நோட்டுக்களை புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள கடைசி நாள் என அறிவித்தார். அதன் பிறகு மார்ச் 31-ந்தேதி வரை ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்குட்பட்டு மாற்றிக்கொள்ளலாம் என்ற சலுகையும் அறிவிக்கப்பட்டது. மிக முக்கிய சிலரைத் தவிர மத்திய அமைச்சர்கள் பலருக்கே கூட தெரியாத அளவிற்கு இரகசியமாக திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட இத்திட்டம் தேசிய அளவில் குறிப்பாக கணக்கில் வராத பணத்தினை வைத்துள்ளோருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நவம்பர் 9 முதல் அனைத்து அஞ்சல் நிலையங்கள் மற்றும் வங்கிகளிலும் தங்களுடைய பழைய பணத்தினை மாற்றி புதிய நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ள மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வங்கியிலிருந்து பணத்தினை திரும்பப் பெற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டுள்ளவர்கள் சிரமம் அடைகின்றனர். பல்வேறு தரப்பினரும் இத்திட்டத்தினை வரவேற்றாலும் திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் இத்திட்டத்தினை தீவிரமாக எதிர்த்து வருகின்றன.

கருப்புப் பண ஒழிப்பு, கள்ளநோட்டுக்களின் புழக்கத்தினைக் கட்டுப்படுத்துதல் இவற்றின் மூலம் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் இணைப் பொருளாதாரம் (Parallel Economy) எனப்படும் கருப்புப்பண பொருளாதாரத்திற்கு முடிவு கட்டுதல், போதைப் பொருள் கடத்துபவர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது போன்ற நோக்கங்களுக்காக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி, இந்தியாவில் புழக்கத்திலுள்ள மொத்த ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு `17.77 லட்சம் கோடி. இது நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஏறத்தாழ
12 சதவிகிதமாகும். இதில் `14.18 லட்சம் கோடி (86 சதவிகிதம்) மதிப்பிலான நோட்டுக்கள் `500, `1000 ரூபாய் நோட்டுக்கள் ஆகும். இது புழக்கத்தில் உள்ள 9,026 கோடி ரூபாய் நோட்டுக்களில் 24 சதவிகிதமாகும் (ஏறத்தாழ 2,203 கோடி நோட்டுக்கள்). இத்தகைய அதிக எண்ணிக்கையிலான உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை கருப்புப் பண பதுக்கலுக்கு உதவிகரமாகத் திகழ்கின்றது.
2011-ற்குப் பிறகு புழக்கத்திலுள்ள `500, `1000 நோட்டுக்களின் எண்ணிக்கை முறையே 76 மற்றும் 109 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதில் கள்ள நோட்டுக்களின் பங்கு கணிசமானது. இத்தகைய கள்ள நோட்டுக்கள் இந்தியப் பொருளாதாரத்திற்கு தீராத தலைவலியை  ஏற்படுத்துவதுடன் பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு தேவையான நிதி கிடைக்க வழிவகை செய்கின்றது. மேலும் போதை மருந்துகள், கள்ளக் கடத்தல் ஆகியவற்றிற்கும் துணை புரிந்து நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறது.

கருப்புப் பணம்:

முறைகேடாகவோ அல்லது சரியான வழிகளிலோ சம்பாதித்து சரியான வரி கட்டாமல் கணக்கு காட்டப்படாமல் அரசிடமிருந்து மறைக்கப்பட்ட பணம் கருப்புப் பணம் என்றழைக்கப்படுகிறது. இத்தகைய கருப்புப் பணம் ரூபாய் நோட்டுக்களாக மட்டுமின்றி தங்கம், அசையும் அசையா சொத்துக்கள் எனப் பல்வேறு வடிவங்களில் உள்ளது. இதன் மதிப்பு இந்தியாவின் ஜிடிபியில் 30 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை கூட இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த கருப்புப் பணம் ஒரு இணைப் பொருளாதாரத்தினை நடத்தி வருகின்றது. இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. மேலும் தேர்தல்களின்போது ஜனநாயகத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் வாக்குகளுக்குப் பணம் கொடுக்கவும் பல்வேறு தேச மற்றும் சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது ஏழை எளிய மக்களை மோசமாக பாதிப்பதுடன் இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான மதிப்பைக் குறைத்து விடுகின்றது. தற்போதைய அறிவிப்பினால் கருப்புப் பணத்தினை ரூபாய் நோட்டுக்களாகப் பதுக்கியுள்ளோர் அதற்கு நியாயமான வரியினையும் கூடுதலாக வரித் தொகையில் 200 சதவிகித அபராதத்தினையும் செலுத்த வேண்டும். இல்லையெனில் பழைய நோட்டுக்களை மீண்டும் பயன்படுத்த இயலாமல் போகும். இவ்விரண்டில் எது நடந்தாலும் அது அரசுக்கு லாபம் தரக் கூடியதாகவும் அரசின் நோக்கம் நிறைவேறியதாகவும் இருக்கும். தற்பொழுது புழக்கத்திலுள்ள `500, `1000 நோட்டுக்களில் சுமார் 50 சதவிகிதம் கருப்புப் பணமாக இருக்க வாய்ப்புள்ளதால் அரசுக்கு பல லட்சம் கோடிகள் வருவாயாக கிடைக்கும்.

கள்ளநோட்டு:

கள்ள நோட்டுக்களானது பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு காஷ்மீர், பஞ்சாப், வங்கதேசம், நேபாளம் வழியாக இந்தியாவில் புழக்கத்திற்கு விடப்படுகிறது. இது தவிர இந்தியாவிலேயே சில சமூகவிரோதிகள் கள்ளநோட்டை அச்சடித்துப் புழக்கத்தில் விட்டு விடுகின்றனர். தற்போதைய நிலையில் இந்தியாவிற்குள் புழக்கத்திலுள்ள கள்ள நோட்டுக்களின் மதிப்பானது `400 முதல் `2000 கோடிகள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் `70 கோடி அளவிற்கு கள்ளநோட்டுகள் புதிதாக புதிதாக புழக்கத்திற்கு வருகின்றன. 95 சதவிகித கள்ளநோட்டுக்கள் `500, `1000 ரூபாய் நோட்டுக்களாகவே உள்ளன. இத்தகைய கள்ள நோட்டுக்களின் புழக்கம் அவசியமற்ற வகையில் அதிகப்படியான பணப் புழக்கத்தினை ஏற்படுத்தி இந்தியப் பொருளாதாரத்திற்கு தலைவலியாகிவிடுவதுடன் விலைவாசி ஏற்றமாக மாறி அடித்தட்டு மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றது.

புழக்கத்திலிருந்து `500, `1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக்கி புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தியுள்ளதால் உடனடியாக நோட்டுக்களை போலியாக அச்சடிக்க இயலாது. எனவே இவற்றின் தாக்கம் குறையும். மேலும் புழக்கத்திலுள்ள கள்ள நோட்டுக்களும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படவேண்டுமென்பதால் அச்சமயத்தில் வங்கிகளால் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்படுவதால் கள்ள நோட்டுக்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடும். இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்குத் தீராத தலைவலியாக உள்ள பயங்கரவாதம் மற்றும் இதர தேச விரோத நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பது முற்றிலும் தடுக்கப்பட்டு நாட்டில் அமைதி நிலவும்.

நாட்டில் புழக்கத்திலுள்ள 86 சதவிகித பணம் வங்கிகளுக்கு வருவதால் வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரித்து அதிக அளவில் கடன்கள் வழங்கப்பட வாய்ப்பு கிடைப்பதுடன், அத்தகைய கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும். இது தொழில் துறையின் சூழலை மாற்றி வேலைவாய்ப்பு மற்றும் நாட்டின் உற்பத்தி உயர்விற்கு வழிவகுக்கும். முதலீடுகள் பெருகும். முக்கியமாக நிதிப் பரிவர்த்தனைகளையும் சேமிப்புகளையும் வங்கிகளில் மேற்கொள்ள பொதுமக்கள் முன்வருவர்.

ஐரோப்பிய நாடுகள் ஏடிஎம், கிரெடிட் கார்டுகள் மற்றும் இணைய வங்கி பரிவர்த்தனை வழியாக பணமற்ற பரிவர்த்தனைகளை மேற்கொண்டு நிதிப் பரிமாற்றத்தில் பெருமளவு வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிக ரூபாய் நோட்டுக்கள் புழங்கும் இந்தியாவிலும் விரைவில் அத்தகைய பணமற்ற பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவது ஊக்குவிக்கப்படும். இது ஊழல் மற்றும் கருப்புப் பணம் உருவாவதைத் தடுக்கும்.

சவால்கள்:

இப்புதிய அறிவிப்பினால் ஏற்படும் நன்மைகளுக்கு சரிசமமாக சவால்களும் உள்ளன. முதலில் அறிவித்துள்ள கால அவகாசத்திற்குள் பொது மக்கள் அனைவரின் கையிலிருக்கும் பழைய `500, `1000 நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்வதற்குத் தேவைான சூழலையும் போதிய வசதிகளையும் வழங்குவது மிகக் கடினமானதொரு பணி. ஏனெனில் தற்பொழுதுவரை வங்கிக் கணக்குகளற்ற இலட்சக்கணக்கான குடும்பங்கள் இந்தியாவில் உள்ளன. நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் இது நிச்சயம் சாத்தியக்குறைவுடையது.கருப்புப் பணத்தின் பெரும்பகுதி தங்கம், அசையும் அசையா சொத்துக்களாகவும் வெளிநாட்டு வங்கிகளில் அமெரிக்க டாலர்களாகவும் உள்ளதால் கருப்புப்பண ஒழிப்பு என்ற பெயரில் கொண்டு வரப்பட்டிருக்கும் இத்திட்டம் எதிர்பார்த்த பலன்களைத் தருமா என்பது சந்தேகமே.

இந்தியப் பொருளாதாரத்தில் 40 சதவிகிதப் பங்கு வகிப்பதுடன், சுமார் 60 சதவிகித வேலைவாய்ப்புகளை வழங்கும் முறைப்படுத்தப்படாத அமைப்புசாரா தொழில்களில் நிதிப்பரிமாற்றம் பெருமளவில் வங்கிகளின் வழியாக அல்லாமல் இதர வழிகளில் நடைபெறுகின்றது. இவை முழுவதும் கருப்புப் பணம் என்று கருத இயலாது. ஆனால் தற்போதைய புதிய திட்டம் அமைப்புசாரா தொழில்களை கடுமையாக பாதிக்கும் என்பதால் இதன் தாக்கம் வேலைவாய்ப்பிலும் இந்தியப் பொருளாதாரத்திலும் எதிரொளிக்கும்.

இந்திய ரூபாய் நோட்டுக்கள் தயாரிக்க தாள் மற்றும் மை அளிக்கும் ஸ்விட்சர்லாந்தைச் சார்ந்த தனியார் நிறுவனமே பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கும் அவற்றினை வழங்குகிறது. இது தவறாகப் பயன்படுத்தப்பட்டு மீண்டும் கள்ள நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டால் அது மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தி விடும். எனவே தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

முறையான கண்காணிப்பு முறைகள் மற்றும் கொள்கை வரைவுகள் இல்லாததாலும் சட்டத்திலுள்ள ஏராளமான ஓட்டைகளாலும் தான் இந்தியாவில் கருப்புப் பணம் பன்மடங்கு பெருகி வளர்ந்துள்ளது. இந்நிலையில் இப்புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பும் பழைய நிலையே தொடர்ந்தால் தற்போதைய நடவடிக்கையின் நோக்கம் முற்றிலும் வீணாகி விடும்.

`500, `1000 உள்ளிட்ட உயர்முக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் கருப்புப் பணம் பதுக்கவும் இதர முறைகேடான செயல்களுக்கு பயன்படுத்தவும் எளிதாக உள்ள நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள `2000 நோட்டுக்களானது கருப்புப் பணம் பதுக்குவதற்கு மேலும் எளிதாக இருக்கும்.

`2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் பரிமாற்றம் செய்யப்படும் கணக்குகளைக் கண்காணித்து வருமான வரித்துறை அக்கணக்கு வைத்திருப்பவர்களை விசாரணை செய்யும் எனவும், உரிய விளக்கம் அளிக்கத் தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் கருப்புப் பணம் பதுக்கியுள்ள பலர் ஏழை எளிய மக்களுக்கு சிறிதளவு பணம் கொடுத்து தமது கருப்புப் பணத்தினை வெள்ளையாக மாற்றிக் கொள்கின்றனர்.இத்தகைய ஓட்டைகளை அடைக்க முடியவில்லை. இது கருப்புப்பணம் பொருளாதாரத்தில் மீண்டும் நிலைத்திருப்பதையே உறுதி செய்கின்றது.

பலன்கள்:

F    இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோது பொதுமக்கள் தங்களின் வரி பாக்கிகளை பழைய ரூபாய் நோட்டுக்களைக் கொண்டே செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டதால் வரி செலுத்தப்படுவது சுமார் 200 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

F    டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை 250 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

F    வங்கிகளில் சுமார் `2 டிரில்லியன் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கனவே வராக்கடனால் பாதிக்கப்பட்டுள்ள வங்கிகளுக்கு மிகவும் பயனளிப்பதாக அமையும்.

F    பயங்கரவாத இயக்கத்தின் தளபதியாகத் தன்னை அறிவித்துக் கொண்டு செயல்பட்டு வந்த புர்ஹான்வாணியை இந்திய இராணுவம் சுட்டுக் கொன்ற பிறகு காஷ்மீரில் சுமார் ஐந்து மாதங்களாக நடைபெற்று வந்த இராணுவத்தின் மீதான கல்லெறி சம்பவங்களும், போராட்டங்களும், வன்முறைகளும் மத்திய அரசின் இப்புதிய அறிவிப்பிற்குப் பின் உடனடியாக நின்று விட்டன. ஏனெனில் இவற்றில் ஈடுபட்டு வந்த காஷ்மீர் இளைஞர்களுக்கு பாகிஸ்தானிலிருந்து அச்சடிக்கப்பட்டு கள்ள நோட்டுக்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் பணம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவை தற்பொழுது செல்லாததாகி விட்டதால் காஷ்மீரில் முழு அமைதி திரும்பியுள்ளது.

F    கிழக்கு இந்தியாவின் தீராத தலைவலியாகத் திகழ்ந்து வரும் நக்சல் தீவிரவாதிகள் வங்கிகளைக் கொள்ளையடித்தும், சீனா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து உதவி பெற்றும் இதர வழிகளிலும் சுமார் `7500 கோடிகளை பஸ்தர் பிரதேசத்தில் கையிருப்பாக மறைத்து வைத்துள்ளனர். தற்பொழுது இவையனைத்தும் செல்லாது என்பதால் நக்சல்களின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது புதிதாக ஆயுதங்கள் வாங்கவோ இதர வழிகளில் அரசினை எதிர்த்துப் போராடவோ அவர்களிடம் போதிய நிதி இல்லை. ஏற்கனவே பொதுமக்களின் ஆதரவை இழந்துவிட்ட நக்சல்கள் பாதுகாப்புப் படைகளின் தீவிர நடவடிக்கைகளுக்குள்ளாகி வரும் நிலையில் `500, `1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதது அவர்களை முற்றிலும் முடக்கியுள்ளது. இதே நிலைதான் வடகிழக்கு இந்தியாவில் செயல்படும் ஏராளமான ஆயுதக் குழுக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே நாட்டின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் பங்கம் விளைவித்து வந்த தீராதப் பிரச்சனைகள் பலவும் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளன.

F    அரசின் வரி வருவாய் அதிகரிப்பதால்  செலவும் அதிகரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி உத்வேகம் பெறும். மேலும் அரசின் நிதிப்பற்றாக்குறை கட்டுக்குள் வரும்.

இந்தியாவில் ஏற்கனவே 1946, 1978 ஆகிய இரு வருடங்களில் இத்தகைய உயர் மதிப்புகளைக் கொண்ட ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை உரிய பலனை அளிக்கவில்லை. ஆனால் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையானது மிக இரகசியமாக ஒரு சில உயர்மட்ட அதிகாரிகளைத் தவிர வேறு எவருக்கும் (ஏன், கேபினட் அமைச்சரவைக்கே அறிவிக்கப்படுவதற்கு இண்டு மணி நேரங்களுக்கு முன்புதான் தெரிவிக்கப்பட்டது) தெரியப்படுத்தாமல் நீண்ட நாட்களாகவே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் கருப்புப் பணத்தினை திரும்பக் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராய ஏ.பி.ஷா. தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு(SIT), அதனைத் தொடர்ந்து தங்களிடமுள்ள ரொக்க பணத்தினை வங்கிகளில் செலுத்த உதவும் வகையில் பொதுமக்கள்அனைவருக்கும் வங்கிக் கணக்கு துவங்கும் ‘ஜன்தன்’ திட்டம், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் மற்றும் கணக்கில் வராத சொத்துக்களை அறிவிக்கும் திட்டம், உள்நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் மற்றும் கணக்கில் வராத சொத்துக்களை அறிவிக்கும் திட்டம் என கருப்புப் பணம் பதுக்குவோருக்குப் பல வாய்ப்புகள் அளிக்கப்பட்டதுடன் கடந்த சில மாதங்களாக தீவிர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு இன்னதென யூகிக்க முடியாத வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை மட்டுமே கருப்புப் பணத்தினை ஒழித்துவிடும் எனக் கருதினால் அது அபத்தமான கருத்தாகவே இருக்கும். கருப்புப்பண ஒழிப்பில் இது ஒரு துவக்கமாக இருக்க வேண்டும். இன்னபிற வடிவங்களில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தினையும் மறைக்கப்பட்ட செல்வங்களையும் மீட்கும் வகையிலான திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டும். கள்ளநோட்டுக்கள் மீண்டும் புழக்கத்தில் வராமலும் கருப்புப் பணம் மீண்டும் உருவாகாத வகையிலும் கொள்கை வரைவுகளை உருவாக்குவதுடன் அவற்றினைத் தீவிரமாக அமல்படுத்தி கண்காணிக்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மொத்தத்தில் இந்த நடவடிக்கையானது இறுதியானதாக அல்லாமல் ஒரு துவக்கமாக அமைந்தால் தங்களின் தலையாயப் பணிகளை விட்டுவிட்டு உன்னதமான இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டு வங்கிகளின் முன் நெடுவரிசையில் காத்துக் கிடக்கும் ஒவ்வொரு சாமானியனும் கனவு காணும் வகையிலான மகத்தான இந்தியா உருவெடுக்கும்.

உண்மையில் 2016 டிசம்பர் 31-ஆம் தேதிக்குப் பிறகு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளே இத்திட்டம் பெரும்பான்மையான பொதுமக்கள் நம்புவதைப்போன்று மகத்தானதா அல்லது அரசியல் விளையாட்டா என்பதை முடிவு செய்யும். ஆனால் 2016 நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்திருக்கும் பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் நாட்டின் வளர்ச்சிக்கும், வறுமை ஒழிப்பிற்கும் தடையாக விளங்கும் கருப்புப் பணத்தினை ஒழிப்பதில் மத்திய அரசு உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளதை உணர்த்துகின்றது.

இதர நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பண மதிப்பு நீக்க (Demonitization) நடவடிக்கைகள்

ஐரோப்பிய யூனியன்:

1998 முதல் 2000 வரை ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளில் யூரோ(€)வை பொது நாணயமாக மாற்ற பணமதிப்பு நீக்க மேற்கொள்ளப்பட்டது. இதுதான் உலகம் கண்டதிலேயே மிகப் பெரிய பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஆகும்.

ஜிம்பாப்வே:

ஜிம்பாப்வேயில் ஏற்பட்ட மோசமான பணவீக்கத்தினை சரி செய்ய 2008-ஆம் ஆண்டில் நூறு டிரில்லியன் டாலர் கரன்சிகள் புதிதாக அச்சடிக்கப்பட்டு பழைய நோட்டுக்களை செல்லாததாக அறிவித்து அவற்றிற்கு பதிலாக வழங்கப்பட்டன.

ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய கள்ளநோட்டு பிரச்சனையை சமாளிக்க பழைய நோட்டுக்கள் அனைத்தையும் 1988-இல் திரும்பப் பெற்று விட்டு, அதற்கு பதிலாக கள்ள நோட்டு தயாரிக்க முடியாத பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்பட்டன.

லிபியா:

லிபிய நாட்டு வங்கிகளிலிருந்து பெருமளவு பணம் எடுக்கப்பட்டு விட்டதால் அந்நாட்டு வங்கிகள் திவாலாகும் நிலைக்குச் சென்றன. இதனைத் தடுக்கும் விதமாக 2012-ஆம் ஆண்டில் அனைத்துப் பழைய நோட்டுக்களும் திரும்பப் பெறப்பட்டு புதிய கரன்சிகள் வெளியிடப்பட்டன.

இவை தவிர பாகிஸ்தான், ஈராக், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இத்தகைய பண மதிப்பு மறுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் நடந்ததைப்போன்று திடீரென அறிவிக்கப்படவில்லை.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x