Kigali Conference to Prevent Global Warming

Kigali Conference to Prevent Global Warming

ஓசோன் படலத்தினை பாதிக்கும் வாயுக்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்கும் நோக்கில்
1987-ஆம் ஆண்டு உலக நாடுகளால் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட “மான்ட்ரியால் பிரகடனம்” (Montreal Protocol)” செயல்படுத்தப்படும் விதம் குறித்து விவாதிக்க 2016 அக்டோபரில் ருவாண்டாவின் கிகாலி நகரில் உலக நாடுகளின் கூட்டம் (Montreal Protocol on substances that Deplete the Ozone Layer) நடைபெற்றது. 28-ஆவது (MOP28) வருடாந்திர கூட்டமான இதில், உலக வெப்பமயமாதலை ஊக்குவிக்கும் ஹைட்ரோ ஃப்ளுரோ கார்பன் (HFC) பயன்பாட்டை 2040களின் பிற்பகுதியில் முற்றிலும் நீக்கி புவியின் வெப்பநிலையை 0.5 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1980-களில் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்தது உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனையாகக் கருதப்பட்டது. குளிர்பதனிகள் (Refridgerator) மற்றும் குளிரூட்டிகள் (A/C)போன்றவற்றினால் வெளியிடப்படும் குளோரோ ஃப்ளோரோ கார்பன் (CFC) வாயுதான் இப்பிரச்சனைக்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டு அதற்கு மாற்றாக ஓசோன் படலத்தினை எவ்வகையிலும் பாதிக்காத ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பன் (HFC) வாயுவை குளிரூட்டிகளிலும் குளிர்பதனிகளிலும் பயன்படுத்துவதை வலியுறுத்தும் வகையில் “மான்ட்ரியால் பிரகடனம்” வெளியிடப்பட்டது. அதன்பிறகு குளோரோ ஃப்ளோரோ கார்பனின் வெளியீடு குறைந்து ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பனின் வெளியீடு அதிகரித்தது. இது ஓசோன் படலத்தினை பாதிக்காவிடினும் உலக வெப்பமயமாதலை தீவிரமாக்கியுள்ளது. உலக வெப்பமயமாதலுக்கு காரணமான (Global warming) பசுமை இல்ல வாயுக்களை விட, ஹைட்ரோ ஃப்ளுரோ கார்பனால் ஏற்படும் உலக வெப்பமயமாதலின் வேகம் 1000 மடங்கு அதிகமாக உள்ளது. அதே சமயம் ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பன்களின் வெளியீட்டு விகிதமானது ஆண்டிற்கு 10 சதவிகிதம் என்ற அளவில் அதிகரித்து வருகின்றது.

உலக வெப்பமயமாதலால் ஏற்படும் பருவநிலை மாறுபாட்டால் வறட்சி, வெள்ளம், பனிப்பாறை உருகுதல் எனப் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ள நிலையில் இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தின்படி, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகின் வெப்ப நிலையை தொழில்மயமாதலுக்கு முந்தைய நிலையை விட இரண்டு டிகிரி செல்சியஸ் குறைக்கும் நோக்கிற்கு உறுதுணையாக விளங்கும் வகையில் கிகாலி மாநாட்டில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
கிகாலி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள்

1987-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட மான்ட்ரியால் பிரகடனத்தில் திருத்தம் மேற்கொண்டு ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பன் (HFC) பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 197 நாடுகள் ஏற்றுக்கொண்ட இந்த திருத்தத்தின்படி, 2045-ஆம் ஆண்டிற்குள் உலக அளவில் தற்பொழுது வெளியாகும் ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பனின் அளவில் 85 சதவிகிதம் குறைத்துக்கொள்ளப்படும். இவ்வொப்பந்தம் 2019-ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளால் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி உலக நாடுகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றின் ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பன் வெளியீட்டினைக் குறைப்பதற்கான இலக்கை அடைய வெவ்வேறு கால எல்லைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

நாடுகளின் மூன்று பிரிவுகள் :

முதல் பிரிவு :

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வளர்ந்த நாடுகள் இப்பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரிவின் கீழ் வரும் நாடுகள் 2018-ஆம் ஆண்டு வாக்கில் HFC தயாரிப்பு மற்றும் நுகர்வை நிறுத்திக் கொள்ள வேண்டும். 2012-ஆம் ஆண்டில் இந்நாடுகளால் வெளியிடப்பட்ட HFC அளவில் 15 சதவிகிதத்தினை மட்டுமே 2036-ஆம் ஆண்டில் வெளியேற்ற வேண்டும்.

இரண்டாவது பிரிவு :

சீனா, பிரேசில் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் அனைத்தும் இப்பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நாடுகள் 2024-ஆம் ஆண்டில் தங்களுடைய HFC உற்பத்தி மற்றும் வெளியீட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும். 2021-ஆம் ஆண்டில் இந்நாடுகள் வெளியிடும் HFC-இன் அளவில் 20 சதவிகிதத்தினை மட்டுமே 2045-இல் வெளியேற்ற வேண்டும்.

மூன்றாவது பிரிவு :

இந்தியா, பாகிஸ்தான், ஈரான், சவுதி அரேபியா போன்றவை இப்பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நாடுகள் 2028-ஆம் ஆண்டு வாக்கில் தங்களுடைய HFC உற்பத்தி மற்றும் நுகர்வை நிறுத்திக் கொள்ள வேண்டும். 2025-ஆம் ஆண்டில் வெளியேற்றும் HFC வெளியீட்டில் 15 சதவிகிதத்தினை மட்டுமே
2047-இல் வெளியேற்ற வேண்டும்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் ஒருவேளை மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு குறிப்பிட்ட கால அவகாசத்தில் தங்களுடைய HFC குறைப்பு இலக்குகளை அடையவில்லை எனில் அந்நாடுகளுக்கு அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகளுக்கு தங்களின் இலக்குகளை அடைய நிதியுதவியளிக்க வேண்டும். எவ்வளவு நிதியுதவி அளிக்கப்பட வேண்டும் என்பது 2017-ஆம் ஆண்டில் மான்ட்ரியால் நகரில் நடைபெறவுள்ள மாநாட்டின் போது (MOP 19) முடிவு செய்யப்படும்.

2015 நவம்பரில் முன்மொழியப்பட்டு தற்பொழுது நடைமுறைக்கு வந்துள்ள பருவநிலை மாற்றத்திற்கான பாரீஸ் ஒப்பந்தமானது உலக நாடுகள் தங்களின் கார்பன் வெளியீட்டை குறைத்துக் கொள்வதற்கு சட்டப்பூர்வமான கட்டுப்பாடுகள் எதையும் கொண்டிராத நிலையில் தற்பொழுது முன்மொழியப்பட்டுள்ள கிகாலி ஒப்பந்தமானது சட்டப்பூர்வமான கட்டுப்பாடுகளைக் கொண்டதாக (Legally Binded) விளங்கும். எனவே இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்தாமல் எளிதில் பின்வாங்க இயலாது. பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கினைஅடைவதற்கு தற்போதைய கிகாலி ஒப்பந்தம் நிச்சயம் உறுதுணையாகத் திகழும்

இந்தியாவின் நிலை :

கிகாலி மாநாட்டில் இந்தியாவின் சார்பில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அனில் மாதவ் தாவே தலைமையிலான குழு கலந்துகொண்டு மான்ட்ரியால் ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தினை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுள்ளது. இதன்படி இந்தியா எதிர் வரும் 2028-ஆம் ஆண்டு முதல் புதிதாக HFC உற்பத்தி மற்றும் நுகர்வு செய்வதை நிறுத்திவிட வேண்டும். மேலும் 2025-ஆம் ஆண்டில் வெளியேறும் HFC-இல் 15 சதவிகிதத்தினை மட்டுமே 2045-இல் வெளியேற்ற வேண்டும். அதாவது 85 சதவிகித வெளியீட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். தொழில் புரட்சியில் முந்திக்கொண்ட மேற்கு நாடுகள் இயற்கை வளங்களை மிதமிஞ்சி பயன்படுத்திக் கொண்டதுடன், சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் நைட்ரஜன் டை ஆக்ஸைடு, கார்பன், குளோரோ ஃப்ளோரோ கார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களை வரம்பில்லாமல் வெளியிட்டு உலகளாவிய வெப்பநிலை உயர்விற்கு வழிவகுத்து விட்டு வளர்ச்சியடைந்துவிட்டன.

காலனியாதிக்கத்தின் பிடியில் சிக்கி மீண்ட இந்தியா உள்ளிட்ட தற்போதைய வளரும் நாடுகள் தங்களின் வளர்ச்சியில் முக்கியமானதொரு காலகட்டத்தில் உள்ளபோது, வளரும் நாடுகளால் சேதப்படுத்தப்பட்ட இயற்கை வளங்களை மீட்டு புணரமைப்பு செய்ய வேண்ய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த வரலாற்றுக்கடன் இந்தியா போன்ற வளரும் நாடுகளைவிட அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கே அதிகம் உண்டு. இத்தகைய சூழலில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டிருக்கும் கிகாலி ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட கால எல்லைக்குள் HFC வெளியீட்டைக் குறைத்துக் கொள்வது இந்தியாவிற்கு அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் இந்தியாவின் தலா வருவாய் கடந்த சில ஆண்டுகளாக உயரத் துவங்கியுள்ளதால் அனைவரின் வீடுகளிலும் ஏசி மற்றும் பிரிட்ஜ் என்பவை அத்தியாவசியப் பொருட்களாகிவிட்டது. நாளுக்கு நாள் இவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதேபோல் கார்கள் நிறைந்த நம் நாட்டில் குளிர்சாதன வசதி செய்யப்படாத கார்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய ஒப்பந்தத்தின்படி HFC-யின் வெளியீட்டினை கட்டுப்படுத்தும்போது அதற்கு மாற்றாக வேறு பொருளை பயன்படுத்துமளவிற்கு இந்தியாவிடம் புதிய தொழில்நுட்பங்கள் இல்லை. எனவே இவற்றிற்கேற்ற ஆராய்ச்சிகள் அதிகரிக்கப்பட வேண்டும் அல்லது வெளிநாடுகளிலிருந்து இத்தகைய தொழில்நுட்பத்தினை பெற வேண்டும்.இரண்டிற்குமே அதிக முதலீடு தேவை என்பதால், ஏசி, ப்ரிட்ஜ் உள்ளிட்ட குளிர்சாதனங்களின் விலையும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வாகனங்களின் விலையும் உயரும். இது நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் திறனைக் குறைப்பதுடன் அவர்கள் இத்தகைய வசதிகளைப் பயன்படுத்தாமல் தடுத்தது போலாகிவிடும். இத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டுமெனில் 2017-இல் நடைபெறவுள்ள மான்ட்ரியால் கூட்டத்தில் வளர்ந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வளரும் நாடுகளுக்கு அதிக நிதியுதவியும் புதிய தொழில்நுட்பங்களும் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x