குடியுரிமைத் திருத்த மசோதாவும், வடகிழக்கு மாநிலங்களும்

குடியுரிமைத் திருத்த மசோதாவும், வடகிழக்கு மாநிலங்களும்

– வீ.வீ.கே. சுப்புராஜ்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019 ( CAB ) கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே சட்டமாக்கப்படவுள்ளது. இந்தச் சட்டத்திருத்தம் அருணாச்சலப்பிரதேசம், நாகலாந்து மற்றும் மிசோரம் (முழுமையாக) மாநிலங்களுக்குப் பொருந்தாது. கிட்டத்தட்ட மேகாலயாவின் முழுப்பகுதிக்கும் அஸ்ஸாம் மற்றும் திரிபுராவின் பல பகுதிகளுக்கும் இச்சட்டம் பொருந்தாது. ஆனால் மணிப்பூருக்கு இது பொருந்தும். மணிப்பூரில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், சில மாற்றங்கள் அறிவிக்கப்படலாம். இதில் பல மாநிலங்கள் 6-ஆவது அட்டவணையின் கீழ் வருகின்றன. மேலும் இப்பகுதிகளில் வங்காள கிழக்குப் பகுதி கட்டுப்பாடு 1873-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ், ’The Inner Line Permit’ என்று சொல்லக்கூடிய நுழைவு அனுமதிப் படிவம் அங்கு நடைமுறையில் உள்ளது. இப்பொழுது நாகலாந்தின் திமாபூரும் இந்த நுழைவு அனுமதிப் படிவ திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆங்கிலேய அரசின் கீழ் ஏற்படுத்தப்பட்ட இந்த நடைமுறை இன்றும் தொடர்கிறது. இந்த முறையினால் உள்ளூர் மக்களின் நலன் பாதுகாக்கப்படுகிறது.

இந்த ILP முறை உள்ள மாநிலங்களில் ஆயிரக்கணக்கான வெளியூர்வாசிகள் பல காரணங்களுக்காக பல காலம் தங்கி உள்ளனர். இந்த ILP நடைமுறை CAB மூலம் குடியுரிமை பெற்றாலும், அவர்கள் மேல் தொடரும் இந்த புதிய CAB சட்டம் அவர்களுக்கு முழுக் குடியுரிமை வழங்க வழி செய்யாது. ஆனால் மிசோரம் மக்கள் இதை ஆட்சேபிக்கின்றனர்.

ஆறாம் அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகியவை சிறப்பு அந்தஸ்தைப் பெறுகின்றன. அதன்படி அவைகள் பல துறைகளில் தாங்களே சட்டமியற்றிக்கொள்ள அதிகாரம் பெற்றுள்ளன. காரணகி வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பல பழங்குடியின மக்கள் தங்களுடைய பழக்கவழக்கங்களை இன்னும் தொடர விரும்புகின்றனர். இந்தியாவின் சாசன சட்டத்தின் கீழ் முழுமையாக அவர்களை ஆட்படுத்தமுடியவில்லை. எனவே அவர்களது தனித்தன்மை இன்றும் காப்பாற்றப்படுகிறது.

மணிப்பூர் இதிலிருந்து ஏன் தனித்து நிற்கிறது என்றால், திரிபுராவைப் போல் மணிப்பூர் ஒரு மன்னர் சமஸ்தானமாக இருந்து இந்தியாவுடன் 1949-இல் இணைந்து இரண்டும் 1972-ஆம் ஆண்டு முழுமையாக மாநில அந்தஸ்தைப் பெற்றன. எனவே அவைகள் 6-ஆவது அட்டவணையின் கீழ் வரவில்லை. 1985-லிருந்துதான், மணிப்பூரின் சில பகுதிகள் 6-ஆவது அட்டவணையின் கீழ் கொண்டுவரப்பட்டன. எனினும் முழுமையாகக் கொண்டுவரப்படவில்லை.

மணிப்பூரை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று தலைநகர் இம்பாலை உள்ளடக்கிய பள்ளத்தாக்கு. இது நிலப்பரப்பில் 10 சதவீத இடத்தைக் கொண்டிருந்தாலும் 60 சதவீத மக்கள் இங்கே வசிக்கின்றனர். மீதமுள்ள 90 சதவீத இடத்தில் 40 சதவீத மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் நாகா மற்றும் குக்கி இன மலைவாழ் மக்கள். மாநில அந்தஸ்தை மணிப்பூருக்கு வழங்கும்போது, மத்திய அரசு பழங்குடியின மக்கள் சம்பந்தமான பிரச்சனைகள் வரும் என்பதை முன் கூட்டியே அறிந்துதான் ஷரத்து 371-C ஐ நமது அரசியல் சாசனத்தில் சேர்த்தது.

இந்த ஷரத்தின்படி, மணிப்பூர் சட்டசபையில், இந்த மலைவாழ் மக்கள் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபை உறுப்பினர்கள் ஒரு கமிட்டியை அமைத்துக் கொள்ளலாம். அந்தக் கமிட்டி மலைவாழ் மக்களின் நன்மைகளை மனதில் கொள்ளும். மாநில ஆளுநர் அவ்வப்போதும், குடியரசுத்தலைவர் கேட்கும் போதும், மலைவாழ் மக்களின் பிரச்சனைகள் குறித்த அறிக்கைகளை அனுப்ப வேண்டும். இந்தப் பகுதிகளில் மத்திய அரசின் நேரடி ஆளுகையும் செல்லுபடியாகும்.

மணிப்பூர் (மலைப்பிரதேச) மாநில கவுன்சில் சட்டம் 1971-இன் படி, மணிப்பூரில் சுயாட்சி பெற்ற 6 மாநில கவுன்சில்கள் 1972-இல் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் இந்த கவுன்சில்கள், 6-ஆவது அட்டவணையில் உள்ள மாநில கவுன்சில்களை விட குறைந்த அதிகாரங்களையே பெற்றுள்ளன.

2018-இல் மணிப்பூர் சட்டசபையால் குடியேற்றம் சம்பந்தமாக நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெறாமலே உள்ளது. அந்த மசோதா ’வெளியாட்கள்’ (outsiders) அல்லது ’மணிப்பூர் மக்கள் அல்லாதோர்’ யார்யார் என விரிவாகக் கூறுகிறது. பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 1951-ஆம் ஆண்டை இறுதி ஆண்டாக எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.

மேகாலயாவில் 2016-இல் நிறைவேற்றப்பட்ட, மேகாலயா மக்களின் கவனம் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின்படி, குடிமக்கள் யார் என்பதை விரிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ILP போன்ற முறை வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் அஸ்ஸாமில் CAB கணக்கெடுப்பிற்குப் பின், அநேகம் பேர், மேகாலயாவிற்குள் நுழையலாம் என்ற அச்சத்தை அதன் முதலமைச்சர் கோன்ராட் சங்மா வெளிப்படுத்தியுள்ளார். ILP முறையை அஸ்ஸாமிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.