குடியுரிமை சட்டம் தொடர்பான சர்வதேச எதிர்ப்பு

குடியுரிமை சட்டம் தொடர்பான சர்வதேச எதிர்ப்பு

– வீ.வீ.கே. சுப்புராஜ்

இந்தியக் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா (CAB) 2019, இந்தியாவில் மட்டுமல்லாது, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. சர்வதேச மதச்சுதந்திரம் சம்பந்தமான ஐக்கிய அமெரிக்க நாட்டின் கமிஷன் (United States Commission on International Religious Freedom (USCIRF))  மிகக் கடுமையாக தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்திய உள்விவகார மந்திரி அமித்ஷா மீதும், இந்தியத் தலைமை மீதும் கடுமையான தடைகளை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு சிபாரிசு செய்யப்படும் எனக் கூறியுள்ளது.

அகில உலக மதச்சுதந்திரச் சட்டம் 1998-இன் கீழ் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு, உலகெங்கும் நடக்கும் மதம் சம்பந்தமான சுதந்திரங்கள் நசுக்கப்படும்போது தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும். இந்தச் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தால் பில்கிளின்ட்டன் குடியரசுத்தலைவராக இருந்தபோது இயற்றப்பட்டது. இது அக்டோபர் 27, 1998-இல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி USCIRF தலைவரை அமெரிக்க குடியரசுத்தலைவரே நியமனம் செய்வார். இந்த நியமனத்தில் இருகட்சித் தலைவர்களுக்கும் அதிகாரம் உண்டு.

இந்த மதச்சுதந்திர மீறல்களின் அடிப்படையில், அமெரிக்க நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளின் தாக்கமும் இருக்கும். எனவே எந்த ஒரு நாடும் மதச்சுதந்திரத்தை மீறுபவையாக இருக்கக்கூடாது.

அஸ்ஸாமில் NRC (National Register of Citizens)  படி மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டபோதே, USCIRF இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்தது. இப்பொழுது நாடு முழுவதும் CAB அமல்படுத்தப்படும்போது இஸ்லாமியர்கள் அதிகம் பாதிக்கப்படுவர் என்ற அச்சம் உள்ளது.

இதற்கு முன்னர், டப்ரேஸ் அன்சாரி என்பவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடித்துக் கொல்லப்பட்ட போதும் இந்த அமைப்பின் தலைவர் டோனி பெர்க்கின்ஸ் தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2008-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதையடுத்து அன்றைய குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி அமெரிக்காவினுள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டது. எனவே இந்த மாதிரியான நடவடிக்கைகள் மேலும் தொடரலாம்.