விண்வெளி இணையம்

விண்வெளி இணையம்

– வீ.வீ.கே. சுப்புராஜ்

Space X  என்ற தனியார் நிறுவனம் 2019, நவம்பரில் 60 செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் சிதறவிட்டது. இந்நிறுவனம், 1200 செயற்கைக் கோள்களை விண்ணில் உலவவிடத் திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக் கோள்கள் மூலம் உலகின் எந்த மூலையிலும் இணையதள வசதி அனைவருக்கும் நல்ல வேகத்தில் கிட்டும். இந்நிறுவனம் இதுவரை 122 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.

புவியின் தாழ்ந்த சுற்றுவட்டப் பாதையில் 30,000 நிலையான செயற்கைக் கோள்களை நிறுத்துவதன் மூலம் பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தில் (ITU-International Telecommunication Union), அங்கம் வகிக்கும் 193 நாடுகள், 900 நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகள் பயன்பெறும்.

தற்சமயம் உலகில் 400 கோடி மக்களுக்கு மேல் இணையதள வசதி கிடைக்கவில்லை. தற்போதைய கண்ணாடி இழை கேபிள் வழியாக உலகின் மூலை முடுக்குகளையெல்லாம் இணையதள வசதியைக் கொண்டு செல்ல முடியாது. பூமியின் பல இடங்களில், உயர்நிலை அலைபேசி கோபுரங்களையோ, புதைக் கேபிள்களையோ நிறுவவோ, கொண்டுசெல்லவோ முடியாது.

தற்போதைய இணையவழிசேவை, செயற்கைக் கோள்கள் மூலம் கிடைக்கின்றன. ஆனால் அந்த செயற்கைக் கோள்கள் பூமியிலிருந்து 35,786 கி.மீ. தொலைவில் பூமத்திய ரேகைக்கு செங்குத்தாக உள்ளன. இவைகள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் வேகமாக மணிக்கு 11,000 கி.மீ. என்ற வேகத்தில் சுழல்கின்றன. இவைகள் மூலம் அனுப்பப்படும் பதிவுகள் தூரம் அதிகமாகும்போது அதிக நேரம் எடுக்கின்றன.

Space X  அனுப்புகிற செயற்கைக் கோள்களால் நேரம் மில்லி நொடிகளாகக் குறைக்கப்படுகிறது. இந்நிறுவனம் செலுத்தும் அனைத்து செயற்கை கோள்களும் புவியிலிருந்து 350 கி.மீ. முதல் 1200 கி.மீ. உயரத்திலேயே சுற்றிவரும். மேலும் இலை 27,000 கி.மீ. வேகத்தில் பூமியைச் சுற்றிவருவதால் இவைகளுடைய வேகம் இரண்டு மடங்காகும். ஒரே நாளில் பூமியை பலமுறை இவைகள் சுற்றிவரும். எனவே இவைகள் ஓரிடத்தின்மேல் சில நொடிகளே இருக்கும் என்பதால், இணைப்புகள் அறுந்துபோகாமல் இருக்க பல செயற்கைக் கோள்கள் தேவை. எனவே 42000 செயற்கைக் கோள்கள் வருங்காலங்களில் ஏவப்படும்.

இந்தப்புதிய இணைய வசதி சேவை, அமெரிக்கா, கனடா நாடுகளில் 2020-ஆம் ஆண்டிலும் மற்ற நாடுகளில் 2021-ஆம் ஆண்டிலும் கிடைக்கும். 400 செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டுவிட்டாலே ஓரளவு இணைய சேவையைத் தொடங்கிவிடலாம் என Space X  கூறுகிறது. வேறு பல நிறுவனங்களும் இந்த மாதிரியான முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. ஓரளவிற்கு இந்தத் தொழில்நுட்பம் முழுமை பெறும் போது, ஓட்டுநர் இன்றி வாகனங்கள் எளிதாக இயக்கப்படலாம். குறிப்பிட்ட இடத்தை வாகனங்களில் பதிவு செய்துவிட்டால், அந்த இடங்களுக்கு வாகனங்களை ஓட்டுநர்கள் இன்றியே செல்லமுடியும். இதன் மறுபக்கம், விண்வெளியில் குப்பைகள் அதிகமாகிவிடும். இதனால் பூமியிலிருந்து மற்ற கிரகங்களையோ, நட்சத்திரங்களையோ ஆய்வு செய்வது தடைப்படலாம். செயற்கைக் கோள்கள் ஒன்றுக்கொன்று மோதாமல் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த செயற்கைக் கோள்களால் சூரிய வெளிச்சம் மாசுபடலாம்.