தகவல் அறியும் உரிமைச்சட்டம்

தகவல் அறியும் உரிமைச்சட்டம்

– வீ.வீ.கே. சுப்புராஜ்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் வரும் என்ற சரித்திரத் தீர்ப்பை, முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு, தீர்ப்பளித்த ஒரு மாத காலத்திற்குள் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி அரவிந்த் போப்டே, தகவல் அறியும் சட்டம் தவறாக பல சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால்தான், பொது மக்களுக்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அறிய முடியும். அவை சம்பந்தமாக பொது மேடைகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் விரிவான விவாதம் செய்யமுடியும். தட்டுத்தடங்கல் இல்லாமல் தேவையான தகவல்கள் பொதுமக்களைச் சென்று சேர்வது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும். திறந்த ஆட்சிமுறையே ஜனநாயகத்தின் அடிப்படை. மக்களால் ஆட்சி (democracy by the people) என்பது அரசாங்க நடவடிக்கைகளை மக்கள் முழுமையாக அறிந்து கொள்வதில்தான் இருக்கிறது. மேற்கூறியவை, டிசம்பர் 16, 2015 அன்று ஜெயந்திலால் N.Mistry vs Reserve Bank of India என்ற வழக்கில், உச்சநீதிமன்ற நீதியரசர்கள் M.Y. இக்பாலும், C. நாகப்பன் அவர்களும் வழங்கிய தீர்ப்பின் அம்சங்கள்.

அரசு சாரா அமைப்புகளை (NGOs) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வரலாம் என்பதை DAV College Trust and Managing vs Director of Public Instruction வழக்கு  தெளிவு படுத்துகிறது. செப்டம்பர் 17, 2019 அன்று நீதியரசர் தீபக் குப்தா, இந்த வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, NGO-க்களை RTI-ன் கீழ் கொண்டு வரலாம். ஆனால் அவைகள் அரசாங்கத்திடமிருந்து ஏதாவது ஒரு வகையில் சலுகைகளைப் பெற்றிருக்க வேண்டும். அது குறைந்த விலையில் நிலம் பெற்றிருக்கலாம், பண உதவிகள் பெற்றிருக்கலாம். அவை 50 சதவீத உதவியாக இருக்க வேண்டுமென்பதில்லை. மேலும் பொதுவாக அனைத்து NGO-க்களையும் RTI-ன் கீழ் கொண்டுவர முடியாது. ஒவ்வொன்றையும் தனித்தனியாகவே பார்க்க வேண்டும்.

CBSE vs Aditya Bandhopadyaya and others என்ற வழக்கில், உச்சநீதிமன்றம் RTI பயன்பாட்டின் மீது சில குறைகளைக் கூறியுள்ளது. 2011-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த தீர்ப்பில், RTI-ன் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு விவரங்களைத் திரட்டுவதிலேயே 75 சதவீதப் பணியாளர்கள் தங்களின் 75 சதவீத நேரத்தை வீணடிக்கிறார்கள் என்ற கருத்தைத் தெரிவித்தது. ஆண்டிற்கு கிட்டத்தட்ட 60-70 லட்சம் மனுக்கள் RTI-ன் கீழ் தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால் இந்த வழக்கில் கூறப்பட்டதை சுட்டிக்காட்டி பல அரசுத் துறைகள் தகவல்களை தர காலதாமதம் செய்கின்றன அல்லது மறுக்கின்றன.

Girish Ramachandra Deshpande vs CIC என்ற வழக்கு மிகமுக்கியமானது. இதில் அரசு ஊழியரின் செயல்திறன் பற்றி RTI-ன் கீழ் அறியலாமா? என்ற கேள்விக்கு, அரசு ஊழியரின் செயல்திறன் என்பது முதலாளியான அரசுக்கும், ஊழியருக்கும் சம்பந்தப்பட்டது. அதை மூன்றாமவர் அறியக்கோருவது RTI-இன் கீழ் வராது. இது அந்த ஊழியரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகும். மேல்முறையீட்டு வழக்குகளில் மாநில தகவல் உரிமை தலைமை ஆணையரோ, மத்தியத் தலைமை ஆணையரோ, விரும்பினால், சம்பந்தப்பட்ட ஊழியரின் நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் பெறலாம் என்று மு.ளு. ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா அமர்வு கூறியது. ஆனால் அரசு ஊழியர்களுக்கெதிரான பல தகவல்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்த RTI சட்டத்திற்கு வித்திட்டதே உச்சநீதிமன்றம்தான். 1975-இல் State of UP vs Raj Nairain என்ற வழக்கில், குடிமக்களுக்கு பொதுவாழ்வில், அரசமைப்பில் என்ன நடக்கிறது என்பதை அறியும் உரிமை உண்டு. ஒவ்வொரு பொது பரிவர்த்தனையும் அறிந்துகொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. பேச்சுரிமை என்பது அடிப்படை உரிமை. ஆனால் அது நாட்டின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருக்கக் கூடாது. எந்த ஒரு பொது பரிவர்த்தனையிலும் ரகசியம் இருக்கக் கூடாது என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. இதனால் RTI என்ற பிரத்தியேகமான ஒரு சட்டம்

2005-இல் அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.

RTI-இன் கீழ் மனுத்தாக்கல் செய்பவர்கள், அவர்கள் ஏன் குறிப்பிட்ட ஒரு தகவலைக் கேட்கிறார்கள் என வினவ முடியாது. ஒரு தகவலை நாடாளுமன்றத்துக்கோ, சட்டசபைக்கோ தெரிவிக்கலாம் என்ற பட்சத்தில் ஏன் ஒரு குடிமகன் அதை அறிய முற்படக்கூடாது?

சமீபகாலங்கள் RTI சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சில மாற்றங்கள் அதன் தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் பாதித்துள்ளது என்றே கூறலாம்.