ரஜ்னேஷ் ஆஸ்வால் : இந்திய அரசியலமைப்பின் கீழ் பதவியேற்ற ஜம்மு & காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முதல் நீதிபதி

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அது இரண்டு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்) பிரிக்கப்பட்டு 2019 அக்டோபர் 31 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

மேலும் இந்த இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவான உயர்நீதிமன்றமாக ஏற்கனவே இருந்த ஜம்மு & காஷ்மீர் உயர்நீதிமன்றமே செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் ஜம்மு & காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனைவரும் ஜம்மு & காஷ்மீருக்கென தனியே இருந்த மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் படியே உறுதியேற்று பதவியேற்று வந்தனர். இந்நிலையில் தற்போது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் இனி நீதிபதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியே பதவியேற்றுக்கொள்வர். அதன்படி, முதல் நபராக நீதிபதி ரஜ்னேஷ் ஆஸ்வால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி 2020 ஏப்ரல் 2 அன்று ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் பொது உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றார். மேலும் இந்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கீதா மிட்டல் என்பவர் தற்போது பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.