இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம்

– வீ.வீ.கே. சுப்புராஜ்

இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 2350 குழந்தைகள் மரிக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் வேதனை அளிக்கிறது அதுவும் ஒரு நாளைக்கு ராஜஸ்தானில் 172 குழந்தைகளும், குஜராத்தில் 98 குழந்தைகளும் இறந்து போகின்றன.

2014-ஆம் ஆண்டில் 1000-இல் 39 குழந்தைகள் தங்களின் முதல் பிறந்தநாளைப் பார்க்காமலே இறந்து போனார்கள். அது தற்சமயம் 33-ஆகக் குறைந்துள்ளது. இந்த 6 சதவீதம் என்பது 1,56,000 பேர். உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிக அளவில் குழந்தைகள் இறக்கிறார்கள். 2017-இல், UNICEF எடுத்த கணக்கின்படி, 8,02,000 குழந்தைகள் இறந்து போயின என்பது வேதனைக்குரிய புள்ளிவிவரம்.

இந்தியாவில் மொத்தம் வருடத்திற்கு 26 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன. குஜராத்தில் மட்டும் பிறக்கும் 1.2 மில்லியன் குழந்தைகளில் 1000-க்கு 30 பேர் இறந்து போகின்றனர். இது ஒரு நாளைக்கு 98 குழந்தைகள் இறப்பைக் குறிக்கும். ராஜஸ்தானில் ஒரு வருடத்தில் பிறக்கும் 1.65 மில்லியன் குழந்தைகளில், 68,843 குழந்தைகள் அதாவது ஒரு நாளைக்கு 172 பேர் இறந்து போகிறார்கள். 2016-க்கும் 2017-க்கும் இடைப்பட்ட காலத்தில், இந்திய அளவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 15.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் ராஜஸ்தானில் 17.4 சதவீதம் என்ற அளவிற்குக் குறைந்துள்ளது நல்ல முயற்சியே. ஆனால் குஜராத்தில் இது 14.3 சதவீதம் என்ற அளவில்தான் குறைந்துள்ளது.

இந்தப்புள்ளி விவரங்கள் இறப்பு விகிதம் இந்த மாநிலங்களில் குறைந்துள்ளதையே காட்டினாலும் அருணாச்சலப்பிரதேசம், திரிபுரா, மணிப்பூர் மாநிலங்களில் இது குறையவில்லை. முறையே 30-லிருந்து 42, 21-லிருந்து 29, 11-லிருந்து 12 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.

UNICEF எடுத்த ஒரு கணக்கின்படி, ஜனவரி 1, 2020 அன்று உலகில் பிறந்த 3,92,078 குழந்தைகளில் இந்தியாவில் 67,385 பேர் பிறந்துள்ளனர். இது 17 சதவீதமாகும். சீனாவில் 46,299 குழந்தைகளும், நைஜீரியாவில் 26,039 பேரும், பாகிஸ்தானில் 16,787 பேரும் பிறந்துள்ளனர்.

இந்தியாவின் இந்த நிலைமைக்கு பெண்களின் படிப்பறிவின்மையே காரணம். பல தாய்மார்கள் இரத்த சோகை உடையவர்களாக உள்ளனர். சிறுவயதிலேயே கர்ப்பம் தரித்தல் ஒரு காரணம். அனைவருக்கும் மருத்துவப் பிரசவ வசதி கிடைப்பதில்லை. மூன்றாம் வகுப்புவரை படித்த தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் 32 சதவீதம் அதிகம் உயிர்பிழைத்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கண்டு அறியப்பட்டுள்ளது. 20 வயதிற்குக்கீழ் உள்ள தாய்மார்களின் குழந்தைகள் ஐந்து வயதை எட்டுமுன்பே இறப்பது அதிகமாக உள்ளது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 20-24 வயது தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவு. இது 25-34 வயது வரைப் பொருந்தும். அதன்பின் இறப்பு விகிதம் கூடுகிறது.

இந்தியாவில் 78.9 சதவீதக் குழந்தைகள் மட்டும்தான் மருத்துவ வசதிகள் உள்ள இடத்தில் பிறக்கின்றனர். 21.1 சதவீதக் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. இது மாதிரிப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாகத் தேவையான மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. இதனால் தொற்றுநோய்கள் பிறக்கும் குழந்தைகளைத் தாக்குகின்றன. அரசாங்க இலவச தடுப்பூசி வசதிகள் 87 சதவீதக் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கின்றன. இது எதைக் குறிக்கிறது என்றால், இன்னும் 33 லட்சம் குழந்தைகளுக்கு இவை கிடைப்பதில்லை என்பதையே காட்டுகிறது.

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக நிறுவப்பட்டுள்ள 996 சிறு மருத்துவ மையங்களில் ஆண்டுதோறும் 10 லட்சம் குழந்தைகள் மருத்துவ வசதி பெறுகின்றனர். அங்கே 24  7 மணிநேர மருத்துவ வசதிகள் அனைத்தும் அளிக்கப்படுகின்றன. மருத்துவக் கல்லூரிகளுடன் தொடர்புடைய இந்த மையங்களில் இறப்பு விகிதம் ஏன் அதிகமாக உள்ளது என நோக்கும் போது, தொலைவிலுள்ள ஊர்களிலிருந்து வரும் தாய்மார்கள் பிரசவத்திற்குத் தாமதமாக வந்து சேர்கின்றனர். ராஜஸ்தானில் J.K. Lon (Kota) மருத்துவமனையில் நிகழ்ந்த 20 சதவீத இறப்பிற்கு இதுதான் முக்கியக் காரணம்.

எனினும் பிரத்தியேக வசதிகள் ’இந்திரதனுஷ் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பின், இறப்பு விகிதம் 10 சதவீத அளவிற்கு குறைந்துள்ளது. இருந்த போதிலும், மத்திய அரசும், மாநில அரசுகளும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தையும், குழந்தைகள் இறப்பை தடுப்பதையும் ஒரு சேர போர்க்கால அடிப்படையில் கவனிக்க வேண்டியுள்ளது.