புதிய வனச்சட்டம் – 2019 ஒரு பார்வை

புதிய வனச்சட்டம் – 2019 ஒரு பார்வை

புதிய வனச்சட்டம் – 2019 ஒரு பார்வை

பழங்குடி மக்களை வனத்திலிருந்து வெளியேற்றும் சட்டத்திருத்தங்களை கொண்டதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய வனச்சட்டம் 2019, நாடு முழுவதும் உள்ள பழங்குடி, ஆதிவாசி மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் காலனி நாடாக இருந்த இந்தியாவில் பல்வேறு ஒடுக்குமுறைச் சட்டங்களை ஆங்கிலேயர்கள் கொண்டுவந்தனர். அதில் ஒன்றுதான் இந்திய வனச்சட்டம் 1927. இச்சட்டத்தின் மூலமாக வனங்களில் காலங்காலமாக அனுபவித்து வந்த பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்கள் கையகப்படுத்தப்பட்டன. சுதந்திர இந்தியாவில் வனம் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டங்களுள் 2006-ஆம் ஆண்டு வனச்சட்டம் காடுகளை நம்பி தலைமுறை தலைமுறையாக வாழும் பழங்குடி மக்களுக்கும், காடுகளுக்குள் புதிதாகக் குடியேறிய மக்களுக்கும் வனத்தில் நிலங்களில் சில உரிமைகளை வழங்கியது.

2006 -ஆம் ஆண்டு வனச்சட்டம் : திருத்தம்

2006-ஆம் ஆண்டு வனச்சட்டத்தில் மத்திய அரசு தற்போது திருத்தத்தைக் கொண்டு வந்து வனச்சட்டம் 2019 எனும் பெயரில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் வனங்களில் வாழும் பழங்குடி மக்களையும், பழங்குடி சமுதாயத்தினரையும் குற்றவாளிகளாகச் சித்தரித்துள்ளது. இதன் மூலம் வனத்தில் கிடைக்கும் மரங்கள், இயற்கை வளங்கள் மற்றும் குறிப்பாக கனிமங்கள் அரசின் சொத்துக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பாதுகாப்பதற்காக வனத்தில் வாழ்கின்ற மக்களை முன்னெச்சரிக்கையாக பிணையில் வர முடியாத பிரிவில் கைது செய்ய இப்புதிய சட்டத்திருத்தம் அதிகாரம் வழங்குகிறது. அதுமட்டுமின்றி இந்த சட்டத்திருத்தத்தின் வாயிலாக வனத்தை ஆக்கிரமித்துள்ளார்கள் என குற்றம்சாட்டி கைது ஆணை இல்லாமலேயே ஒருவரைக் கைது செய்யவும் முடியும். மேலும் ஆயுதங்களைப் பிரயோகிப்பதுடன், தடியடி, துப்பாக்கிச் சூடும்  நடத்தலாம் எனவும் அச்சட்டத்திருத்தம் அனுமதி வழங்கியுள்ளதாக வன ஆர்வலர்களும், மனித உரிமை செயல்பாட்டாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் ஆதிவாசிகளுக்கு நிலம், பட்டா கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. நிலம் மற்றும் பட்டா கேட்டு ஆதிவாசிகள், பழங்குடியினர் இதுவரை வழங்கிய எந்த மனுக்களுக்கும் அரசோ, வனத்துறையோ பதிலளிக்கவில்லை. தற்போது 2019-இல் புதிய வனச்சட்டம் கொண்டு வரவிருக்கிறார்கள். சட்டத்தில் வனத்திலிருந்து ஆதிவாசிகளை வெளியேற்றுவதுதான் முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது.

பழங்குடி மக்களின் எதிர்பார்ப்பும் குற்றச்சாட்டும் :

பல்லாயிரம் ஆண்டுகளாக காடுகளையும், மலைகளையும் நம்பித்தான் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். ஆகையால் வனத்தை விட்டு அரசாங்கம் எங்களை வெளியேற்றினால், பிழைப்புக்கு எங்கே செல்வது. வனவிலங்குகளுக்குக் கொடுக்கும் எந்த உரிமையையும் அந்த வனத்தை நம்பி வாழும் எங்களுக்கு அரசு கொடுக்க தயாராக இல்லை. இந்த சட்டத்தை எதிர்த்து பழங்குடி மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தங்களது கருத்தை முன்வைத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 36 வகையான பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2006-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட எந்த உரிமைகளும், பத்தாண்டுகள் நிறைவடைந்த பின்னரும்கூட வந்து சேராத நிலையில், தற்போது புதிதாக வனப் பாதுகாப்பு சட்டம் உருவாக்கி அதை நடைமுறைப்படுத்த இருப்பது பழங்குடி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய அரசால் கொண்டு வரப்படவுள்ள இப்புதிய வனச்சட்டமானது, ஏற்கெனவே உள்ள பழங்குடி மக்களுக்கான குறைந்துபட்ச உரிமைகளையும் நீர்த்துப்போகச் செய்வதாக உள்ளது. அதுமட்டுமின்றி பழங்குடியினரை பாதுகாக்கும் பழைய சட்டங்களின் அனைத்து கூறுகளையும் செல்லாததாக்கும் வகையில் இப்புதிய சட்டம் நடைமுறை படுத்தப்படவுள்ளது. எனவே புதிய வனச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்து, 2006-ஆம் ஆண்டின் வனச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பழங்குடியினருக்கான உரிமைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். பழங்குடியினரின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன், வாழ்வாதாரங்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

1927 -ஆம் ஆண்டு வனச்சட்டம் :

ஆங்கிலேயே அரசால் கடந்த 1927-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வனச்சட்டமே மிகக் கொடுமையானது. பிரிட்டிஷ் இந்தியாவிலும், விடுதலை பெற்ற இந்தியாவிலும் தங்களது உரிமைகளைக் காக்க பழங்குடி மக்கள் பல்வேறு இடங்களில் நடத்திய பல்வேறு போராட்டங்களின் விளைவாகத்தான் கடந்த 2006-ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

பழங்குடி மக்களின் மரபு வழிப்பட்ட கிராம சபைகளுக்கு அச்சட்டம் சிறப்பு மிக்க அதிகாரத்தை வழங்கியிருந்தது. அதேபோன்று வன மகசூல்களில் பழங்குடி மக்களுக்கு இருந்த பாரம்பரிய உரிமையை 2006-ஆம் ஆண்டு சட்டம் உறுதி செய்தது. அதுமட்டுமின்றி, காடுகளைத் திருத்தி சாலை அமைப்பதோ, அணைகள் கட்டுவதோ எதுவாயினும் கிராம சபையின் அனுமதியின்றி செய்யக்கூடாது என்பது முக்கியமான ஒன்றாகும். சில குறைகள் இருந்தாலும்கூட, ஒப்பீட்டளவில் 2006-ஆம் ஆண்டு சட்டம் சிறந்ததாகும். ஆனால் அதற்கெல்லாம் மாறாக, புதிய வனச்சட்டம்-2019, பழங்குடிகளின் மரபு வழி கிராம சபைகளை அதிகாரமற்றதாகவும், வனத்தை நம்பி வாழ்கின்ற ஆதிவாசிகளை அப்புறப்படுத்துகிற ஷரத்துகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. வளங்களைப் பாதுகாப்பதற்கென்றே காப்புக் காடுகள், கிராமக் காடுகள், சரணாலயங்கள் எனப் பல இருக்கின்றன. ஆனால் தற்போது உற்பத்திக் காடுகள் என்று புதிய பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இக்காடுகளை நீண்ட கால குத்தகைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெறுவதற்கான வசதியே இப்புதிய ஷரத்து ஆகும்.

புதிய அதிகாரங்கள் :

தண்ணீரைத் தனியார் மயமாக்கியதைப் போன்றே, தற்போது காடுகள், மலைகளையும் தனியார் மயமாக்க இந்த புதிய வனச்சட்டம் மூலம் முனைப்பு காட்டி வருகின்றனர். இதனை செயல்படுத்துவதற்காக மாவட்ட வன அதிகாரிக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவைப் போன்று வனப்பகுதிக்குள் யாரும் நடமாட இயலாதபடி செய்வது, பிடியாணையின்றி கைது செய்வது, இந்த கைது நடவடிக்கைக்கு ஆளாகும் பழங்குடிகள் தாங்கள் நிரபராதி என்பதை தங்களைத் தாங்களே நிரூபிக்க வேண்டும் என்பது, தடையுத்தரவை மீறினார்கள் என்று மாவட்ட வன அதிகாரி கருதினால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிடுவது என பல்வேறு கடுமையான சட்டமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷார் காலத்தில்கூட இவ்வாறான சட்டமிருந்தது கிடையாது. இப்புதிய வன சட்டம் 2019-ஐ எதிர்த்து உலக ஆதிவாசிகள் தினமான வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வனங்களையும், அங்கு வாழும் உயிர்களையும் காப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு வனத்தை நம்பி தலைமுறை தலைமுறையாக வாழும் பழங்குடி மக்களையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதும் முக்கியமாகும். ஆகையால் புதிய வனச்சட்டம் 2019-இல் பழங்குடி மக்களை வாழ வைப்பதாக இருக்க வேண்டும் என்பதே பழங்குடியினரின் கோரிக்கையாக உள்ளது.