In Parliament Published Information (நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டத் தகவல்கள்)

In Parliament Published Information (நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டத் தகவல்கள்)

பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் 2016 நவம்பர் 16 அன்று துவங்கி டிசம்பர் 15 அன்றுடன் முடிவடைந்தது. உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை முக்கியப் பிரச்சனையாக இருந்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தினம் தினம் ஒத்திவைக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக 2016-ஆம் ஆண்டின் குளிர்காலக்கட்டத்தொடரே பயனற்றது எனுமளவிற்கு இருந்தது. இக்கூட்டத்தொடரின்போது வெளியிட்டத் தகவல்கள் இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் : டாடா மோட்டார்ஸ் மற்றும் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ` 1000 கோடி வரை வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளன. இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சுங்க வரி நிலுவை
` 629. 76 கோடியும், சேவை வரி நிலுவை ` 516.09 கோடியாகவும் உள்ளது. மொத்தமாக அந்நிறுவனம்
` 1,145.85 கோடி வரி நிலுவை வைத்துள்ளது. விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சேவை வரி மற்றும் அபராதம் உட்பட ` 1,012.96 கோடி செலுத்த வேண்டும். இது தவிர கர்நாடக தொழிற்துறை மேம்பாட்டு வாரியம் (` 2,590 கோடி) மற்றும் கர்நாடக வீட்டுவசதி வாரியமும் (` 1,083 கோடி) வரி நிலுவை வைத்துள்ளன.

 

 

 

 

 

 

 

 

 

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி : ரொக்கப் பணத்தின் பயன்பாட்டை குறைத்து, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற டிஜிட்டல் பணத்தின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு விரும்புகிறது. மொத்தம் உள்ள 80 கோடி டெபிட் கார்டுகளில், 40 கோடி கார்டுகள் ஏடிஎம்களில் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. எலெக்ட்ரானிக் வேலட்ஸ் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் தான் எதிர்கால தொழில்நுட்பமாக இருக்கும். இதற்குத் தேவையான ஊக்கத்தை மத்திய அரசு அளித்து வருகிறது. மாநில அரசுகளும் உரிய பங்களிப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆயுஷ் துறையின் இணையமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் : டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க பாரம்பரிய மருந்துகளை மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக டெங்கு நோய்க்காக ஆயுஷ் பிஜே 7 என்ற மருந்தும், யானைக்கால் நோய்க்காக ஆயுஷ் எஸ்எல் என்ற மருந்தும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல் மலேரியா, கடுங்காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் யூனானி மருத்துவ முறை மூலம் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் : சுகாதார பிரச்சனைகளுக்கு விரிவான முறையில் தீர்வு காணும் வகையில் இ-சுகாதார சட்டத்தை அரசு கொண்டு வரவுள்ளது. இந்தச் சட்டம் மூலம் தனிப்பட்ட நபர்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும். மேலும் தகவல்கள் திருட்டு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வழிவகுக்கப்படும். பொதுமக்களுக்கு விரைவில் கருத்தடை ஊசிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊசிகள் படிப்படியாக அறிமுகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக மருத்துவ கல்லூரிகள்,மாவட்ட மருத்துவமனைகள், சுகாதார மையங்களில் அறிமுகம் செய்யப்படும். இதே போல் குடும்பக் கட்டுப்பாட்டுக்கும் மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் : விஷ்வ பாரதி, மிசோரம், புதுச்சேரி, நாகலாந்து ஆகிய 4 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதே போல் மத்திய பல்கலைக்கழகங்களில் 14 பதிவாளர் பதவிகளும், 19 நிதி அதிகாரி பதவிகளும் காலியாக உள்ளன. துணைவேந்தர் பதவிகளை நிரப்புவது என்பது அதிக காலம் பிடிக்கும் நடைமுறையாக உள்ளது. அதற்கான கால வரம்புகளும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே தான் 4 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் : கடந்த 2013-14 நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.34 சதவீதம் உயர் கல்வித் துறைக்கான பொது செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டது. 11-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் உயர் கல்விக்கு, ` 39.646.82 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் உயர் கல்வித் துறைக்கு, ` 1,10, 700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, 2.79 சதவீத உயர்வாகும்.

நீர்வளத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் பல்யான் : நீரு வளங்கள் மேலாண்மை மற்றும் மேம்பாட்டுத் துறையில் இணைந்து செயல்படுவதற்காக இஸ்ரேல் நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மற்றும் இதர நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு பிரதானமாக முக்கியத்துவம் அளிக்கப்படும். நாட்டில் குடிநீர் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இஸ்ரேல் நாட்டுடன் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல் : நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் ஒட்டுமொத்த மின் பற்றாக்குறை 0.7 சதவீதம் என பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 686.09 பில்லியன் யூனிட் தேவைக்கு, 681.34 யூனிட் கையிருப்பு இருந்தது. கடந்த 2015-16 நிதியாண்டில் பற்றாக்குறை அளவு 2.1 சதவீதமாக இருந்தது. 2016-17 நிதியாண்டில் 1.1 சதவீதம் மின் மிகை இலக்கை எட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 1, 178 பில்லியன் யூனிட் மின் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் : நாடு முழுவதும், 53, 221 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. இதில் 41, 140 பெட்ரோல் நிலையங்கள் நகர்ப்புறங்களில் அமைந்துள்ளன. 12,081 பெட்ரோல் நிலையங்கள் கிராமப்புறங்களில் உள்ளன.

பெட்ரோலிய பைப்லைன் அமைப்பதற்காக, 33 திட்டங்கள் கட்டமைப்பு நிலையில் உள்ளன. இத்திட்டங்களின் கீழ்வரும் பைப்லைன்களின் மொத்த தொலைவு, 14, 880 கி.மீ. ஆகும்.

திட்டத்துறை இணையமைச்சர் ராவ் இத்தர்ஜித் சிங் : நாடு முழுவதும் உள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என்ஜஒ – தர்பான் என்ற நிதி ஆயோக் இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம் பதிவு செய்யும் தொண்டு நிறுவனங்களுக்கு தனிப்பட்ட அடையாள முகவரி வழங்கப்படும். அதன்பிறகு மத்திய அரசின் நிதியுதவிகளை கோரி தொண்டு அமைப்புகள் விண்ணப்பிக்க முடியும். கடந்த மாதம் 24-ஆம் தேதி வரை மொத்தம் 81,353 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இந்த இணையதளத்தில் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளன.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் : வெளிநாடுகளில் இயங்கி வரும் சில இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் அங்கீகாரமில்லாத ஊடுருவல்கள் நடந்து வருகின்றன. எனினும் அரசின் எந்தவொரு தகவல்களும் திருடு போகவில்லை. இணையதளங்களில் உள்ள முக்கியத் தகவல்களை பாதுகாக்க சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திரா சிங் : நடப்பு நிதியாண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பரவலாக்குவதற்காக ` 6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2014 – 15 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட (` 21 கோடி) தொகையை விட குறைவாகும். கடந்த நவம்பர் 26-ஆம் தேதி வரை அரசு ` 3.94 கோடி செலவிட்டுள்ளது.

ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோஹெயின் : ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் 340 முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு தவிர, தூய்மை விஷயத்துக்காகவும் கண்காணிப்பு கேமராவை பயன்படுத்தும்படி அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் 2014, ஜூலையில் அறிவுரை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தூய்மை விவகாரத்தை எவ்வாறு கண்காணிப்பது, எப்படி அமல்படுத்துவது என்ற விரிவான வழிமுறைகள் கடந்த 2016 மே மாதத்தில் ரயில்வே வாரியம் வெளியிட்டது. இதே போல் சீனா, பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதி வரை புதிய ரயில் தடங்களை அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ : ஜம்மு காஷ்மீரில் வன்முறைகளைத் தூண்டிவிடுவதற்காக ஹவாலா மற்றும் பிற வழிகளில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணம் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் மாத இறுதி வரை ஜம்மு காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளில்  24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 74 முறை ஊடுருவல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. தவிர அக்டோபர் வரை 201 ஊடுருவல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் மன்சுக் என் மண்டாவியா : 2015-ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 1,46,133 பேர் உயிரிழந்தனர். 5,00, 279 பேர் காயமடைந்தனர். 2014-இல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 4,93,474 ஆகும்.

கடந்த, 2014-இல் 4,89,400 சாலை விபத்துகள் நிகழ்ந்த நிலையில், கடந்தாண்டு இந்த எண்ணிக்கை, 5,01,423-ஆக அதிகரித்துள்ளது. 2011, 2013-களில் சாலை விபத்து மற்றும உயிரிழப்புகள் குறைந்து காணப்பட்டன. 2014-இல் இந்த எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா : அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படுவது கட்டாயம் என்று மத்திய அரசு பரிந்துரை செய்யவில்லை. இந்த விவகாரத்தில் அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம்.

 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x