இந்தியப் பிரதமரின் ஜப்பான் பயணம்

இந்தியப் பிரதமரின் ஜப்பான் பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2016 நவம்பர் 10 முதல் 12 வரை ஜப்பானுக்கு அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தியா-ஜப்பான் இடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற இந்தியப் பிரதமர் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஜப்பான் அரசர் அகிஹிடோ மற்றும் பிரதமர் ஷன்சோ அபே ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பான பல்வேறு அம்சங்களும் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றது. இரு நாடுகளுக்குமிடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட பத்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இந்தியாஜப்பான் இடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள்

 • மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா உள்ளிட்ட திட்டங்களுக்கு உதவும் வகையில் சுமார் 30 ஆயிரம் இந்திய இளைஞர்களுக்கு ஜப்பானின் சார்பில் தொழிற்சாலை உற்பத்திப் பயிற்சியளிப்பதற்கான ஒப்பந்தம்.
 • இந்திய மற்றும் ஜப்பானிய (JAXA) விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்து கோள்கள் பற்றிய ஆராய்ச்சி, செயற்கைக் கோள், விண்வெளி ஆராய்ச்சி, கூட்டு விண்வெளித் திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம்.
 • கடல் மற்றும் புவி அறிவியல் ஆராய்ச்சிகளில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம்.
 • வேளாண்மை மற்றும் உணவு துறையில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம்.
 • இரயில்வே உள்கட்டமைப்புகள், துறைமுக முனையங்கள், சுங்கவரி சாலைகள், சரக்குப் பரிமாற்றம், விமானநிலைய முனையங்கள் உள்ளிட்டவற்றிலும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதிலும் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் மற்றும்
  மும்பை-அகமதாபாத் இடையில் ஜப்பானின் உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ள புல்லட் இரயில் திட்டத்தினை துரிதப்படுத்துதல்.
 • ஜப்பானிய ஜவுளி சந்தைக்கேற்ற வகையில் இந்திய துணி வகைகளை தரம் உயர்த்த ஜப்பான் உதவுவதற்கான ஒப்பந்தம்.
 • 2020-இல் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம்.
 • இரு நாடுகளுக்கிடையிலான கலாச்சாரத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம். இரு நாட்டு பொதுமக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துதல் குறித்த ஒப்பந்தம்.
 • இந்தியாவின் குஜராத் மாநிலம் மற்றும் ஜப்பானின் ஹயாகோ மாகாணம் இடையே வர்த்தகம், கல்வி, கலாச்சாரம், பேரிடர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம்.

இந்தியஜப்பான் சிவில் அணுசக்தி ஒப்பந்தம்:

      இந்தியப் பிரதமரின் இப்பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்டவற்றிலேயே மிக முக்கியமானதும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டதுமான ஒப்பந்தம், இந்திய-ஜப்பான் சிவில் அணுசக்தி ஒப்பந்தமாகும். அணு ஆயுதத் தாக்குதலுக்குள்ளான உலகின் ஒரே நாடான ஜப்பான், இன்றளவும் அணு ஆயுதத்தின் தீவிரமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றது. அணு ஆயுதத்தினைத் தயாரிப்பதில்லை அவ்வாறு தயாரிக்கும் நாடுகளுக்கு உதவுவதில்லை என்பதுடன் அந்நாடுகளுடன் உறவு கொண்டாடுவதில்லை என்ற சுய கட்டுப்பாட்டினை கடைபிடித்து வருகின்றது. 1998-இல் இந்தியா, இரண்டாவது முறையாக அணு ஆயுத சோதனையை நடத்திய சில மணி நேரங்களிலேயே இந்தியாவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக அறிவித்த ஜப்பான், உடனடியாக இந்தியாவின் மீது பொருளாதாரத் தடையையும் விதித்தது. பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 2001-ஆம் ஆண்டில் இந்தியாவின் மீதான பொருளாதாரத் தடையை ஜப்பான் விலக்கிக் கொண்டது. தொடர்ந்து 2009-ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே இராஜ்ஜிய உறவுகள் மீண்டும் முழுவேகம் பெற்றன. 2000 ஆண்டிற்குப் பிறகு பொருளாதார ரீதியில் வேகமாக வளரத் துவங்கிய இந்தியாவிற்கு மின்சாரம், மருத்துவம், தொழில்துறை என பலவற்றில் அணுசக்தியின் தேவை கணிசமாக அதிகரித்தது. எனவே அத்துறையில் முன்னேறியிருந்த ஜப்பானுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகளை இந்தியா துவங்கியது. ஆனால் அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் (NPT) கையெழுத்திடாததால் இந்தியாவுடன் அத்தகைய ஒப்பந்தத்தினை மேற்கொள்ள ஜப்பான் தயங்கியது. சுமார் ஆறு ஆண்டுகளாக நீடித்த இப்பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளுக்கிடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தம் 2016 நவம்பரில் கையெழுத்தானது. இவ்வொப்பந்தம் கையெழுத்தாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே இடையிலான நெருங்கிய நட்புறவும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஜப்பானுக்கு அளித்த அழுத்தமும் ஒரு காரணமாகும். அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் ஜப்பானுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள ஒரே நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தத்தின் முக்கியத்துவம்:

      இந்தியா ஆரம்ப காலம் முதலே இரஷ்ய அணு உலைகளைத்தான் பயன்படுத்தி வருகின்றது. ஆனால் உலக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் இரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவினை வளர்த்து வருகின்றது, மறுபுறம் இந்தியாவும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுடன் நெருங்கி வருகின்றது. இந்நிலையில் இரஷ்யாவிடமிருந்து வாங்கி வந்த அணு உலை, பாதுகாப்பு சாதனங்கள் உள்ளிட்டப் பல்வேறு பொருட்களை அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் வாங்கத் துவங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் உதவியுடன் இந்தியாவில் அணு உலைகளை அமைக்க கடந்த ஆண்டில் இந்தியா ஒப்பந்தமிட்டது. இவ்வொப்பந்தத்தின்படி அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக்ஸ், வெஸ்டிங் ஹவுஸ் மற்றும் பிரான்ஸின் அரேவா ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கும். இந்த நிறுவனங்கள் ஜப்பானிய நிறுவனங்களான ஹிட்டாச்சி, மிட்சுபிஷி, தோஷிபா உள்ளிட்டவற்றில் பெரும்பங்குகளை வைத்துள்ளன. இந்தியாவுக்கு அணுசக்தி வழங்க ஜப்பான் அரசு அனுமதிக்காவிடில் மேற்கண்ட நிறுவனங்கள் சில சிக்கல்களைச் சந்திக்கும். மேலும் அமெரிக்க மற்றும் பிரெஞ்சு நிறுவனங்களுக்கு அணுஉலை மற்றும் உதிரி பாகங்கள் ஜப்பானிலிருந்துதான் கிடைக்க வேண்டும். இந்தியாவிற்கு அணுசக்தி வழங்க ஜப்பான் அரசு ஒப்புக்கொள்ளாவிடில் உதிரி பாகங்கள் கிடைப்பதும் கடினமாகிவிடும். இந்நிலையில் ஜப்பானுடன் இந்தியா மேற்கொண்ட சிவில் அணுசக்தி ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகின்றது. ஜப்பானுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நிறுவனங்கள் மட்டுமின்றி ஜப்பானிய நிறுவனங்களும் இந்தியாவில் அணுஉலைகளை அமைக்கும் திட்டங்களைத் தீட்டும். இது ஏராளமான மின் தேவையுள்ள இந்தியாவிற்கு மிகக் குறைந்த விலையில் மின்சக்தி கிடைப்பதை உறுதி செய்யும். இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் ஊக்கம் பெறும்.

 • என்.எஸ்.ஜி. அமைப்பில் இந்தியா உறுப்பினராக இணைவதற்கு இந்திய-ஜப்பான் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் உதவிகரமாகத் திகழும்.
 • மேலும் இந்தியா-ஜப்பான் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகள் மேம்படும். இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகம் $15 பில்லியனாக அதிகரிக்கும்.
 • அமெரிக்க-இந்திய சிவில் அணுசக்தி ஒப்பந்த சரத்துக்களை அடிப்படையாகக் கொண்டுள்ள இவ்வொப்பந்தத்தில் ஃபுகுஷிமா விபத்திற்குப் பிறகு அணுஉலை பாதுகாப்பிற்கென வரையறுக்கப்பட்ட சர்வதேச விதிமுறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அணு உலையின் பாதுகாப்புத் தன்மை அதிகரிக்கும்.
 • ஒருவேளை இந்தியா எதிர்காலத்தில் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டால் இந்திய-ஜப்பான் சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தினை முறித்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் ஒரு வருட காலத்திற்குள் அணு ஆயுத சோதனை நடத்தியதற்கு இந்தியா தகுந்த விளக்கத்தினை அளித்து ஒப்பந்தத்தினைத் தக்க வைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

      இவ்வொப்பந்தம் இந்தியாவிற்கு மின்சக்தி, பாதுகாப்பு, தொழில்துறை எனப் பல்வேறு துறைகளில் மிகுந்த பலனளிப்பதாக விளங்கும்.

      ஆசிய கண்டத்தின் முப்பெரும் சக்திகளாகக் கருதப்படும் சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவற்றில் சீனா அதிவேகமாக வளர்ந்து அசுரபலத்துடன் திகழ்கிறது. பல்வேறு துறைகளில் அமெரிக்காவையே அச்சுறுத்தும் அந்நாடு, தென்சீனக்கடல் பிரச்சனை, எல்லைப் பிரச்சனை மற்றும் வரலாற்று ரீதியிலான பகை என ஜப்பானுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது. அதேபோல் தனக்குப் போட்டியாக வளரும் இந்தியாவிற்கு அனைத்து வகையிலும் முட்டுக்கட்டை போட்டு வருவதுடன் இந்தியாவுடன் எல்லைச் சிக்கலையும் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு எப்பொழுதும் துணை நிற்கும் இரஷ்யா, பொருளாதார ரீதியில் நலிவுற்று வரும் நிலையில் அந்நாட்டில் சீனா எக்கச்சக்கமான முதலீடுகளை மேற்கொண்டு தம் பக்கம் சாய்த்துக் கொண்டது. அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து செயல்படுவதே சீனாவைச் சமாளிக்க இயலும் ஒரே வாய்ப்பாக உள்ள தற்போதைய சூழ்நிலையில், அமெரிக்காவின் அடுத்த அதிபராக மாறுபட்டக் கருத்துக்களைக் கொண்ட டிரம்ப் தேர்வாகியுள்ளதால் இந்தியாவும் ஜப்பானும் இணந்து பரஸ்பரம் தங்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையே சிவில் அணுசக்தி பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதும் சர்வதேச அரங்கில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதும் இரு நாடுகளுக்குமே நன்மை பயக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *