இந்தியப் பொருளாதார வளர்ச்சியை கணிக்கும் கரியமில வாயுவின் வெளியேற்றம்

– வீ.வீ.கே. சுப்புராஜ்

இந்தியப் பொருளாதார வளர்ச்சியை அதனுடைய தொழில்வளர்ச்சி அடிப்படையில் கணக்கிடுவதைவிட, இந்தியத் தொழிற்சாலைகள் வெளியேற்றும் பசுமை வாயுக்கள் மற்றும் கரியமிலவாயு ஆகியவைகளின் அளவீடுகளிலிருந்து எளிதாக கணக்கிட்டுவிடலாம். அரசாங்கம் வெளியிடும் புள்ளிவிவரங்கள் துல்லியமானவையா? தவறானவையா? என்பதை இந்த அளவீடுகள் காட்டிக் கொடுத்துவிடும்.

2019-இல் வளிமண்டலத்தில் இந்தியா வெளியிட்ட மேற்கூறிய வாயுக்களின் அளவை 2018 அளவோடு ஒப்பிடும்போது 1.8 சதவீதமே உயர்ந்துள்ளது. 2019-இல் இந்தியா வெளியிட்ட அளவு 2.6 பில்லியன் கிகா டன்கள். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் சராசரி வெளியேற்றம் 5 சதவீத அளவில் உயர்ந்து கொண்டே இருந்தது.

பசுமை வாயுக்களின் வெளியேற்றம் குறைவாக இருப்பது மிகவும் நன்மை பயக்கக்கூடியதுதான் என்றாலும், குறைந்துவரும் போக்கு பொருளாதார முன்னேற்றம் குறைந்து வருவதையே சுட்டிக்காட்டுகிறது. உலக அளவில்

2019-இல் 2018-ஐ விட 0.6 சதவீத அளவிற்குதான் இந்த வெளியேற்றம் உள்ளது என்பதை கேட்கும் போது கொண்டாடுவதா, வேதனைப்படுவதா என்று தெரியவில்லை.

இதேபோல் மின்சாரத்தேவையும் 6 சதவீத வருடாந்திர உயர்விலிருந்து 1 சதவீதமாகக் குறைந்துள்ளதும், தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்துள்ளதையே காட்டுகிறது. ’பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான கிராமங்கள் மின்சார வசதி அடைந்துள்ளபோதிலும் இந்த நிலை என்றால் நிச்சயமாக தொழில்வளர்ச்சி குறைந்துள்ளதையே காட்டுகிறது.

ஆனால் அதேசமயம், இந்த ஆண்டு அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வடிந்ததால், நீர்மின் உற்பத்தி அதிகமாகி அனல்மின் உற்பத்தி குறைந்துள்ளது. இது வளிமண்டல மாசு குறைவுக்கு காரணமாக இருக்கலாம்.

உலக அளவில் தொழில் வளர்ச்சியும் உற்பத்தியும் குறைந்துள்ளது மனதிற்கு இலேசான ஆறுதலை அளிக்கிறது என்பது உண்மை. உலக நாடுகள் 2013 முதல் 2018 வரை வெளியேற்றிய கரியமிலவாயு அளவு வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

2014-இல் இந்தியா வளிமண்டலத்தில் வெளியேற்றிய கரியமிலவாயுவின்அளவு 1.99 பில்லியன் கிகா டன்கள். பசுமை வாயுக்களின் வெளியேற்றத்தையும் சேர்த்தால் இது 2.6 பில்லியன் கிகா டன்களாக உயர்கிறது.

இந்த பசுமை வாயுக்களையும், கரியமிலவாயுவையும் அதிகம் வெளிவிடும் தொழிற்சாலைகள் மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள், சிமெண்ட், இரசாயனம் மற்றும் உரம் தயாரிப்பவை.