முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

அற்புதமான இவ்வுலகில் பிறந்திருப்பதே ஒரு பெரிய வாய்ப்பாகத்தான் தெரிகிறது. இந்த விஞ்ஞான உலகில் அதுவும் தகவல் தொழில்நுட்ப உலகில் வாழ்ந்து கொண்டு இருப்பது ஓர் அரிய சந்தர்ப்பம்தான். 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் இவ்வளவு வசதிமிக்க அமைதியான பூமியில் வாழவில்லை. அதிலும் இன்று இளைஞராக இருப்பது ஒரு பெரிய வரப்பிரசாதம் தான் (என்னைப் போன்றோருக்கு இந்த பெருமை இல்லை).

இவ்வளவு ஆசிர்வாதங்களும் ஒருங்கே பெற்ற இளைஞர்கள் நீங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக தினம் தினம் வாழ்க்கையைக் கொண்டாட இவை அனைத்தும் காரணங்கள்தான். மகிழ்ந்து கொண்டாடுங்கள்.

ஆனால் இவ்வரிய உலக வாழ்க்கையில் நாம் என்ன செய்யவேண்டும், எதை விட்டுச் செல்ல வேண்டும் என்ற கேள்விகள் உங்களது அடிமனதில் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

சில மனிதர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றனர். மாமன்னர் அசோகன் வெற்றி பெற்ற பின்பும், ஆட்சியைக் கைவிட்டு அஹிம்சையைப் போதித்தான்.

மகாத்மா காந்தியும் அஹிம்சையான முறையில்தான் சுதந்திரப் போராட்டமே நடத்தினார். உலகிலுள்ள கோடானுகோடி மக்களுக்குப் போலியோ நோய் வராமல் தடுத்தார் ஜோனாஸ் சால்க் என்ற ஒரு விஞ்ஞானி. அனைவருக்கும் ஒரு கம்ப்யூட்டர் வேண்டும் என்று களம் இறங்கி வெற்றியும் கண்டார் பில்கேட்ஸ். இன்று உலகில் பெரிய பணக்காரரும் அவர்தான் என்று கூறப்படுகிறது. உலக சரித்திரத்தையே எழுதி விட்டுச் சென்றனர் ஹன்னிபால், நெப்போலியன், சர்ச்சில், வெலிங்டன், சிவாஜி, திப்புசுல்தான் போன்ற போர்த் தளபதிகள்.

சரித்திரத்தில் இடம்பிடித்த பலர் இருந்தாலும் நல்ல மனிதர்களாக, மற்றவர்களுக்கு ’முன் உதாரணமாக வாழ்ந்து மறைந்தவர்களும் உண்டு. அவர்களும் பாராட்டுக்கு உரியவர்களே! அவரவர்கள், தாங்கள் விரும்பிய சிறப்பான வாழ்க்கையை மற்றவர்களுக்குப் பயன்தரும்படியாகவும் வாழ்ந்து விட்டுச் சென்றனர்.

சாதனையாளர்கள் தங்களுக்குக் கிடைத்த நேரத்தையும், திறமைகளையும் முழுமையாகப் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்களுக்கென்று ஓர் இலக்கு இருந்திருக்கிறது அல்லது பல இலக்குகள் தொடர்ந்து இருந்திருக்கின்றன. அவற்றை அடைய அவர்கள் முயற்சியை மேற்கொண்டனர். அம்முயற்சியில் இறந்து போனவர்களும் உண்டு. இமயமலையில் ஏற முயன்றவர்களில் பலர் இறந்து போனார்கள். தென் துருவத்தைச் சென்றடைய போன ராபர்ட் பால்கன் ஸ்காட் என்பவர் அங்கேயே உறைந்து இறந்து போனார். அவர் தனது நாள்குறிப்பேட்டில் எழுதியிருந்த வரிகள், அவர் தமது மரணத்தைச் சந்தித்த வேளையிலும் தைரியத்தைக் கைவிடவில்லை என்பதை அறிவிக்கிறது.

“Good-bye. I am not afraid of the end, but sad to miss many humble pleasures, which I planned for the future….. we are very near to end, but have not and will not lose our good cheer..”

எடுத்த லட்சியத்திற்காக உயிரை மாய்த்து மகிழ்ந்த சாதனையாளர்களையும் சரித்திரத்தில் பார்க்கிறோம்.

சாதனை படைப்பதற்காகப் புறப்பட்டு முயற்சி செய்து தோல்வி கண்டவர்களும் ஒரு வகையில் சாதனையாளர்களே! பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள், முந்தைய தோல்விகளின் அடிப்படையில்தான் ஏற்பட்டன. தாமஸ் ஆல்வா எடிசன் 10,000 முறை தோல்வியடைந்து, அந்தத் தோல்விகளின் அடிப்படையில், புது வித முயற்சிகளைச் செய்து மின்சார விளக்கு (பல்ப்) உட்பட பலவற்றைக் கண்டுபிடித்தார்.

’முயற்சியில்லாமல் வெற்றி கிட்டிவிடும் என்ற குருட்டு நம்பிக்கையில் உண்மை ஏதும் இல்லை. இல்லவே இல்லை.

இவ்வுலகம் போட்டிகள் நிறைந்த உலகம். நல்ல குலத்தில் பிறந்தோம் என்பதாலோ, நல்ல பெற்றோருக்குப் பிறந்தோம் என்பதாலோ, நல்ல மனிதர்களாக இருக்கிறோம் என்பதாலோ ஒருவருக்கு வெற்றி கிடைத்து விடாது. ஏனென்றால் போட்டியிடும் அனைவருமே தங்களைத் தாங்களே வெகு உயர்வாகத்தான் கருதுகிறார்கள். போட்டிக்கு என்று விதிகள் உண்டு, மதிப்பீட்டு முறைகளும் உண்டு. மருத்துவக் கல்லூரியில் சேரவேண்டுமானால் +2 தேர்வில் குறிப்பிட்ட பாடங்களில் 98 சதவீதத்திற்குக் குறையாத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆகவே அதிக மதிப்பெண்களை எடுக்க போட்டியிடவேண்டும். தமிழ்நாட்டில் தேர்வெழுதும் 8 லட்சம் சக மாணவ மாணவிகளிடம் போட்டியிட வேண்டும்.

அரசுப் பணிகளில் சேரவும் போட்டியிட வேண்டியுள்ளது. அப்போட்டிகளில் தங்களைத் தயார்படுத்தவும், வெற்றிபெற வைக்கவும், பல அரிய, எளிய தகவல்களைத் தர சுரா பதிப்பகத்தின் ” என்ற இந்த மாத இதழ் முழு முயற்சி எடுத்து, அதனை நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

போட்டித் தேர்வு என்றாலே வெற்றி ஒரு சிலருக்குத்தான் என்பதுதானே சாத்தியம். யார் ஒருவர் போர்த் திறத்துடன் தேர்வைச் சந்திக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே வெற்றி கிடைக்கும்.

வெற்றி காண போர்த் தந்திரங்கள் பலவற்றை இக்கட்டுரையில் வார்ப்போம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x