மருத்துவ நுழைவுத் தேர்வு அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

மருத்துவ நுழைவுத் தேர்வு அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பான அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அச்சட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கையெழுத்திட்டார். இதனால், மருத்துவ பொது நுழைவுத் தேர்வு ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

தமிழகத்தில் தேர்வு இருக்காது:

தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தேர்வு இருக்காது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இருப்பினும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு தேர்வு இருக்காது. அரசு கல்லூரியில் உள்ள தேசிய ஒதுக்கீட்டு இடத்துக்கு தேர்வு எழுதியே மாணவர்கள் சேர முடியும்.

உச்ச நீதிமன்ற உத்தரவும் எதிர்ப்பும்:

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மட்டுமே நாடு முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபோல நுழைவுத்தேர்வை தாங்களே நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.

அமைச்சருடன் ஆலோசனை.

முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) அவர் மருத்துவ நுழைவுத்தேர்வு குறித்த அவசர சட்டம் தொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், இதுபோல அவசர சட்டத்துக்கான அவசியம் குறித்து விளக்கம் அளிக்குமாறு சுகாதார அமைச்சகத்தை குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, அவசர சட்டத்தின் அம்சங்கள் குறித்து எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ள மாநில அரசு இடங்களுக்கு மட்டும் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

முதல்கட்டமாக கடந்த மே1-ம் தேதி நடைபெற்ற நுழைவுத் தேர்வில் சுமார் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்காதவர்களுக்காக வரும் ஜூலை 24-ம் தேதி 2-ம்கட்ட தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.