ராமேஸ்வரத்தில் நாளை அப்துல் கலாமின் இறுதி சடங்கு…

ராமேஸ்வரத்தில் நாளை அப்துல் கலாமின் இறுதி சடங்கு…

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் குடும்பத்தினர் விருப்பப்படி கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்திலேயே அவரின் இறுதி சடங்குகளை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து கலாமின் இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகள் ராமேஸ்வரத்தில் தொடங்கி உள்ளது. முக்கிய பிரமுகர்கள் கலாமின் இறுதி சடங்கிற்கு வர உள்ளதால் ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவுக்கு மக்கள் அனைவரும் நாடு முழுவதும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நாட்களில் விடுப்பு இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள் மற்றும் தலைவர்கள் இரங்கல்:

அர்விந்த் கெஜ்ரிவால்: டெல்லி: டாக்டர் அப்துல் கலாம் மறைவு குறித்து டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறுகையில், மக்களின் ஜனாதிபதியாக இருந்த கலாம், சராசரி மனிதன் கூட அவரை தொடர்புகொள்ளும் வகையில் இருந்த எளிமையான மனிதராக இருந்தார். மேலும் அவரது இழப்பு நாட்டிற்கு பேரழிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜி. மாதவன்: டாக்டர் அப்துல் கலாம் மறைவு இந்தியாவிற்கும் உலகளாவிய அறிவியல் சமூகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் ஜி. மாதவன் கூறியுள்ளார்.

நடிகர் விவேக்: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு நடிகர் விவேக் இரங்கல் தெரிவித்தார். உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிர வைத்த அப்துல் கலாம் இன்னொரு தேசத்திலா என வருத்தம் தெரிவித்தார். இளைஞர்கள் மத்தியில் எழுச்சி தீபமாக கலாம் வாழ்ந்து கொண்டிருப்பார் என நடிகர் விவேக் கூறியுள்ளார்.

வெங்கையா நாயுடு புகழாரம்:

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் திடீர் மரணம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய திருநாட்டின் மிக சிறந்த மகனாக திகழ்ந்தார். அவருடைய இழப்பு நாட்டிற்கு பேரிழப்பாகும் எனவும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சி.என்.ஆர்.ராவ் புகழாரம்:

தான் சந்தித்த மனிதர்களில் அப்துல்கலாம் மிகவும் எளிமையானவர் என்றும் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடக வல்லரசாக வேண்டும் என அவர் எண்ணினார், அதற்காக தன் வாழ்நாளையே அர்பணித்தார் என்று பாரத ரத்னா விருது வென்ற ராவ் அப்துல் கலாமிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அவரின் இறுதி மூச்சு மாணவர்களிடம் உரையாடி கொண்டு இருக்கும் போது பிரிந்து இருக்கிறது. கடவுள் அவரை ஆசிர்வதித்தார் என்று நினைக்கிறன் என மேலும் தெரிவித்தார்.

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை:

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி, இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை விடுத்துள்ள அறிக்கையில், உலகத்தர செயற்கைக்கோள்களையும், விண்கலங்களையும் இந்திய ஆய்வுக்கூடங்களிலேயே உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை விஞ்ஞானிகள் மத்தியில் உருவாக்கியவர் நமது அப்துல் கலாம் ஆவார். இந்திய விஞ்ஞானிகளுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்ததற்கு கலாம் அவர்களே முக்கிய காரணம் என குறிப்பிட்டுள்ளார். சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவி வந்த இந்தியா, அவரால் தான் எஸ்.எல்.வி., வகை ராக்கெட்டுகளை செலுத்தி வெற்றி கண்டது. விஞ்ஞானிகள் சமூகத்திலிருந்து தனித்திருப்பவர்கள் என்ற நிலைமை மாற்றி, மக்களோடு மக்களாக கலந்த விஞ்ஞானி அப்துல் கலாம் என புகழாரம் சூட்டியுள்ளார்.