முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் காலமானார்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் காலமானார்

இந்தியக் குடியரசு முன்னாள் தலைவரும், உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்த அணு விஞ்ஞானியுமான டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் (83) திங்கள்கிழமை காலமானார்.

மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) திங்கள்கிழமை மாலை சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அப்துல் கலாம், அங்குள்ள பெத்தானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவாலும், வயோதிகப் பிரச்னைகளாலும் அப்துல் கலாம் பாதிக்கப்பட்டிருந்தார். இருந்தபோதிலும், கல்லூரி மாணவர்களிடையேயான பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும், கருத்தரங்குகளிலும் தொடர்ந்து அவர் பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில், மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் திங்கள்கிழமை அவர் கலந்து கொண்டார். அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள பெத்தானி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அப்துல் கலாமை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மேகாலயா ஆளுநர் வி.சண்முகநாதன், மருத்துவமனைக்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டும் கூட அப்துல் கலாமைக் காப்பாற்ற முடியவில்லை’ என்றார். “”அவரது உடலை செவ்வாய்க்கிழமை காலையில் அண்டை மாநிலமான அஸ்ஸாமின் குவாஹாட்டியில் இருந்து தில்லிக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக மத்திய உள்துறைச் செயலர் எல்.சி.கோயலிடம் பேசியுள்ளேன்’ என மேகாலயா மாநில தலைமைச் செயலர் வார்ஜிரி தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கலாம், தனது வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு போராட்டங்களையும், தடைகளையும் தாண்டி இந்தியாவின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்து, அந்தப் பதவியையே அலங்கரித்தவர்.

தினமணியோடு தொடர்பு: கலாம் சிறுவனாக இருந்தபோது அவரது குடும்பத்தினர் தினமணி முகவராக செயல்பட்டனர். அப்போது, ராமேசுவரத்தில் தினமணி நாளிதழை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கும் பணியை கலாம் மேற்கொண்டார்.

நாட்டின் பல்வேறு ஏவுகணைத் திட்டங்களுக்கு அவர் ஆற்றிய பங்கினைப் பாராட்டி இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கலாமுக்கு 1997-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக, 1981-ஆம் ஆண்டு அவருக்கு பத்ம பூஷண் விருதும், 1990-ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் அவருக்கு கிடைத்தது.

அப்துல் கலாம் எழுதிய “அக்னிச் சிறகுகள், “இந்தியா 2020′, “எழுச்சி தீபங்கள்’ ஆகிய புத்தகங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவையாகும். “உறக்கத்தில் வருவது அல்ல கனவு; உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு’ என்ற தாரக மந்திரத்தை இந்திய இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்தவர் கலாம். தனது வாழ்நாள் முழுவதும் இளைஞர்களின் உந்து சக்தியாக வாழ்ந்த அப்துல் கலாம், மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போதே தனது இன்னுயிரை நீத்துள்ளார். அவரது மறைவு இந்தியர்கள் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேர்மைக்கு உதாரணம் கலாம்!

திருமணம் செய்து கொள்ளாமல் அனைத்து இந்தியர்களையும் தனது உடன் பிறந்தவர்களாக போற்றி வாழ்ந்தார் அப்துல் கலாம். குடியரசுத் தலைவராக இருந்தபோது தன்னைச் சந்திக்க வரும் குடும்ப உறவினர்கள் அதிக நாள்கள் தனது மாளிகையில் தங்கியிருக்காமல் ஊர் திரும்ப வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தார். தனது பதவியை பயன்படுத்தி உறவினர்கள் தவறு செய்துவிடக் கூடாது என்பதில் அந்த அளவுக்கு கடைசி வரை உறுதியுடன் இருந்தார்.

பதவிக்காலம் முடிந்த பிறகு தில்லியில் அரசு பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்ட போது, அங்கு தமது உதவியாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு இறுதி நாள்களைக் கழித்தார். அப்போதும் உறவினர்களோ, நண்பர்களோ அங்கு வந்து உரிமை கொண்டாடுவதை அவர் விரும்பியதில்லை. குடியரசுத் தலைவராக இருந்தபோது இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறையில் விஞ்ஞானியாகப் பணியாற்றிய பொன்ராஜை அவரது பதவிக் காலத்துக்குப் பிறகும் தன்னுடைய ஆலோசகராக வைத்துக் கொண்டார். இதன் காரணமாக அவருக்கு பதவி உயர்வு வாய்ப்புகள் தடைபடும் என்பதை அறிந்து மீண்டும் அவரது டிஆர்டிஓ பணிக்கே திரும்ப அனுமதி அளித்தார்.

இருப்பினும், நதிகள் இணைப்பு, கணினிமயமாக்கல், கலாமின் இணையதள பராமரிப்பு போன்ற பணிகளைக் கவனிக்கும் வேலைகளைமட்டும் தொடர்ந்து கவனிக்குமாறு பொன்ராஜை கலாம் கேட்டுக் கொண்டார். அந்த அன்பு வேண்டுகோளை நிராகரிக்காத பொன்ராஜ் வழிகாட்டுதலின்படி கலாமின் இணையதளம் சில காலம் பராமரிக்கப்பட்டது. பின்னர், கலாமே அதில் தேர்ச்சி பெற்று இணையதளத்தில் உள்ள மின்னஞ்சல்களை தாமே பார்த்து தமது ரசிகர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் பதில் அனுப்பும் வழக்கத்தை பழக்கமாக்கிக் கொண்டார்.

வாழ்க்கைப் பயணம்…

1931, அக்டோபர் 15: தமிழகத்தின் ராமேசுவரத்தில், ஜெயினுலாப்தீன்- ஆஷியம்மா தம்பதியின் மகனாக அப்துல் கலாம் பிறந்தார்.
1954: திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றார்.
1960: சென்னை எம்ஐடி-யில் விமானப் பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்றார். அதே ஆண்டில் டிஆர்டிஓ விஞ்ஞானியானார்.
1969: இஸ்ரோ நிறுவனத்துக்கு மாற்றப்பட்டார்.
1980: கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ரோகிணி செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியதன்மூலம், விண்வெளிக்கு ராக்கெட் ஏவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.
1981: பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
1980-1990: ஒருங்கிணைந்த ஏவுகணை அபிவிருத்தித் திட்டம், கலாம் தலைமையில் வளர்ச்சி பெற்றது. அக்னி, பிருத்வி ஏவுகனைகள் உருவாக்கப்பட்டன.
1990: பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.
1992-1999: டிஆர்டிஓ அமைப்பின் செயலாளராக, பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக கலாம் பணியாற்றினார்.
1997 நவம்பர் 26: பாரத ரத்னா விருது கலாமுக்கு வழங்கப்பட்டது.
1998 மே 13: ராஜஸ்தானின் பொக்ரானில் அணுகுண்டு சோதனை கலாம் தலைமையில் நடைபெற்றது.
1999-2001: பிரதமர் வாஜ்பாயின் முதன்மை அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றினார்.
2002, ஜூலை 25: 11-ஆவது குடியரசுத் தலைவரானார்.
2007 ஜூலை 25: குடியரசுத் தலைவர் பதவிக்காலம் நிறைவு.
2007-2015: நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இளைஞர்கள், மாணவர்களிடையே கல்வி, விழிப்புணர்வுப் பணி.
2015 ஜூலை 27: மேகாலயத்தின் ஷில்லாங்கில் காலமானார்.

திருக்குறளை நேசித்தவர்!

தேசப்பற்று மிக்கவராக இருந்த அப்துல் கலாம், தாய்மொழிப் பற்றாளராகவும் திகழ்ந்தவர். தாய்மொழியான தமிழைப் பேசுவதிலும், அதன் புகழைப் பரப்புவதிலும் மிகவும் ஆர்வம் காட்டியவர். தாம் செல்லும் இடங்களில் எல்லாம் மொழியின் மகத்துவத்தை எடுத்துரைத்தவர். தமிழைப் பேசத் தவறினால், நாம் அடையாளத்தை இழந்துவிடுவோம் என்று வலியுறுத்தியவர். அதேபோன்று, வீட்டில் ஒவ்வொருவரும் தங்களது குழந்தைகளுக்குத் திருக்குறள் பயிற்றுவிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு வலியுறுத்தியவர்.

முயற்சி, உழைப்பு ஆகியவற்றை குறள் வழி நின்று தாம் செயல்படுத்தியதையும் அதனால், தான் வாழ்வில் பல்வேறு வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறியதையும் எடுத்துக் கூறியவர். குடியரசுத் தலைவர் தேர்தலில் அவரை இரண்டாவது முறையாக போட்டியிடுமாறு பலரும் கேட்டுக் கொண்டபோது, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தன்னை வேட்பாளராக முன்னிறுத்த விரும்பினால் மட்டுமே அதுபற்றி சிந்திக்க முடியும் என்று கூறியவர்.

அதேபோன்று, திட்டமிட்டு உருவாக்கப்படும் அரசியலில் தனது பெயரைப் பயன்படுத்துவதை எதிர்த்தவர். குடியரசு முன்னாள் தலைவர் என்ற முறையில் அமைதியாக வாழ்வதையே விரும்பியவர்.