NPR + NRC + CAA

NPR + NRC + CAA

– வீ.வீ.கே. சுப்புராஜ்

NPR என்றால் National Population Register. இது ஒரு சாதாரண மக்கள்தொகை கணக்கெடுப்பைப் போன்றதுதான். முந்தைய கணக்கெடுப்பில் விடுபட்டவராக இருந்தாலோ, குடியுரிமைக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாமலிருந்தாலோ, NRC  (National Register of Citizenship) என்ற அடுத்தக்கட்ட நடவடிக்கை வரும். ஆனால் இந்த NRC  நாடு முழுவதும் நடைமுறைக்கு வருமா என்பது இதுவரை உறுதியாகவில்லை. இந்த NRC -ஐ அஸ்ஸாமில் நடைமுறைப்படுத்தும்படி, ஏற்கனவே உச்சநீதிமன்றமே 2013-இல் அறிவுறுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டுமானால், இப்போது திருத்தப்பட்ட சட்டத் (CAA) தின் கீழ் விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

தற்போதுள்ள NRC -யின்படி அஸ்ஸாமில் குடியேறிய சட்டவிரோத குடிமகன்களைக் கண்டறிவதுதான் நோக்கம். ஆறாண்டுகளுக்குமேல் நடந்த போராட்டங்களின் விளைவாக, மத்திய அரசாங்கத்தால் ’அனைத்து அஸ்ஸாம் மாணவர் அமைப்பு (AASU) All Assam Gana Sangram Parishad (AAGSP) ஆகியவையுடன் 1985-இல் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, மார்ச் 25, 1971-க்கு முன்பு குடியேறியவர் ஏதாவது ஒரு சான்றிதழைக் காண்பித்து, அது ஏற்றுக் கொள்ளப்பட்டால், அவரது குடியுரிமை ஏற்றுக்கொள்ளப்படும். இதை CAA, NRC  தேதியை டிசம்பர் 31, 2014 என்று நீட்டித்துள்ளது. ஆனால் இந்த நீட்டிப்பு முஸ்லீம்கள் அல்லாதவருக்கு மட்டுமே பொருந்தும். 1971-க்குள் தாங்கள் அஸ்ஸாமில் குடியேறிவிட்டோம் என்பதை நிரூபிக்க 14 சான்றிதழிகளில் ஏதாவது ஒன்றை, அங்கு குடியிருப்பவர்கள் காட்ட வேண்டும்.

அவற்றில் சில : 1951 NRC , 24 மார்ச் 1971-இல் வாக்காளர் பட்டியலில் பெயர், நிலப்பத்திரம், பாஸ்போர்ட், பட்டப்படிப்பு சான்றிதழ் இது போன்றவை.

அஸ்ஸாமிற்கு வெளியே, மற்ற மாநிலங்களில் NRC -க்காக ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை இதுபோன்ற ஏதாவது ஒன்றைக் காண்பித்தால் போதும். வேறு எதையாவது காண்பிக்கலாமா? என்பதை விதிமுறைகள் வெளியிடப்பட்ட பின்புதான் தெரியவரும். ஏதாவதொருவர் சாட்சியாக இருந்தால் கூடப்போதும்.

இந்தியக்குடிமக்கள் எந்தவொரு தொந்தரவிற்கும் ஆட்படுத்தப்படமாட்டார்கள். 1986-இல் திருத்தப்பட்ட, குடியுரிமைச்சட்டம் 1955-இன்படி, ஜூலை 1, 1987-க்கு முன் பிறந்த அனைவரும் இந்தியக்குடிமக்களே. 2003 திருத்தச் சட்டத்திற்குப்பிறகு, 2004, டிசம்பர் 3-க்குப்பிறகு பிறந்தவர்களின் தாயோ தந்தையோ இந்தியக்குடிமகனாக இருந்தால் போதும். ஆனால் அதே சமயத்தில் தாயோ தந்தையோ சட்டவிரோதமாகக் குடியேறியவராக இருக்கக் கூடாது.

இந்த விதிகள் அஸ்ஸாமிற்குப் பொருந்தாது. அங்கு cut off வருடம் 1971. ஆனால் மற்ற மாநிலங்களில் ஜனவரி 26, 1950-க்குப்பின் வேறு நாட்டில் பிறந்து, சரியான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் இந்தியாவில் குடியேறி இருந்தால், அவர்கள் சட்டவிரோத குடிமகன்கள் ஆவர்.

தற்போதைய CAA + NRC  எப்படி வேலை செய்யும் என்று ஆழமாகப் பார்த்தால், வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து, மதச்சாயம் பூசப்பட்டு துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் அல்லாதோர், சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்துக்கள், இவர்களுக்குக் குடியுரிமை வழங்க உதவும். உதாரணமாக அஸ்ஸாமில் 3.29 கோடி பேர் NRC -இன் கீழ் மனுசெய்தனர். அவர்களில் 3.1 கோடி பேர் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். 19 லட்சம் பேர் இதில் அடக்கம் இல்லை. ஆனால் அவர்கள் பெரும்பாலோர் இந்துக்கள். இவர்களுக்கு CAA-யின்படி குடியுரிமை வழங்கலாம். உதாரணமாக நாடுமுழுவதும் NRC  நடைமுறைக்கு வரும்போது 5 சதவீத மக்கள் (6.5 கோடி) விடுபடுகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், அவர்களில் பெரும்பாலும் இந்துக்கள். வடகிழக்கிலும், மேற்குவங்கத்திலும், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வாழும் இந்துக்கள் அவர்களுடைய பூர்வீகத்தை மேற்கூறிய 3 நாடுகளில் கண்டுபிடிக்கலாம். அவர்களுக்கு எந்த ஆவணமும் தேவையில்லை. இந்த CAA, NRC -இல் விடுபட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஆனால், ஆந்திராவிலோ, கேரளாவிலோ வாழும் ஒருவர், இந்த மூன்று நாடுகளிலிருந்து துன்புறுத்தப்பட்டு வெளியேறியவர்கள் என்று கருதப்பட முடியாது. எனவேதான் இதை எதிர்க்கட்சிகள், வங்காள இந்துக்களின் ஆதரவைத்திரட்டி, வரும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் BJP ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என திட்டம் வகுக்கிறது என்கின்றன.

எனவே கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களில் NRC -இல் விடுபட்டவர்களின் நிலை என்ன? அவர்கள் இந்துக்களாக இருந்தாலும், மூன்று நாடுகளிலிருந்து துன்புறுத்தி அனுப்பப்பட்டவர்கள் என்று கருத முடியுமா? மற்ற மாநிலங்களில் குடியேறி வசிக்கிற இந்துக்களுக்குக் கூட CAA-வினால் பிரச்சினைகள் வருமோ என்ற பயத்தில்தான் நாடெங்கும் போராட்டங்கள் வலுக்கின்றன. இதை அரசு தெளிவுபடுத்தவேண்டும்.

இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் படிப்பறிவில்லாதவர்களாக, வறுமையின் பிடியில் பலர் இருப்பதால், அவர்களுடைய குடியுரிமையை எந்த சான்றிதழிகள் கொண்டு நிரூபிக்கப் போகிறார்கள்? அவர்கள் இஸ்லாமிய, முகலாய ஆட்சிக்காலங்களில் நாட்டிற்குள் வந்தவர்களா? இங்கேயே மதம் மாறியவர்களா? இதையெல்லாம் நிரூபிப்பது சிரமம்தான். ஏற்கனவே, பல மாநிலங்களில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அவைகள் தயார்நிலையில் உள்ளன என்று கேள்விப்படும்போது, மக்கள் கலக்கத்தில் உள்ளனர். அஸ்ஸாமில் ஏற்கனவே 6 முகாம்கள் உள்ளன. கோபால்புரா, மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களில் தலா ஒன்று அமைக்கப்பட்டுள்ளன. BJP-இன் இந்துத்துவா கோட்பாட்டினால், இஸ்லாமியர்கள் மட்டுமே குறிவைக்கப்படுவார்களோ என்ற அச்சமும் நிலவுகிறது.

NRC -ஐ CAA-வோடு இணைக்க வாய்ப்பே இல்லை என அரசு பலமுறை கூறியிருந்தாலும், மக்களிடையே அதுவும் இஸ்லாமிய மக்களிடையே பயம் நிலவுகிறது. அதே சமயம் அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் நுழைபவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. NRC  + CAA-வால் விடுபடக்கூடியவர்கள் இருக்கிறார்களா என்பதைப் பார்ப்போம். இந்தியாவில் 2019 டிசம்பர் 21-இன் படி 124.95 கோடி பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். 102.6 கோடி பேர் அலைபேசி வைத்துள்ளனர். ஆதாரே போதும் என்று அரசு பல சமயங்களில் கூறி இருந்தாலும், ஆதார் சட்டம் பிரிவு 9-இன்படி, ஆதார் அட்டை ஒருவரின் குடியுரிமையை உறுதிசெய்யாது எனக் கூறுகிறது.

இந்த சூழ்நிலையில், பல மாநிலங்கள் NRC -ஐ அமல்படுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளது. ஆனால் குடியுரிமை, அயல்நாட்டவர், இயல்புரிமை முதலியவை சம்பந்தமாக 7-ஆம் அட்டவணையில் உள்ளதால், அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. CAA சட்டமாக வந்த பிறகு

NPR– மக்கள்தொகை கணக்கெடுப்பைக்கூட கேரளமும் மேற்குவங்கமும் நிறுத்திவிட்டன. இந்த NPR-இல் கணக்கெடுக்கப்பட்டு அதில் அடங்குபவர்களுக்குத்தான் ’தேசிய அடையாள அட்டை கொடுக்கப்படலாம். NPR-இன்படி ஆறுமாதங்களுக்கு மேல் ஒரு அயல் நாட்டவர் ஓரிடத்தில் வசித்தாலே அவர் NPR-இல் வந்துவிடுவார். எனவே NPR-ஐ NRC -க்குள் அடக்கமுடியாது. குடியுரிமை பெற

NRC -க்குள் வரவேண்டும். சரியான விதிமுறைகளே குழப்பங்களைத் தீர்க்கமுடியும்.

மேலும் நாடுமுழுவதும் NRC -ஐ தயார் செய்ய வேண்டுமானால் 4.26 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். அஸ்ஸாமில் இந்த 19 லட்சம் பேரைக்கண்டறிய நடத்தப்பட்ட NRC  நடவடிக்கைகளுக்காக 1600 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது. இந்தியாவின் இன்றையப் பொருளாதார நிலை இதற்கு இடம் கொடுக்குமா?