இலங்கையில் அரசியல் விளையாட்டு

இந்தியாவின் அண்டைநாடும் இந்தியப்பெருங்கடலின் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் முக்கியமான நாடுமான இலங்கையில் 2018 அக்டோபர்-டிசம்பர் காலகட்டத்தில் மாபெரும் அரசியல் குழப்பம் நிகழ்ந்தது. அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் முன்னாள் அதிபர் மஹிந்த இராஜபக்ஷேவும் ஆடிய ஆட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பகடையாக்கப்பட்டார்.

கடந்த 2010 முதல் 2015 வரை இலங்கையின் அதிபராக விளங்கிய இராஜபக்ஷே விடுதலைப்புலிகளை அழிக்கிறேன் என்ற பெயரில் பெரும்பான்மை சிங்களவரின் ஆதரவோடு ஏராளமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வந்ததுடன் மாபெரும் ஊழல்களை புரிந்தார். மேலும் சீனாவின் கைப்பாவையாக மாறி இந்தியப்பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க உதவினார். இது இந்தியாவின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியது. இந்நிலையில் இராஜபக்ஷேவின் இலங்கை சுதந்திரக் கட்சியைச் சார்ந்த அவரது அமைச்சரவையிலேயே பல்வேறு அமைச்சரகப் பொறுப்புகளை வகித்துவந்த மைத்ரிபால சிறீசேனா, இந்தியாவின் உதவியுடன் அதிபரானார். இந்தியாவின் முயற்சியால் எதிர்கட்சியான இலங்கை ஐக்கிய தேசியக்கட்சியும் சிறீசேனாவிற்கு ஆதரவளித்தது. ஐக்கியதேசியக்கட்சியின் தலைவரான விக்கிரமசிங்கே இலங்கையில் பிரதமரானார். துவக்கத்தில் இணக்கமாக இருந்த இக்கூட்டணியில் சில வேறுபாடுகள் முளைவிடத் தொடங்கின. ரணில் விக்கிரமசிங்கே தீவிர இந்திய ஆதரவாளராக விளங்கினார். சிறீசேனாவிற்கு இந்தியாவின்மீது எந்த வெறுப்பும் இல்லாத நிலையிலும் விக்கிரமசிங்கே இந்தியாவின் உதவியுடன் அதிக ஆதிக்கம் செலுத்துவதாகக் கருதினார். இத்தகைய சூழலில் இந்தியா வந்திருந்த விக்கிரமசிங்கே, இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு அதிபர் சிறீசேனா வேண்டுமென்றே காலம் தாழ்த்தி ஒப்புதல் அளிப்பதாகவும், முட்டுக்கட்டை போடுவதாகவும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பகிங்கரமாகக் குற்றம் சாட்டினார். இதனையடுத்து சிறீசேனா-விக்கிரமசிங்கே உறவில் இடைவெளி மேலும் அதிகரித்தது. இந்தியாவின் வெளிநாட்டு உளவுப்படையான ‘‘ரா’’ (சுஹறு) தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறது என சிறீசேனா குற்றம் சுமத்தினார். இருப்பினும் ஓரிரண்டு நாட்களில் சிறீசேனாவே இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.

இந்நிலையில் 2018 அக்டோபர் 26 அன்று இலங்கையில் புதிய பிரதமராக மகிந்த இராஜபக்சேவை நியமித்தார். இலங்கை அரசியல் சாசனத்தின்படி, அந்நாட்டு அதிபருக்கு, பிரதமரை நியமிக்க அதிகாரமுண்டு ஆனால் பதவி நீக்கம் செய்ய அதிகாரமில்லை. பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால் சிறீசேனாவின் கட்சியைத்தவிர பிற எந்தக்கட்சியும் இராஜபக்ஷேவுக்கு ஆதரவு தெரிவித்து விக்கிரமசிங்கேவை பதவிநீக்கம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. எனவே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைத்தார். இந்நிலையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தமக்கே உள்ளது என அறிவித்த விக்கிரமசிங்கே, நாடாளுமன்றத்தைக்கூட்ட சபாநாயகர் கரு ஜெயசூர்யாவைக் கேட்டுக்கொண்டார். இதற்கும் சிறீசேனா தடைபோட்ட நிலையில், மீண்டும் கூட்டப்பட்ட பாராளுமன்றக் கூட்டத்தில் இராஜபக்ஷேவினால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இயலவில்லை இருப்பினும் அதிபர் சிறீசேனா அவரைப்பதவியில் தொடர அனுமதித்துடன் பெரும்பான்மை பலம்பெற்ற விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மறுத்தார். இதனையடுத்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் இராஜபக்ஷேவைப் பதவி நீக்கம் செய்துவிட்டு விக்கிரமசிங்கேவை பதவியிலமர்த்துமாறு தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து 2018 டிசம்பர் 16 அன்று விக்கிரமசிங்கே மீண்டும் பிரதமராகப் பதவியிலமர்த்தப்பட்டார். இராஜபக்ஷே எதிர்கட்சித்தலைவரானார்.

இக்குழப்பம் அதிபர் மைத்திரிபால சிறீசேனாவின் அதிகார மற்றும் பதவி ஆசையினால் ஏற்பட்டதாகும். கடந்த 2015 பொதுத் தேர்தலில் சொந்தக்கட்சியிலேயே பிரிவினையை ஏற்படுத்தி அதிகாரத்திற்குவந்த சிறீசேனா 2020-இல் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் அதிபர் பதவிக்கு வரவேண்டுமாயின் விக்கிரமசிங்கேவுடன் இணைந்திருப்பது சாதகமானதல்ல என்பதை உணர்ந்து கொண்டார். எப்படியாவது பதவியில் நீடித்திருக்க வேண்டுமென விரும்பிய சிறீசேனா யாருடைய காலைவாரிவிட்டு அப்பதவிக்கு வந்தாரோ அவருடனே (இராஜபக்ஷே) கூட்டணி இணையைத் தயாராகிவிட்டார். தனது பதவி ஆசைக்காக இலங்கையில் ஒரு மாபெரும் பகடையாட்டத்தையே ஆடிவிட்டார் சிறீசேனா. நல்லவேளையாக உச்சநீதிமன்றமும், நாடாளுமன்றமும் இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளன.

Tagged with