பாகிஸ்தானின் குடியுரிமைச் சட்டமும் இந்தியக் குடியுரிமைச் சட்டமும் – ஒரு ஒப்பீடு

பாகிஸ்தானின் குடியுரிமைச் சட்டமும் இந்தியக் குடியுரிமைச் சட்டமும் – ஒரு ஒப்பீடு

– வீ.வீ.கே. சுப்புராஜ்

நம்முடைய நாடாளுமன்றத்தால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாகியுள்ள ’இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் குறிப்பாக இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தழிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நம்மை ஒட்டியுள்ள அண்டை நாடுகளிலும் மற்ற நாடுகளிலும் குடியுரிமைச் சட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில், 42-ஆவது அரசியல் சாசன சட்டத்திருத்தத்திற்குப்பின், ’மதச்சார்பின்மை என்று பதத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்பதின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், இந்திய அரசு, அனைத்து மதங்களுக்கும் சமமதிப்பு வழங்குதல் என்பதேயாகும். உலகிலுள்ள 60 அரசியல் சாசனங்களில் ’கடவுள் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இந்த வார்த்தையை ’ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து போன்ற அனைத்து நாட்டு அரசியல் சாசனங்களிலும் காணலாம். பாகிஸ்தான் அரசியல் சாசனத்தில், அரசியலமைப்பு நிரண்ய சபையில் இடம்பெற்ற இந்து உறுப்பினர்கள், குறிப்பாக சிரிஸ் சந்திர சட்டோபாத்யாயா, எழுப்பிய எதிர்ப்புக் குரல்களைப் பொருட்படுத்தாமல், ’அல்லாஹ் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. முஸ்லீம், இஸ்லாம் என்ற வார்த்தைகளும் உபயோகிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் குடியுரிமைச் சட்டம், இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை பல பரிமாணங்களில் ஒத்திருந்தாலும், பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம், குடியுரிமை அளிப்பதில் மிக எளிமையான சரத்துக்களையே கொண்டுள்ளது. பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம் பிரிவு 6-இன்படி, ஜனவரி 1, 1952-க்கு முன்பு பாகிஸ்தானில் குடியேறிய அனைவரும் குடிமக்களே என்று கூறுகிறது. பிரிவு 3-இன்படி, மார்ச் 31, 1973-க்குள் பாகிஸ்தானோடு சேர்ந்த பகுதியில் பிறந்த (அவர்களுடைய தாத்தா, பாட்டிகள், தாய், தந்தையர் அங்கு வாழ்ந்திருக்க வேண்டும்) அனைவரும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவராவர். ஏப்ரல் 13, 1951 வரை பாகிஸ்தானுக்குள் வந்தவர்களும் குடியுரிமை பெற்றவர்கள். இந்தியாவில் இந்த தேதி ஜூலை 19, 1948 ஆகும். அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் இது மார்ச் 25, 1971 ஆகும். பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம் பிரிவு 4-இன்படி, இந்தச் சட்டம் அமலில் வந்த பிறகு, பாகிஸ்தானில் பிறந்த அனைவரும், அதன் குடிமகன்கள் என்று ஒத்துக் கொள்கிறது. ஆனால், இந்தியக் குடியுரிமை சட்டத்தில் 1986-இல் செய்யப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், தாயோ, தந்தையோ இந்தியக்குடிமகனாக ஆகியிருந்தலொழிய இந்தியக்குடிமகன் ஆக முடியாது. 2003 திருத்தத்தின்படி, பெற்றோர்கள் இருவருமே இந்தியக் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். பிரிவு 5, பாகிஸ்தான் குடியுரிமை சட்டப்படி, பெற்றோர்களில் யாராவது ஒருவர் பாகிஸ்தானியராக இருந்தால் போதும் என்று கூறுகிறது. ஜம்மு, காஷ்மீரிலிருந்து குடிபெயர்ந்த அனைவரையும் குடிமகன்களாக பாகிஸ்தான் ஏற்றுக்கொள்கிறது. பிரிட்டிஷ் குடியிருப்பவர்களுக்கும், காமன்வெலத் நாட்டவர்களுக்கும் குடியுரிமை கொடுக்கலாம் என்று பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம் கூறுகிறது.

நம்முடைய அரசியல் சாசன முகப்புரையைப் போல, பாகிஸ்தான் அரசியல் சாசன முகப்புரையிலும் மதச்சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என்றே கூறப்படுகிறது. ஆனால் அந்தச் சுதந்திரம் சட்டப்படி உபயோகிக்கப்பட வேண்டும் (Legitimate Interests) என்று கூறப்பட்டுள்ளது. சட்டப்படி என்பதை பல வகையில் அர்த்தம் கொள்ளலாம். இந்தியாவிலுள்ள அனைத்து வகையிலான மதச்சுதந்திரமும் பாகிஸ்தானில் உண்டு. பத்திரிக்கை சுதந்திரம் உண்டு. ஆனால் அது ’இஸ்லாமின் மேன்மைக்கு விளைவிக்காத வகையில் இருக்க வேண்டும்.

பாகிஸ்தானில், சிறுபான்மையினருக்கும் அரசுப்பதவிகளில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பலுச்சிஸ்தானில் 4.62ரூ (சிறுபான்மையினர் 1.25%), பாகிஸ்தான் பஞ்சாபில் 2.16% (2.79%), சிந்து மாகாணத்தில் 5.36% (8.69%), வடமேற்குப் பகுதியில் 0.56% (2.46%) ஒதுக்கீடுகள் உள்ளன.

மேற்குப் பாகிஸ்தானில் 1951-இல் 5 மில்லியன் இந்துக்கள் இருந்தனர். அது மொத்த மக்கள்தொகையில் 3.44 சதவீதமாகும். 1961 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2.83 சதவீதமாக இஸ்லாமியர் அல்லாதோர் குறைந்துள்ளனர். ஆனால் 3.25 சதவீதமாக 1972-லும் 3.70 சதவீதமாக 1998-இல் இது உயர்ந்துள்ளது.

ஆனால் இந்தியாவில் 1951-இல் 9.8 சதவீதமாக இஸ்லாமியர்கள், 2011 கணக்கெடுப்பின்படி 14.2 சதவீதமாக அதிகரித்துள்ளனர்.

1971-இல் உருவான வங்காளதேசம் இந்தியாவுடன் அதிக நீளமான எல்லையைக் கொண்டுள்ளது. எனவே அங்கிருந்து, அருகிலுள்ள இந்திய மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர்.

எனவே தற்போது நடைமுறைக்கு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டம் தேவை என்றாலும், இது இந்திய அரசயில் சாசனத்தின் மதச்சார்பின்மையை பாதிக்குமா என்பதை உச்சநீதிமன்றம் தான் கூற வேண்டும்.