அமெரிக்காவின் புதிய அதிபர்

அமெரிக்காவின் புதிய அதிபர்

உலகின் மிகப்பெரிய மற்றும் மூத்த ஜனநாயக நாடான அமெரிக்காவின் 45-ஆவது அதிபருக்கான தேர்தல் 2016 நவம்பர் 8 அன்று நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 538 பிரதிநிதிகளுக்கான இடங்களில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக 306 இடங்கள் கிடைத்தன. மொத்தம் 61,469,976 வாக்குகள் அவருக்கு கிடைத்தன. ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், டிரம்ப்பைவிட ஏறத்தாழ 13 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருப்பினும் அவரை ஆதரிக்கும் பிரதிநிதிகளுக்கான இடங்களில் 74 இடங்கள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்தார். மொத்தமுள்ள 50 மாகாணங்களில் டிரம்ப் 30 மாகாணங்களிலும் ஹிலாரி 20 மாகாணங்களிலும் பெரும்பான்மை பெற்றிருந்தனர். தற்போதைய அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் 2017 ஜனவரி வரை உள்ள நிலையில் அமெரிக்காவின் 45- ஆவது அதிபராக 2017 ஜனவரி 20 அன்று டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ளார்.

உலக அரசியலிலும் பொருளாதாரத்திலும் முக்கியப் பங்காற்றும் அமெரிக்காவில் ஏற்படும் சிறு மாற்றம் கூட ஒட்டுமொத்த உலகிலும் விளைவுகளை ஏற்படுத்தும் எனும் நிலையில் அமெரிக்காவை முழுமையாக நான்கு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யும் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவது உலகின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகி விடுகிறது. 45-ஆவது அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனும், டொனால்ட் டிரம்ப்பும் அனைத்திலும் நேரெதிர் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். ஹிலாரி, குடியேறிகளை பாதுகாப்பதாகவும் அவர்களின் ஒப்பற்ற சேவையால்தான் அமெரிக்கா முன்னேறியுள்ளது என கருதியதுடன் அமெரிக்காவில் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளித்தார், அனைவரும் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் எனும் அரசின் தற்போதைய நிலை மறுபரிசீலனை, அகதிகளுக்கு கருணை, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் நல்லுறவு, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி, ஜப்பான், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு தொடர்ந்து உதவி, இரஷ்யா விவகாரத்தில் தற்போதைய நிலையையே தொடர்வது, வேலைவாய்ப்புகளை பெருக்குவது, நாட்டின் பொருளாதாரத்தினை முன்னேற்றுவது எனப் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் குடியரசுக்கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவை மீண்டும் உன்னதமாக்குவேன் (Make America Great Again) எனும் முழக்கத்தோடு, அமெரிக்க வரலாற்றில் இதுவரை எந்த அதிபரும் கொடுக்காத, பேசக்கூடத் துணியாதவற்றையெல்லாம் வாக்குறுதிகளாக அளித்தார். தாம் பதவிக்கு வந்தால் குடியேற்றக் கொள்கைகள் கடுமையாக்கப்படும் சட்டத்திற்கு புறம்பான குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்படுவர், சட்டபூர்வமற்ற ஊடுருவலைத் தடுக்க அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் அமைக்கப்படும், அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கம் தடுத்து நிறுத்தப்படும், இரஷ்யாவுடனான பகை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நட்புறவு ஏற்படுத்தப்படும், பாகிஸ்தானுக்கு உதவிகள் நிறுத்தப்படுவதோடு ஸ்திரத்தன்மையற்ற அந்நாட்டின் அணு ஆயுதங்களால் உலகம் பாதிக்கப்படாமல் இருக்க எப்பொழுதும் தயார் நிலையிலுள்ளவாறு 10 ஆயிரம் வீரர்களைக் கொண்ட படை ஒன்று ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்படும், ஐரோப்பிய நாடுகளுடனான உறவு மறுபரிசீனை செய்யப்படும், வளைகுடா நாடுகளுக்கும் ஜப்பானுக்கும் செய்யும் இராணுவ உதவிகளுக்கு உரிய கட்டணம் வசூலிக்கப்படும், இஸ்லாமியர்களின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படும், அனைவரும் துப்பாக்கி வைத்துக்கொள்ள தொடர்ந்து அனுமதிக்கப்படும், வரிகள் குறைக்கப்பட்டு முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் எனப் பல்வேறு எதிர்மறையான அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் உலக வெப்பமயமாதல் எனும் கருத்தே ஜோடிக்கப்பட்டது எனவும் அதற்கென மேற்கொள்ளப்பட்ட பாரீஸ் பருவநிலை மாற்றத்திற்கான ஒப்பந்தம் அவசியமற்றது என்றும் கருதினார்.

2008-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தத்திற்குப் பிறகு அமெரிக்கப் பொருளாதாரம் நிலைகுலைந்து போனதையடுத்து ஏராளமானோர் பொருளாதார ரீதியில் சிக்கலுக்குள்ளாயினர் மேலும் புதிய வேலைவாய்ப்புகள் பெருகாததால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வந்தது, உலக நாடுகளில் நிலவும் சூழ்நிலை அமெரிக்கர்களுக்கு ஒருவித அச்சத்தினை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக அமெரிக்க அதிபராக ஜனநாயக கட்சியின் பராக் ஒபாமா பதவி வகித்து வரும் நிலையில், அவருடைய கொள்கைகள் மற்றும் ஆட்சி முறையில் மக்களுக்கு சலிப்புதட்டி நாளடைவில் அது அதிருப்தியாக மாறியிருந்தது. சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் அமெரிக்கா தோல்வியைச் சந்தித்து வருவதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் அச்சத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில் மக்களின் அவநம்பிக்கைகளையும் வெறுப்புணர்வையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட டிரம்ப் அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் வாக்குறுதிகளை அளித்தார். அமெரிக்காவை மீண்டும் பழையபடி உருவாக்குவோம் என நம்பிக்கையளித்த அவர் அதற்கு மக்களின் வெறுப்புக்குள்ளாகிய எளிதில் நம்பும்படியானவற்றை வாக்குறுதிகளாக அளித்து அவர்களை தம்மை நோக்கி ஈர்த்தார்.

மறுபுறம் எதிர்தரப்பு வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு டிரம்ப் வீசிய அடுத்தடுத்த கணைகளை சமாளிக்கவே நேரம் போதுமானதாக இருந்தது. மேலும் அவர் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தபோது முக்கிய விவரங்களை தனது சொந்த மெயிலில் அனுப்பி அரசு இரகசியங்களைக் கசிய விட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. இது ஹிலாரி மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குலைத்து விட்டது. மேலும் பதவியிலிருக்கும் பொழுது தனது தொண்டு நிறுவனத்திற்கு முறைகேடாக ஏராளமான நிதி சேர்த்தார் எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

உண்மையில் 45-ஆவது அதிபர் தேர்தலைப் போன்று இதுவரை அமெரிக்க மக்கள் இதுபோன்றதொரு பிரச்சாரத்தினைக் கண்டிருக்க மாட்டார்கள். அவ்வளவு தரம் தாழ்ந்த வாதங்களை முன்வைத்து இரு தரப்பினரும் பரஸ்பரம் தங்களது பிரசாரங்களை மேற்கொண்டனர். குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், அரசியலில் சிறிதும் முன் அனுபவமற்றவர். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் அதிபர் பதவிக்கானத் தேர்தலையே அவர் ஒரு வியாபாரமாகத்தான் கருதியது போல் தோன்றியது. மற்றொருபுறம் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி என்ற ஒரே தகுதியை அடிப்படையாகக் கொண்டு அரசியலுக்கு வந்த ஹிலாரி, அரசு இரகசியங்களைப் பொறுப்பின்றி கையாண்டது. தீவிரவாதிகளுடன் ஆயுத விற்பனையில் ஈடுபட்டது, தனது தொண்டு நிறுவனத்திற்கு முறைகேடாக நிதி திரட்டியது உள்ளிட்ட புகார்களால் பிரச்சார காலத்தின் துவக்க கட்டத்தினைப் போலன்றி இறுதி கட்டத்தில் தடுமாறியதாலும் ஹிலாரி வெற்றி வாய்ப்பை இழந்தார். பெரும்பான்மையான அமெரிக்கர்கள் ஹிலாரியே அடுத்த அதிபராக வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தனர். எவருக்குமே டிரம்ப்பின் வெற்றி வாய்ப்பில் முழு நம்பிக்கையில்லை (டிரம்ப் உட்பட). இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டிரம்பின் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. இது அவருக்கு அசுர பலத்தினை அளித்துள்ளதால் அவரின் விருப்பம்போல் முடிவுகளை எடுக்க இயலும். டிரம்பின் வெற்றியை எதிர்த்தும் அவரைத் தங்களின் அதிபராக ஏற்றுக் கொள்ள முடியாது என ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் சாலைகளில் இறங்கி போராடி வருகின்றனர். தற்பொழுதுவரை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் நோக்கங்களும், கொள்கைகளும் முந்தைய அதிபர்களைவிட பெரிய அளவில் மாறுபட்டிருக்காது. ஆனால் டிரம்பிற்கும் ஒபாமாவிற்கும் ஏழாம் பொருத்தம். முதல் அத்தியாயத்தில் கூறியபடி, அமெரிக்காவில் ஏற்படும் எந்தவொன்றும் ஒட்டுமொத்த உலகையும் பாதிக்கும் எனும் நிலையில், எப்படியும் வகைப்படுத்த முடியாத டிரம்ப்பின் செயல்பாடுகளால் ஏற்படவுள்ள மாற்றங்களை அமெரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் ஆச்சர்யம், அதிர்ச்சி மற்றும் அச்சம் கலந்த பார்வையோடு எதிர் நோக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *