முசாஃபர்பூர் மூளைக்காய்ச்சல்

பீஹார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு 136-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான செய்தி, இந்தியாவில் மற்ற மாநிலத்தவர்களையும் அச்சுறுத்தியது. வைரஸ்-ன் தாக்குதலால் மூளைத் திசுக்களில் அழற்சி உண்டாகி காய்ச்சலாக மாறுவதை
மூளைக்காய்ச்சல் என்கிறோம். இதை ’மூளை அழற்சிக் காய்ச்சல் (Encephalitis) எனவும் கூறப்படுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாங்க முடியாத அளவுக்குத் தலைவலியும் அளவில்லாமல் வாந்தியும் ஏற்படும். மனக்குழப்பமும் அதைத் தொடர்ந்து வலிப்பும் வரும். அடுத்து ’கோமா எனும் ஆழ்நிலை மயக்கத்துக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்து நேரும்.
ஆனால், முசாஃபர்பூர் மாவட்டக் குழந்தைகளைப் பாதித்துள்ள மூளைக்காய்ச்சல் இந்த ரகமல்ல. இந்தக் குழந்தைகள் லிச்சிப் பழங்களைச் சாப்பிட்ட காரணத்தால் மூளை பாதிக்கப்பட்டு, ’மூளைவினை நோய் (Encephalopathy) வந்து இறந்திருக்கின்றனர். மூளை அழற்சிக் காய்ச்சலுக்கும் இந்த மூளைநோய்க்கும் அதிக வித்தியாசம் உண்டு. முக்கியமாக, உடலில் குளுக்கோஸ் உற்பத்தி ஆவதில் குறைபாடு ஏற்படுவதால், இந்த நோய் வருகிறது. அதிலும் போதிய ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளை மட்டுமே இது பாதிக்கிறது. இத தொற்றுநோயும் இல்லை ; மற்றவர்களுக்குப் பரவுவதும் இல்லை.


முசாஃபர்பூர் மாவட்டத்தில் ஏழைக் குழந்தைகள் தங்கள் பசியைப் போக்க லிச்சிப் பழங்களைச் சாப்பிடுகின்றனர். லிச்சிப் பழங்களில் ’மெத்திலின் சைக்லோபுரோபைல் கிளைசின்
(Methylene cyclopropyl glycine) எனும் நச்சுப்பொருள் உள்ளது. இதுதான் அந்த ஏழைக் குழந்தைகளுக்கு உயிரைப் பறிக்கும் காரணியாக அமைந்தது. பொதுவாகவே, அதிகாலையில் நம் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைந்துவிடும். அதை ஈடுகட்ட கல்லீரல் தன்னிடமுள்ள கிளைக்கோஜென் எனும் சேமிப்புச் சர்க்கரையிலிருந்து சுயமாக குளுக்கோஸை உற்பத்தி செய்து ரத்தத்துக்குக் கொடுக்கும். அப்போது ரத்த குளுக்கோஸ் அளவு சரியாகிவிடும். போதிய ஊட்டச்சத்துள்ள குழந்தைகளுக்கு இது பொருந்தும். ஆனால், போதிய ஊட்டச்சத்து இலலாத குழந்தைகள் இரவில் உணவு சாப்பிடாமல், இந்தப் பழங்களை மட்டுமே சாப்பிட்டுவிட்டுப் படுத்து உறங்கினால், அவர்கள் ரத்தத்தில் அதிகாலையில் குளுக்கோஸ் அளவு குறைந்துவிடும்போது, அதை ஈடுகட்ட கல்லீரல் குளுக்கோஸை உற்பத்திசெய்ய முடியாது. காரணம், அவர்கள் சாப்பிட்ட லிச்சிப் பழங்களின் நச்சுப் பொருள் அவ்வாறு குளுக்கோஸ் உற்பத்தியாவதைத் தடை செய்துவிடுகிறது.
அவர்களுக்கு கிளைக்கோஜென் எனும் சேமிப்புச் சர்க்கரையும் இருக்காது. இதன் விளைவால், அந்தக் குழந்தைகளுக்கு ரத்த குளுக்கோஸ் அளவு ரொம்பவே குறைந்துவிடுகிறது. மூளைக்கு
3 நிமிடங்களுக்கு மேல் தேவையான குளுக்கோஸ் கிடைக்காவிட்டால், மூளை செயலிழந்துவிடும். வாந்தி, மயக்கம், வலிப்பு ஏற்படும். உடனடியாகக் கவனிக்காவிட்டால் இறப்பு நெருங்கிவிடும். இப்படித்தான் முசாஃபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகள் பலியாகியிருக்கின்றனர். இந்த நோய்க்குச் சிகிச்சை இருக்கிறது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக குளுக்கோஸ் செலுத்திவிட்டால் நிலைமை சரியாகி விடும். எனவே, போதிய விழிப்புணர்வும் உடனடி கவனிப்பும் இருந்தால் போதும், இந்த நோயிலிருந்து எவரும் எளிதாகத் தப்பிக்கலாம். இறந்த குழந்தைகளில் பெரும்பான்மையானவை ஒன்று முதல் பத்து வரையிலான வயதுக்கு உட்பட்டவை.
பீஹார் குழந்தைகள் மரணத்தை வெறும் சுகாதாரப் பிரச்சினையாகப் பார்ப்பது நமக்குத் தீர்வைத் தராது. சமூக, பொருளாதாரப் பிரச்சினையாகவும் பார்க்க வேண்டும். ஊட்டச்சத்து குறைவான கர்ப்பிணிகளைக் கவனிப்பதைப் போல மிகவும் வறியவர் வீட்டுக் குழந்தைகளுக்குக் குறைந்தது மூன்று வேளை உணவு கிடைப்பதற்கான பொருளாதாரச் சூழலை, அதற்கான நிதியுதவியை அரசு தரும் ஒரு திட்டத்துக்கான தேவையை இது உணர்த்துகிறது.
மேலும், நம்முடைய சுகாதாரத்துறை அவலட்சணமான தன்னுடைய கட்டமைப்பை மேம்படுத்திக்கொள்ளவும் முனைய வேண்டும். 2008 முதல் 2014 வரையில் இந்தியாவில் மூளை அழற்சி நோய்க்கு 44,000 பேர் ஆளாகியிருக்கின்றனர். அவர்களில் 6,000 பேர் இறந்துள்ளனர். எஞ்சியவர்கள் டெக்ஸ்ட்ரோஸ், குளுக்கோஸ் அளித்ததால் உயிர் பிழைத்தனர். காய்ச்சல் அறிகுறி தெரிந்த உடனேயே 5ரூ டெக்ஸ்ட்ரோஸ் ஏற்றினாலே குழந்தைகள் சுதாரித்துவிடும். இப்படிபட்ட சூழலில் ஒரு குழந்தைக்கு 10ரூ டெக்ஸ்ட்ரோஸ் ஏற்றினாலே அபாயக் கட்டத்தை அது தாண்டிவிடும். பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைகளுக்குக் கூட்டிவரும்போதே இவற்றைச் செலுத்தி உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றெல்லாம் இன்று சுட்டிக்காட்டப்படும் விஷயங்கள் எவ்வளவு மோசமான சூழலில் நம் சுகாதாரத் துறை இருக்கிறது எனும் அவலத்தையே வெளிப்படுத்துகிறது. மத்திய, மாநில சுகாதாரத் துறைகள் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டிய விஷயம் இது. இனி இப்படிப்பட்ட இறப்புகள் நேரக்கூடாது. ஏழைக்குழந்தைகள் மட்டுமல்ல ; அவர்களுடைய குடும்பத்தவரும் பட்டினியாக இருக்கும் நிலை இனி கூடாது. அதற்கான நடவடிக்கையை தற்போது அமைந்துள்ள புதிய அரசு எடுக்க வேண்டும்.
ஆரம்பத்தில் குழந்தைகளின் மரணத்துக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருந்ததும், கோடையின் தாக்கமும், ’ஹைபோகிளைசிமியா என்கிற திடீர் ரத்த சர்க்கரை அளவு குறைவும் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டன. குழந்தைகளின் மரணத்துக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஊட்டச்சத்து குறைவும், போதுமான அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாமல் இருப்பதும் குழந்தைகளின் மரணத்துக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் என்று அரசு இப்போது ஒப்புக்கொள்கிறது.
1995 முதல் தொடர்ந்து ஆண்டுதோறும் கோடைகாலத்தில் மூளை அழற்சி நோய் தாக்கி வந்திருக்கிறது. பீகார் மாநிலத்தில் முசாஃபர்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை ஆண்டுதோறும் இந்த நோய் பாதித்து வந்தும்கூட, இதை எதிர்கொள்ள நிர்வாகம் தயாராக இல்லாதது குறித்து அரசு மௌனம் சாதிக்கிறது.
2014-இல் முசாஃபர்பூர் மாவட்டத்தில் அடிப்படை மருத்துவ வசதிகள் மற்றம் சுகாதார நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஐந்து ஆண்டுகளாகியும் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை. மருத்துவர்களின் எண்ணிக்கை தேவையைவிட 25 சதவீதம் குறைவாகக் காணப்படுகிறது. செவிலியர், ஆயாக்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களின் நிலைமையும் அதேதான். தொழில்நுட்ப வசதிகள் மிகமிகக் குறைவு. இவையெல்லாம்தான் முசாஃபர்பூர் பாதிப்புக்கு மிக முக்கியமான காரணங்கள்.
முசாஃபர்பூர் மூளை அழற்சி நோய் பாதிப்பு குறித்து 2017-இல் இந்திய – அமெரிக்க மருத்துவக் குழு ஒன்று ஆய்வு செய்தது. லிச்சி பழங்களைச் சாப்பிட்ட ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள் இரவு உணவருந்தாமல் உறங்கினால் அடுத்த நாள் காலையில் மூளை அழற்சி நோய் பாதிப்புக்குள்ளாவதை அந்த மருத்துவர் குழுவும் உறுதி செய்தது. நோயின் அறிகுறி தெரியத் தொடங்கிய நான்கு மணி நேரத்துக்குள் 10ரூ டெக்ஸ்ட்ரோஸ் கொடுப்பதன் மூலம் 74ரூ குழந்தைகளைக் காப்பாற்ற முடியும் ; சாதாரண குறைந்த ரத்த சர்க்கரைக்கு 5ரூ டெக்ஸ்ட்ரோஸும், அதிக அளவிலான பாதிப்புக்கு 10ரூ டெக்ஸ்ட்ரோஸும் கொடுத்தால் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும் என்று 2014-இல் இன்னொரு ஆய்வுக் குழு உறுதிப்படுத்தியிருக்கிறது.
மூளை அழற்சி நோய்தான் குழந்தைகளின் மரணத்துக்கு காரணமென்றால், இந்த மிகவும் எளிமையான டெக்ஸ்ட்ரோஸ் மருத்துவத்தின் மூலம் பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்குமேயானால், ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்கும். அண்டை மாநிலமான உத்திரப்பிரதேசத்திலும் இதேபோன்ற பாதிப்பு காணப்பட்டது. அங்கே ’தய்டக் என்கிற திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியது. அத்திட்டத்தின்படி, ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி ஆரோக்கியம், ஊரக வளர்ச்சி, அடிப்படைக் கல்வி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, தடுப்பூசி போடுதல் உள்ளிட்டவற்றை உடனடியாக கவனிக்க வழிகோலப்பட்டது. அதனால் மூளை அழற்சி நோய் உள்ளிட்ட எந்தவொரு பிரச்சனையானாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதால், பெருமளவில் நோய்த்தொற்றுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. அதை பீகார் மாநில அரசு பின்பற்றாமல் போனதன் விளைவால்தான் 136 குழந்தைகளை இழப்புக்க எதிர்கொள்கிறது.