மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பிலிருந்து மாலி நீக்கம்

மாலியில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதைக் கண்டித்து, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து அந்த நாடு நீக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல்கள், கொரோனா தொற்று பரவல் உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இடைக்கால அரசின் அதிபராக பா டாவ், பிரதமராக மோக்டர் அவுனே ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்களைப் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வைத்து ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது. தலைவர்கள் இருவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். தற்போது இராணுவத் தளபதி அசிமி கொய்ட்டா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

மாலியில் நிலவும் அரசியல் சூழல் குறித்து மேற்கு ஆப்பிரிக்க பொருளாதாரக் கூட்டமைப்பு சார்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டமைப்பில் இருந்து மாலியை நீக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக அக்கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ’மாலியில் கடந்த செப்டம்பரில் 2020-இல் கையெழுத்தான ஒப்பந்தத்தை மீறி இராணுவம் செயல்பட்டுள்ளது. உடனடியாக புதிய பிரதமரை அந்த நாடு நியமிக்க வேண்டும். மாலியில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடைமுறைகள் தடையின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாலியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு அமைவதற்கு ஆப்பிரிக்க யூனியன், ஐ.நா., ஐரோப்பிய யூனியன் ஆகியவை தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.