குறைந்து வரும் நிலத்தடி நீரும் அவற்றின் பாதிப்புகளும்

குறைந்து வரும் நிலத்தடி நீரும் அவற்றின் பாதிப்புகளும்

குறைந்து வரும் நிலத்தடி நீரும் அவற்றின் பாதிப்புகளும்

நீரானது வாழ்வின் அமிர்தமாகும். இயற்கைக்கும் மனித இனத்திற்கும் மில்லியன் கணக்கில் பூமியில் வாழும் உயிரினங்களுக்கும் அளித்த கொடைகளில் இன்றியமையாதது நீர் ஆகும். நிலத்தடி நீர் பற்றி சமீப காலங்களில் வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. மத்திய நீர் வளத்துக்கான நிலைக்குழுவின் 23-ஆவது (2017-18) அறிக்கையானது, 2020-இல் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் போய்விடும் என்றும், இதனால் 10 கோடி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

பல நூற்றாண்டுகளாக ஆற்று நீரையும், குளத்து நீரையும் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்திய நாம், 1970-க்கு பின்னர், படிப்படியாக அனைத்துத் தேவைகளுக்கும் நிலத்தடி நீரைப் பெரும்பாலும் சார்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் உலகிலுள்ள நாடுகளில் அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது. நாசாவின் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவின் நிலத்தடி நீர் ஒவ்வோர் ஆண்டும் 0.3 மீட்டர் குறைந்துவருகிறது.

பசுமைப் புரட்சி தொடங்கிய பிறகு, வீரிய ரக விதைகள், ரசாயன உரங்களோடு நிலையான நீர்ப்பாசனமும் தேவைப்பட்டது. ஆழ்குழாய்க் கிணறு தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட அபரித வளர்ச்சியால், 1990-க்குப் பிறகு நிலத்தடி நீரின் உபயோகம் பன்மடங்காக அதிகரித்தது. பயிர்களுக்கான ஆதார விலை நிர்ணயத்தில் நீர்ப் பயன்பாட்டைக் கணக்கில் எடுக்காத காரணத்தால், அதிக நீர் தேவைப்படுகின்ற நெல், கோதுமை, கரும்பு, வாழை போன்ற பயிர்களின் சாகுபடி அதிகரித்தது. தோட்டப் பயிர்களான காய்கறிகள், பழங்கள் சாகுபடியிலும் 2000-01 க்குப் பிறகு நிலத்தடி நீர்த்தேவை மேலும் அதிகரித்தது. இந்தக் காரணங்களால், 1960-61 இல் 7.30 மில்லியன் ஹெக்டேர்களாக இருந்த நிலத்தடி நீர்ப்பாசனப் பரப்பளவு, 2016-17 இல் 71 மில்லியன் ஹெக்டேர்களாக அதிகரித்துவிட்டது. அதாவது, மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில் நிலத்தடி நீரின் பங்கு 29ரூ-லிருந்து 68ரூ-ஆக அதிகரித்துள்ளது.

விவசாயத் தேவைகள் மட்டுமல்லாமல், 1990-91 க்கு பிறகு ஏற்பட்ட அபரித நகர வளர்ச்சியாலும், புதிய பொருளாதாரக் கொள்கைகள் மூலமாக ஏற்பட்ட தொழில் வளர்ச்சியாலும் நீரின் தேவை பன்மடங்காக அதிகரித்துவிட்டது. இதே காலகட்டத்தில் மேற்பரப்பு நீராதாரங்களான அணைகள், குளங்கள் மூலமாகக் கிடைக்கும் நீரின் அளவில் பெரிய வளர்ச்சியில்லாத காரணத்தால், நிலத்தடி நீரை அனைத்துத் தேவைகளுக்கும் சார்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது.

மொத்த இந்திய விவசாய உற்பத்தியில், நிலத்தடி நீரின் பங்கு மட்டும் ஏறக்குறைய மூன்றில் இரண்டு மடங்காக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் தொழில் துறைப் பயன்பாட்டுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இருப்பதால், தொடர்ந்து அளவுக்கு அதிகமாக நீர் உறிஞ்சப்படுவதைத் தடுக்கக் கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும்.

இந்தியாவில் மொத்தமாகவுள்ள 6,584 வட்டங்களில், 32ரூ வட்டங்களில் நிலத்தடி நீர்ச் சுரண்டல் அளவுக்கு அதிகமாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது போன்ற பகுதிகளில் சொட்டு நீர்ப்பாசனம் மூலமாகப் பயிர் சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம் நிலத்தடி நீர்த் தேவையைக் குறைக்க  முடியும். விவசாயத்தில் மட்டுமல்லாமல், அனைத்துத் துறைகளிலும் நீர்த் தேவையைக் குறைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள நீர்வளங்கள்:

நிலத்தடி நீரை அதிகமாக உபயோகப்படுத்தும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. தமிழ்நாடு, இந்திய நிலப்பரப்பில் 4ரூ நிலப்பரப்பையும், இந்திய மக்கள்தொகையில் 6ரூ மக்கள்தொகையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு இந்தியாவின் மொத்த நீர்வளத்தில் 2.5ரூ நீர்வளத்தை மட்டுமே கொண்டுள்ளது. அதிலும் 95ரூ மேற்பரப்பு நீர்வளமும், 80ரூ நிலத்தடி நீரும் உபபோகப்படுத்தப்பட்டுவிட்டது. இத்தகைய நீர்வளங்கள் மனிதர்கள் / விலங்குகளின் பயன்பாட்டிற்கும், நீர் பாசனத்திற்கும், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டின் நீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு காரணம், அதிக அளவிலான மக்கள்தொகை பெருக்கமும், பொருளாதார வளர்ச்சியினால் ஏற்பட்ட தனிநபரின் நீர் தேவை அதிகரிப்புமே ஆகும். எப்படியிருப்பினும் ஒரு தனிநபருக்கு தேசிய சராசரி நீர்த்தேவையான 2,200 கனமீட்டரை விட குறைந்த அளவான 900 கனமீட்டர் நீர் அளவே தற்போது கிடைக்கிறது. தமிழ்நாட்டில் விவசாயத்திற்காகவே 75 சதவீத நீர் வளம் உபயோகப்படுத்தப்படுகிறது.

2010-2011 தரவின்படி, தமிழ்நாட்டின் சராசரி மழைப்பொழிவு 1165.10 மி.மீ ஆகும். அவற்றுள் 48 சதவீதம் வடகிழக்கு மழைப்பொழிவிலிருந்தும், 32 சதவீதம் தென்மேற்கு மழைப்பொழிவிலிருந்தும் மீதம் உள்ள 20 சதவீதம் கோடை மற்றும் குளிர்கால மழைப்பொழிவினாலும் பெறப்படுகின்றன. இதிலிருந்து தமிழ்நாட்டின் நீர்வளங்கள் முழுவதும் பருவநிலையை மட்டுமே நம்பி உள்ளன என்பது தெளிவாகிறது. எனவே, பருவநிலை பொய்க்கும் சமயத்தில் தமிழ்நாட்டில் நீர் பற்றாக்குறையும், தீவிரமான வறட்சியும் ஏற்படுகின்றன.

மேற்பரப்பு நீர்வளங்கள் :

தமிழ்நாட்டின் மொத்த நீர்வளம் 36 கி.மீ அல்லது 24864 மில்லியன் கனமீட்டர் ஆகும். 17 முதன்மையான ஆற்றுப்படுகைகளுடன் 61 நீர்த்தேக்கங்களுடன் மொத்தம் 41,948 தொட்டிகள் உள்ளன. மொத்த வருடாந்திர நீர்வளம் 46540 மில்லியன் கனமீட்டராகும் அதிலும் பாதி அளவிலேயே மேற்பரப்பில் உள்ளன. மேலும் அவற்றுள் விவசாயத்திற்கு அதிக அளவு நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான திட்டங்கள் மூலம் 24 லட்சம் ஹெக்டேர் நீர்பாசனங்கள் மேற்பரப்பு நீரால் செயல்படுத்தப்படுகின்றன.

நிலத்தடி நீர்வளம் :

மீள்நிரப்பக்கூடிய பயன்படும் நிலத்தடி நீர் 22,423 மில்லியன் கனமீட்டராகும். தற்போது பயன்படுத்தப்பட்டுவிட்ட நிகர நிலத்தடி நீர் 13.558 மில்லியன் கனமீட்டராகும். இது மொத்தமாக இருக்கக்கூடிய நீர்வளத்தில் 60ரூ ஆகும். மேலும் அடுத்த 5 வருடத்தில் நீர்வளமானது 35.6 சதவீதத்திலிருந்து 25.2 சதவீதமாக குறையக்கூடும். மிக அதிகமாக உறிஞ்சப்பட்ட நிலத்தடி நீர்வளப்பகுதிகள் மூன்று பங்கிற்கு மேலாக அழிந்துவிட்டது. மேலும் 8 பகுதிகள் ஏற்கனவே உப்புத்தன்மையை பெற்றுவிட்டன.

தற்போது கிடைக்கப்பெறும் நீர்வள தரவுகளின்படி சராசரி கிணற்று நீரின் அளவு புதுக்கோட்டை மாவட்டத்தில் 0.93 மீட்டரும், ஈரோடு மாவட்டத்தில் 43.43 மீட்டருமாக வேறுபடுகின்றன. மேலும் மத்திய நிலத்தடி நீர் வாரியம், 2003-இல் இருந்த நிலத்தடி நீரை விட தற்போது நீர்மட்டம் மிகவும் குறைந்து வருவதால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிணற்று நீர்பாசனம் பொய்த்து வருகிறது என குறிப்பிடுகிறது.

தமிழகத்தில் 5 ஆண்டுகளாக தொடர் வறட்சி, மணல் கொள்ளை, ஆகியவற்றால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் கடந்த 7 ஆண்டுகளில் 10 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. ஒவ்வொரு துளி மழை நீரையும் வீணடிக்காமல் வாய்க்கால்கள் மூலமாகக் குளங்களில் சேமித்து, நிலத்தடி நீர்ச் சுரப்பை அதிகரிக்க வேண்டும். மழை நீர்ச் சேமிப்புத் திட்டத்தை ஒவ்வொரு வீட்டிலும் அமல்படுத்த வேண்டும். பயிர்களின் நீர்ப் பயன்பாட்டைக் கருத்தில் கொள்ளாமல் தற்போது பயிர்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படுகிறது. நீர்ச் சுரண்டலைத் தடுக்க, குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களுக்கு அதிகவிலை அறிவிக்க வேண்டும்.