தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

– வீ.வீ.கே. சுப்புராஜ்

நவம்பர் 12, 2019 அன்று அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையின் கீழ் அமர்த்தப்பட்ட அரசியல் சாசன அமர்வு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. உச்சநீதிமன்ற நீதிபதியின் அலுவலக செயல்பாடுகளை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கொண்டு வரலாம் என்று தீர்ப்பு வழங்கியது. 2010-இல் டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பினை இந்தத்தீர்ப்பு உறுதி செய்தது. டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்ற மத்திய பொது தகவல் அதிகாரி மற்றும் பொது செயலர் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

1997-இல் நடைமுறைக்கு வந்த ஒரு தீர்மானத்தின்படி, அகர்வால் என்பவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களுடைய சொத்து விவரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்துவிட்டார்களா என அறிய மத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத் தலைமை ஆணையரிடம் மனு செய்தார். ஆணையர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அது வெளியிடப்பட வேண்டும் என்று தீர்மானித்தார். இது டெல்லி உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது. டெல்லி உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை 13, ஜனவரி 2010-இல் வழங்கியது.

உச்சநீதிமன்றமே உச்சநீதிமன்றத்தில் உச்சநீதிமன்றம் சார்பாக மேல் முறையீடு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதை அரசியல் சாசன அமர்வுதான் விசாரிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. சாசன அமர்வு அமைப்பதில் மிகத் தாமதம் ஏற்பட்டதால், இது சம்பந்தமாகவும் RTI-இன் கீழ் அகர்வால் ஓர் மனு செய்தார். அதன்பின் ஜூன் 2, 2011 அன்று, உச்சநீதிமன்றம், சாசன அமர்வு அமைப்பதற்கு செய்ய வேண்டிய நடைமுறைகளை எடுத்துள்ளது என அறிவித்தது. இந்த சாசன அமர்வின் அமைப்பு,

K.G. பாலகிருஷ்ணன், S.H. கபாடியா, அல்டாமஸ் கபீர், சதாசிவம், R.M. லோதா, H.L. தத்து,

T.S. தாக்கூர், J.S. கேகர் மற்றும் தீபக்மிஸ்ரா முதலியோர் தலைமை நீதிபதிகளாக பதவிவகித்த காலங்களைக் கடந்து ரஞ்சன் கோகாய் தலைமையில் 2018-ஆம் ஆண்டு அமர்த்தப்பட்டது. இந்த அமர்வு விசாரணையை முடித்து தனது தீர்ப்பை மார்ச் 4, 2019 அன்று ஒத்தி வைத்தது.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கினாலும், இரு வேறு தீர்ப்புகளாக வழங்கப்பட்டன. தகவல் அறியும் சட்டத்தை நீதிபதிகளை வேவு பார்க்கும் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. நீதிச் சுதந்திரம் என்பதை கேள்விக்குள்ளாக்க முடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. அதே சமயம் நீதித்துறை என்பது தனிப்படுத்தப்பட்ட துறை அல்ல என்பதையும் கூறியது. நீதிபதிகள் அரசியல் சாசனத்தால் ஏற்படுத்தப்பட்டவர்கள் என்றாலும் அவர்கள் பொதுச் சேவை செய்பவர்களே எனவும் கூறியது.

இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தகவல் அறியும் உரிமைச்சட்டம் பிரிவு 2(க) என்ற பிரிவின்கீழ் உச்சநீதிமன்றத்தின் பதிவுகள், ஆவணங்கள், மெமோக்கள், மின்னஞ்சல்கள், கருத்துகள், செய்தி வெளியீடுகள், சுற்றறிக்கைகள், ஆணைகள், குறிப்பேடுகள், ஒப்பந்தங்கள், மாதிரிகள், மின்னியலாக மாற்றப்பட்ட அனைத்து விபரங்களும் இனி சுகூஐ சட்டத்தின் கீழ் அறியப்படலாம்.

தலைமை அமைச்சர் மற்றும் குடியரசுத்தலைவர் அலுவலகங்களும் பொது அதிகாரத்தின் கீழ் வருவதால், அவைகளும் சுகூஐ-க்குக் கீழ் வரும். ஆனால் தகவல்களை சேகரிக்கவே 75 சதவீதப் பணியாளர்கள் தங்களது 75 சதவீத நேரத்தை செலவிட வேண்டி உள்ளது. எனவே பல சமயங்களில் தகவல்கள் கேட்பவர்களுக்கு சென்றடைவதில்லை.

மத்தியப் புலனாய்வுப் பிரிவு (ஊக்ஷஐ) சுகூஐ சட்டத்திற்கு அப்பாற்பட்டே இன்றும் உள்ளது. இது சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், நீதிபதிகளின் மாறுதல்கள், பணி உயர்வு முதலியவற்றை கொலிஜியம் நிர்ணயம் செய்தாலும், அவற்றில் வெளிப்படைத் தன்மை இல்லை.

நீதிபதிகளின் தன்மறைப்பு நிலையையும், நீதித்துறையின் சுதந்திரத்தையும் கருத்தில் கொண்டு தகவல் ஆணையர்கள் தகவல் பெறும் உரிமை மனுக்களைத் தீர்மானிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. குழப்பமான இந்த வழக்கை விசாரிக்காமலேயே உச்சநீதிமன்றத்தின் ஒன்பது தலைமை நீதிபதிகள் பணி ஓய்வு பெற்றிருக்கிறார்கள்.

இன்னொரு சிறப்பு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் முடிவுகளை ஆட்சியாளர்கள் எடுத்துக் கொண்டிருக்கும்போது உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அந்தச் சட்டத்துக்கும் தகவல் ஆணையத்துக்கும் வலு சேர்த்திருக்கிறது. உச்சநீதிமன்றமே தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்துவிட்டது. பொதுமக்களின் நன்கொடையில் இயங்கும் அரசியல் கட்சிகள், தகவல் பெறும் உரிமைச் சட்ட வரம்புக்குள் வரவேண்டும்.