சென்னை புத்தகக் காட்சி இன்று தொடங்குகிறது… கோடிக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் 43-வது புத்தக காட்சி சென்னையில் இன்று தொடங்குகிறது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புத்தக காட்சியை துவங்கி வைக்கிறார்.

750-க்கும் மேற்பட்ட அரங்குகளில் கோடிக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதால் அதனை வாங்கிச்செல்ல அடுத்த 10 நாட்களில் லட்சகணக்கில் புத்தக வாசிப்பாளர்கள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

43-வது ஆண்டு

சென்னையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக பிரம்மாண்ட முறையில் புத்தகக் காட்சி நடத்தப்படுவது வழக்கம். 43 ஆண்டுகளாக இந்த புத்தக காட்சி நடைபெற்றாலும் கடந்த 10 ஆண்டுகளில் தான் இந்த புத்தக் காட்சி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

750 அரங்குகள்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் அமைக்கப்பட்டுள்ள புத்தகக் காட்சியில் 750-க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன. அதில் கிடைக்காத தலைப்புகளே இல்லை என்கிற வகையில் கோடிக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புத்தகக் காட்சி நடைபெறும் 10 நாட்களுக்கும் அதிரடி சலுகை விலையில் புத்தகங்கள் விற்கபடுகின்றன.

தொடக்க விழா

இன்று மாலை நடைபெறும் புத்தகக் காட்சி தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், மாஃபாய் பாண்டியராஜன், உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். தினமும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது.


21-ம் தேதி

43-வது சென்னை புத்தகக் காட்சியின் நிறைவு விழா வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சிறந்த அரங்குகள் உள்ளிட்ட புத்தக பதிப்பாளர்களுக்கு விருது வழங்குகிறார்.