அடல் பூஜல் யோஜனா (or) அடல் ஜல் (Atal Bhujal Yojana or Atal Jal)

அடல் பூஜல் யோஜனா (or) அடல் ஜல் (Atal Bhujal Yojana or Atal Jal)

– வீ.வீ.கே. சுப்புராஜ்

இந்தியாவில் நிலத்தடி நீர் இருப்பை மேம்படுத்த ஆரம்பிக்கப்பட்ட திட்டம் ’அடல் பூஜல் யோஜனா இது உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டம். உலக வங்கி இதற்கு

2018-இல் ஒப்புதல் அளித்தது. 2015-லேயே இதற்கான யோசனை முன்னெடுக்கப்பட்டு 2016-17 நிதிநிலை அறிக்கையில், நிலத்தடி நீர் மேம்பாட்டிற்காக ‘ 6000 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்தியா உலக மக்கள்தொகையில் 16 சதவீதத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால் நிலப்பரப்போ 2.5 சதவீதம்தான். 4 சதவீத நீர்வளத்தைக் கொண்டுள்ளது. வருடத்திற்கு 1999 பில்லியன் கனமீட்டர் நீர் (BCM) இந்திய ஆறுகளில் பாய்கிறது. அதில் 1122 BCM நீர் உபயோகிக்கப்படுகிறது. 690 BCM மேற்பரப்பு நீர், 432 BCM நிலத்தடி நீர். வேகமாக உயர்ந்துவரும் ஜனத்தொகையால் தற்போதைய தனிநபர் நீர் உபயோகமாகவுள்ள 1434 கனமீட்டர் நீரின் தேவை 2050-இல் 1219-ஆகக் குறைந்துவிடும்.

மத்திய நீர்வள அமைப்பின் (Central Water Commission) குறியீட்டின்படி தனிநபரின் உபயோகம் 1700 கனமீட்டருக்கு கீழ் குறைந்துவிட்டாலே, தண்ணீர் பற்றாக்குறை என்ற நிலை வந்துவிடும். ஆனால் இது 1000 கனமீட்டருக்குக் கீழ் இப்போதே சில பகுதிகளில் உள்ளது. பிரம்மபுத்திரா, கங்கை போன்ற வற்றா நதிகளைத்தவிர மற்ற அனைத்து நதிகளின் படுகைகளும் நீர்தட்டுப்பாட்டை இப்போதே உணர்கின்றன. அதுவும் தென்னிந்திய நதிகளான காவேரி, பெண்ணார் படுகைகள் மிக மோசமாக உள்ளன.

CWC – இன் 2019 அறிக்கையின்படி, இந்தியாவில் புதுப்பிக்கப்படக்கூடிய நிலத்தடி நீரின் அளவு ஆண்டிற்கு 432 BCM என்ற அளவில் உள்ளது. அதில் 393 BCM அளவு உபயோகிக்கப்படுகிறது. 15 மாநிலங்கள் 90 சதவீத அளவிற்கு உபயோகிக்கின்றன. மற்ற மாநிலங்களான உத்தரப்பிரதேசம்-16.2%, மத்தியப்பிரதேசம்-8.4%, மகாராஷ்டிரா-7.3%, பீகார்-7.3%, மேற்குவங்கம்-6.8%, அஸ்ஸாம்-6.6%, பஞ்சாப்-5.5%, குஜராத்-5.2% என்ற அளவில் உபயோகிக்கின்றன.

249 BCM நிலத்தடி நீர் உபயோகத்தில் தற்போது, மிகஅதிகமான நீர் நெல் மற்றும் கரும்பு சாகுபடிகளுக்குத்தான் உபயோகப்படுத்தப்படுகின்றது. எனவே மாற்றுப் பயிர் பயிரிடுவதை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். 2009-18 இடைப்பட்ட இருபது ஆண்டுகளில் கிணற்று நீர் 61% என்ற அளவில் பத்தாண்டுகளுக்கொருமுறை குறைந்துள்ளது. இது கர்நாடகா-80%, மகாராஷ்டிரா-75%, உத்தரப்பிரதேசம்-73%, ஆந்திரப்பிரதேசம்-73%, பஞ்சாப்-69% என்ற அளவில் குறைந்துள்ளது.

மத்திய நிலத்தடி நீர் மேலாண்மை வாரியம் (CGWB), இந்திய மாநிலங்களை மண்டல வாரியாகப் பிரித்து நிலத்தடி நீரின் அளவை அறிவித்துள்ளது. அதன்படி, பாதுகாப்பான, மோசமான (Semi–Critical), மிக மோசமான என்று மண்டலங்களைப் பிரித்துள்ளது. அதன்படி 2017-இல் ஆபத்தான மண்டலங்களாக 1186 உருவாகியுள்ளன. அவை 2004-இல் 839 ஆகத்தான் இருந்தது. இது 60 சதவீத மோசமான வளர்ச்சி ஆகும். டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்கள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளன. நாட்டில் 14 சதவீத அளவு பாதி ஆபத்தான நிலையிலும், 5 சதவீதம் ஆபத்தான நிலையிலும், 17 சதவீதம் மிகமிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலும் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அடல் பூஜல் யோஜனா முதலில் குஜராத், ஹரியானா, கர்நாடகம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும். தமிழ்நாட்டையும் இதில் சேர்க்க தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 7 மாநிலங்களில் 78 மாவட்டங்களில், 8350 கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே ஆரம்பத்தில் நன்மைபெறும் இந்தத்திட்டம் மற்ற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

இந்தத்திட்டத்தின்படி, நிலத்தடிநீர் மேலாண்மை சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்தத்திட்டத்தை சீரான முறையில் செயல்படுத்தும் மாவட்டங்கள் அதிக நிதியைப்பெறும். 6000 கோடி ரூபாயில், 3000 கோடி ரூபாய் உலக வங்கி நிதி, மீதித்தொகையை மத்திய அரசு மாநிலங்களுக்கு மானியமாக வழங்கும்.

நாட்டில் கணக்கிடப்பட்ட மொத்த கிணறுகளின் எண்ணிக்கை : 13,628

நிலத்தடி நீர் குறைவாக காணப்படும் கிணறுகளின் எண்ணிக்கை        : 8,357 (61%)

நிலத்தடி நீர் அதிகமாக காணப்படும் கிணறுகளின் எண்ணிக்கை        : 5,113 (38%)

நிலத்தடி நீரின் அளவில் மாற்றம் இல்லாத கிணறுகளின் எண்ணிக்கை : 158 (1%)